valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 7 August 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

13. பிணி தீர்த்த பெம்மான்

வெளிப்படும் பேச்சு சூத்திரங்களை போன்றது; அர்த்தமோ மிகவும் கம்பீரமானது; வெகு விஸ்தீரணமான வியாபகமுள்ளது; இருப்பினும் பேச்சு சுருக்கமானது;- 

பாபாவினுடைய திருவாய் மொழி இத்தகையதே; அர்த்தத்திலும் தத்துவத்திலும் மிகவும் ஆழமானது; சமசீரானது; விலைமதிப்பற்றது; காலத்தின் எல்லைவரை அர்த்தமுள்ளது. வீண் போகாதது. 

"ஏற்கனவே என்ன நடந்ததோ, என்ன நடக்கப் போகிறதோ, அதற்கேற்றவாறு வாழ்க்கை நடத்து! எது பிராப்தமென்று விதிக்கப் பட்டிருக்கிறதோ, அதை அறிந்து கொண்டு நட! எப்பொழுதும் திருப்தியுள்ளவனாக இரு! சஞ்சலத்திற்கோ  கவலைக்கோ எப்பொழுதும்  இடம் கொடுக்காதே! -

"கவனி ! வீடு, குடும்பம் போன்ற தளைகளில் மாட்டிக்கொள்ளாமல் தொந்தரவுகளிலிருந்து முழுமையாக விடுபட்டு, வாழ்க்கையின் தொல்லைகளையும் சலிப்புகளையும் அறவே தியாகம் செய்துவிட்டு ஒரு பக்கீராக நான் அமைதியாக ஒரேயிடத்தில் உட்கார்ந்திருக்கும் போதே, -

"எதற்கும் அடங்காத மாயை என்னை விடாது துன்புறுத்துகிறது. நான் அவளை உதறிவிட்டாலும், அவள் என்னை உதறாது என்னுடன் நிரந்தரமாக ஒட்டிகொள்கிறாள்!-

"அவள் ஸ்ரீஹரியின் ஆதிமாயை; பிரம்மவாதி தேவர்களையே நிலை தடுமாறுமாறு  செய்திருக்கிறாள்! இந்நிலையில் அவள் முன்னிலையில் இந்த பலவீனமான பக்கீரின் கதி என்னவாக இருக்க முடியும்?

"ஸ்ரீ ஹரியே விருப்பப்படும்போதுதான் மாயை ஒழியும். இடைவிடாத ஹரிபஜனையின்றி மாயையிலிருந்து விடுதலை கிடைக்காது."

பாபா, பக்தர்களுக்கு விளக்கம் செய்த மாயையின் மகிமை இதுவே. மாயையின் பிடியிலிருந்து நிவிர்த்தி பெறுவதற்கு, இறைவனுடைய பெருமைகளை பாடும் சேவையையே பாபா பரிந்துரை செய்தார். 

"ஞானிகள் என்னுடைய உயிருள்ள உருவங்கள்" என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே பாகவத்தில் கூறியிருக்கிறார். ஸ்ரீ ஹரியால் உத்தவருக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்ட இவ்வார்த்தைகளை அறியாதவர் யார்? 


Thursday, 31 July 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

அவர்கள் இகத்திலும் இல்லை; பரத்திலும் இல்லை. ஒரு கணமும் நிம்மதியோ சாந்தியோ இன்றி, சஞ்சலங்களிலும் கவலைகளிலும் ஜன்மம் முழுவதும் மூழ்கிப் போகின்றனர். இவ்வாறு இருந்த போதிலும் முக்தியடைந்து கொண்டிருப்பதாக தம்பட்ட மடிக்கின்றனர். 

அடுத்த அத்தியாயம் இந்த அத்தியாயத்தை விட சுவாரஸ்யமானது. சாயி தரிசனம் மேலும் மேலும் செய்யச் செய்ய, எல்லையில்லாத ஆனந்த அனுபவத்தை அளிக்கும். 

பக்தர் பீமாஜி பாடீல் எவ்வாறு க்ஷய ரோகத்திலிருந்து நிவாரண ளிக்கப் பட்டார் என்பதையும் அவருக்குச் சாந்தோர்கரிடம் இருந்த நம்பிக்கையை ஒரு காட்சியளித்து எவ்வாறு பாபா உறுதிப் படுத்தினார் என்பதையும் விவரிக்கிறேன். 

சாயி தரிசனம் நம்முடைய பாவங்களையும் நிவிர்த்தி செய்து, இவ்வுலக சுகங்களையும் மேலுலக சுகங்களையும் சமிருத்தியாக அளிக்கும் சக்தி வாய்ந்தது. 

மகா யோகிகளால் கண்வீச்சாலேயே  நாஸ்திகர்களையும் பாவத்தில் இருந்து விடுதலை செய்ய முடியுமென்றால், ஆஸ்திகருடைய நிலை என்ன? அவர்களுடைய பாவம் மிக சுலபமாக அளிக்கப்படுகிறதன்றோ?  

பிரம்ம சாக்ஷாத்காரம் பெற்று பிரம்மத்திலேயே லயித்த மனமுடைய மகாத்மா, தம்முடைய கண்நோக்காலேயே கடக்க முடியாத கொடிய பாவங்களையும் அழித்து விடுகிறார். 

பாபாவினுடைய புரிந்து கொள்ள முடியாத லீலைகள் இவ்வாறே. பாபாவுக்கு உங்கள் மீது அன்பு இருக்கிறது. ஆகவே, பண்டிதராயினும் சரி, பாமரராயினும் சரி, நீங்களனைவரும் பாபாவினுடைய காதைகளை நிர்மலமான இதயத்துடன் கேளுங்கள். 

எங்கே பக்தியும் பிரேமையும் இருக்கிறதோ, எங்கே பாபாவின்   
மீது பிரியமான ஈர்ப்பு இருக்கிறதோ, அங்கேதான் உண்மையான தாகம் உருவெடுக்கிறது. அங்கேதான் அவருடைய காதைகளைக் கேட்கும் தூய மகிழ்ச்சியை பார்க்க முடியும். 

அனன்னியமாக சரணடைந்தவர்களுக்கு வஜ்ஜிரம் போன்ற அடைக்கலமும் அளவற்ற சக்தியை உடையதுமான சாயியின் திருவடிகளில் ஹெமாத் நமஸ்காரம் செய்கின்றேன். இவ்வுலக வாழ்க்கையின் பயங்களை அறவே ஒழிக்கும் சக்தியுடையவை சாயியின் பொன்னடிகள். 

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு,  சாயி பக்தன் ஹேமாட்பந்தால் இயற்றப் பட்ட, ' ஸ்ரீ சமர்த்த சாயி சத்சரிதம்' என்னும் காவியத்தில், 'குரு கோலப் தரிசனம் - ஸ்ரீராம தரிசனம்' என்னும் பன்னிரண்டாவது அத்தியாயம் முற்றும். 

ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். 

சுபம் உண்டாகட்டும். 

Thursday, 24 July 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

மூன்தூர் நாள்கள் கழிந்தன; நான்காது நாள் பொழுது விடிந்தது. என்ன நடந்தது என்பதைக் கவனமாகக் கேளுங்கள். 

கான்தேச் என்னுமிடத்தில் குடியேறிவிட்ட அவருடைய நண்பரொருவர் தற்செயலாக சாயி தரிசனத்துக்காக ஷீரடிக்கு வந்தார். 

ஒன்பது வருடங்களுக்கு பிறகு அவரை சந்தித்த டாக்டரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே! டாக்டரும் நண்பருடன் மசூதிக்கு சென்றார்; 

போனவுடனே, டாக்டர் பாபாவுக்கு நமஸ்காரம் செய்தார். பாபா கேட்டார். "ஆக, டாக்டரே! உம்மைக் கூப்பிட யாராவது வந்தார்களா? முதலில் எனக்குச் சொல்லும்; ஏன் வந்தீர் இங்கு?"

பாணம் போன்ற இந்தக் கேள்வியை கேட்டு டாக்டர் உணர்ச்சிவசப் பட்டார். அவருடைய  சங்கல்பம் ஞாபகத்திற்கு வந்து, குற்றவுணர்ச் சியால் சோகமாடைந்தார். 

ஆனால், அன்றே நள்ளிரவில் பாபாவினுடைய   அருள் அவர் மீது பொழிந்தது. தூக்கத்திலேயே பரமாந்தமான நிலையின் மதுரத்தை அனுபவித்தார். 

பிறகு, டாக்டர் தம்முடைய சொந்தக் கிராமத்திற்குத் திரும்பிச் சென்றாராயினும், அடுத்த பதினைந்து நாள்களுக்கு பரிபூரணமான ஆத்மானந்தத்தை அனுபவித்தார். சாயியின் மீது அவருடைய பக்தி வளர்ந்தது. 

ஒன்றை விட இன்னொன்று அதிக அற்புதமானதாக இம்மாதிரியான சாயி அனுபவங்கள் எத்தனை எத்தனையோ! அவையனைத்தும் இக்காவியத்துக்கு மென்மேலும் பெருமை சேர்க்கு மெனினும், விரிவுக் கஞ்சி என்னையே நான் கட்டுபடுத்திக் கொள்கிறேன். 

செவி மடுப்பவர்கள் இவ்வத்தியாயத்தின் முக்கிய பகுதியான முலே சாஸ்திரியின்   காதையைக் கேட்டு வியப்படைந்திருக்க வேண்டும். அதனுடைய சாரத்தை, அக்காதை சொல்லும் படிப்பினையை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். 

"ஒருவருடைய குரு எவராக இருந்தாலும் அவர்   மீது திடமான விசுவாசம் வைக்க வேண்டும். வேறெங்கிலும் அவ்விசுவாசத்தை வைக்கலாகாது. " இதுதான் இக்காதையில் மறைந்திருக்கும் பொருள்; இதை மனதில் பதிக்க வேண்டும். 

இந்த அற்புதமான லீலைக்கு வேறு நோக்கமேதும் இருப்பதாக தெரியவில்லை. மற்றவர்கள் இதை எப்படிப் புரிந்து கொண்டாலும் சரி, இதுவே இக்காதையின் படிப்பினை. 

மற்ற குருமார்களுடைய கீர்த்தி மிகப் பெரியதாக இருக்கலாம். நம் குருவுக்கு அத்தகைய கீர்த்தி எதுமில்லாதிருக்கலாம். ஆயினும், நம்முடைய முழு விசுவாசமும் நம் குருவின் மேல்தான் இருக்க வேண்டும். இதுவே இக்காதையின் உபதேசம். 

எத்தனை இதிகாசங்களையும் புராணங்களையும் புரட்டினாலும் தத்துவ உபதேசத்தை பொறுத்தவரை அவையனைத்தும் ஒன்றே. இவ்வனுபவதைப் போல நேரிடையான நிரூபணம் கிடைக்காதவரை, விசுவாசம் எளிதாக ஏற்படுவதில்லை. 

உறுதியான விசுவாசமில்லாமல், 'நான் ஆத்ம நிஷ்டன்" (தன்னையறிந்தவன்) என்று பீத்துபவர்கள் வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தையே அனுபவிக்கிறார்கள். இதைத் திரும்ப திரும்பப் பலமுறைகள் பார்த்தாகிவிட்டது. 

Thursday, 17 July 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

"எனக்கு நமஸ்காரம் செய், என்று பாபா நிச்சயமாகச் சொல்ல மாட்டார்" மாம்லதார் இவ்விதமாக உறுதிமொழி அளித்தபின், டாக்டர் ஷிர்டி செல்வதற்கு சம்மதம் தெரிவித்தார். 

தம் நண்பரின் உறுதிமொழிக்கு கட்டுப்பட்டு, சந்தேகங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு பாபாவை தரிசனம் செய்வதற்கு செல்வதென்று டாக்டர் முடிவெடுத்தார். 

அதிசயத்திலும் அதிசயம்! ஷிர்டியை அடைந்து மசூதிக்கு சென்றவுடனே முதன்முதலில் டாக்டர்தான் பாபாவுக்கு நமஸ்காரம் செய்தார்! நண்பரோ பெருவியப்படைந்தார். 

மாம்லத்தார் டாக்டரை கேட்டார், "உம்முடைய திடமான தீர்மானத்தை எப்படி மறந்தீர்? ஒரு முஸ்லீமின் பாதங்களில் எவ்வாறு பணிந்தீர்? அதுவும் என் முன்னிலையிலேயே?"

அப்பொழுது டாக்டர் தம்முடைய அற்புதமான அனுபவத்தை விவரித்தார். "நான் கண்டது நீலமேக சியாமள ரூபனான ஸ்ரீ ராமனின் உருவத்தையே! அக்கணமே நான், நிர்மலமானவரும் சுந்தரமானவரும் கோமள ரூபமுடையவருமுமான ஸ்ரீ ராமரை வணங்கினேன்.- 

"பாருங்கள், ஸ்ரீ ராமர் இந்த ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர்தான் எல்லாரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்" டாக்டர் இந்த வார்த்தைகளை சொல்லிகொண்டிருந்தபோதே, ஒரு கணத்தில், ஸ்ரீ ராமருக்கு பதிலாக சாயியின் உருவத்தை பார்க்க ஆரம்பித்தார். 

இதைப் பார்த்த டாக்டர் வியப்பிலாழ்ந்து போனார்! "இதை எப்படி நான் கனவென்று சொல்ல முடியும்? இவர் எப்படி  ஒரு முஸ்லீமாக இருக்க முடியும்? இல்லவே இல்லை! இவர் மகா யோகீஸ்வரனான அவதார புருஷர்."

சோகமேளா என்ற மகா ஞானி ஜாதியில் மகார (ஆதி திராவிடர்). ரோஹிதாஸ் என்ற ஞானி செருப்பு தைக்கும் தொழிலாளி. சஜன் கசாய் என்ற ஞானி பிழைப்புக்காகக் கசாப்புக்கடை நடத்தினார். ஆனால், யார் இந்த ஞானிகளின் ஜாதியைப் பற்றி சிந்திக்கின்றனர்?

உலக ஷேமதிற்காகவும் பக்தர்களை ஜனன மரணச் சுழலிருந்து விடுவிப்பதர்காக்கவுமே உருவமும் குணங்களுமற்ற தங்களுடைய நிலையை விடுத்து, ஞானிகள் இவ்வுலகிற்கு வருகிறார்கள். 

இந்த சாயி பிரத்யக்ஷமான கற்பக விருக்ஷமாகும்; நாம் விரும்பியதை தரும் தேவ லோக மரம்! இந்தக் கணத்தில் அவர் சாயியாக இருக்கிறார்; அடுத்த கணமே அவர் ஸ்ரீ ராமராக மாறிவிடுகிறார்! என்னுடைய அஹந்தையாகிய பிரமையை ஒழித்து  என்னை தண்ட நமஸ்காரம் செய்ய வைத்து விட்டார். 

அடுத்த நாளே அவர், பாபா தமக்கு அருள் புரியவில்லையெனில் மசூதிக்குள் நுழைவதில்லை என்ற விரதம் எடுத்துக் கொண்டார்; ஷீரடியில் உண்ணா விரதம் மேற்கொண்டார். 



Thursday, 10 July 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

பாபாவினுடைய ஆனந்தமான உருவத்தையும் அற்புதமான சக்தியையும் கண்டார். அவருடைய மனம் ஸ்தம்பித்து நின்றது. பாபாவை தாம் முதலில் அணுகிய முறையை கைவிட்டு விட்டார். 

பாபாவினுடைய அற்புதமான லீலையைப் பார்த்தவுடன், பசி, தாஹம் அனைத்தும் மறந்து போயின! தம் குருவின் தரிசனம் கிடைத்த பரவசத்தில் மூழ்கியிருந்தார். 

அவருடைய மனம் சமாதனமடைந்தது. கண்களில் ஆனந்த பாஷ்பம் பொங்க பாபாவினுடைய திருவடிகளில் நெற்றியை வைத்து வணங்கினார். 

அவர் கொண்டு வந்திருந்த தட்சிணையை பாபாவுக்கு சமர்ப்பணம் செய்தார். கண்களில் நீர் பொங்க, சந்தோஷத்தில் மயிர்க் கூச்செறிய மறுபடியும் பாபாவின் பாதங்களை வணங்கினார். 

தொண்டை அடைத்தது. "என்னுடைய சந்தேகங்களெல்லாம் நிவிர்த்தியானது மட்டுமல்லாமல், என்னுடைய குருவையும் சந்தித்து விட்டேன்" என்று அவர் கூறியபோது அஷ்டபாவம் இதயத்தை அடைத்தது. 

முலே சாஸ்த்ரி உட்பட அங்கிருந்தவர்களைனவரும் உலகில் பார்த்தறியாத இந்த பாபாவின் லீலையை கண்டு பயம் கலந்த அன்புடன் உணர்ச்சிவசப்படனர். இந்த அனுபவத்தை அடைந்த பிறகுதான் அவர்களுக்கு காவிசாயத்தின் மர்மம் விளங்கியது.!

சாயி மகாராஜ் பழையவர்தான். முலே சாஸ்திரியும் அதே நபர்தான். இவ்வாறிருக்க, குறிப்பிட்ட நேரத்தில் முலே சாஸ்திரியிடம் எதிர்பாராத மாற்றம் எப்படி ஏற்பட்டது என்றே அனைவரும் வியந்தனர். ஆனால், யாரால் மஹராஜின் சூக்குமமான வழிமுறைகளை புரிந்து கொள்ள முடியும்? அவருடைய லீலைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை அல்லவோ!

சாயி தரிசனம் செய்ய வேண்டுமென்ற ஆவலுடன் ஒரு டாக்டர் நண்பருடன் ஷீரடிக்கு கிளம்பிய மாம்லதாருடைய அனுபவமும் இது போன்றே  அற்புதமானது. 

அந்த டாக்டர் ஒரு பிராமணர்; ஸ்ரீ ராமரை உபாசனை செய்தவர். நியம நிஷ்டையுடன் ஸ்நானம், சந்தியாவந்தனம், விரதங்கள் போன்ற சடங்குகளை எல்லாம் சாஸ்திர விதிகளின்படி நெறி தவறாது செய்தவர். 

சாயி பாபா ஒரு முஸ்லீம்; டாக்டருக்கு இஷ்ட தேவதையோ ஜானகி ராமன். ஆகவே அவர், தாம் சாயிபாபாவை வணங்க மாட்டார் என்பதைத் தம் நண்பருக்கு முதலிலேயே எச்சரித்துவிட்டார். 

"நான் ஒரு முஸ்லீமின் பாதங்களை வணங்க முடியாது; ஆகவே, ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஷிர்டி செல்வதில் விருப்பம் இல்லை" (என்று டாக்டர் சொன்னார்).

"உம்மை அங்கு யாரும் அவருடைய பாதங்களை தொடச் சொல்லி வற்புறுத்த மாட்டார்கள். இது விஷயமாக யாருமே துராகிரஹம் (உரிமை இல்லாவிடத்து வலிய நிகழ்த்தும் செயல்) செய்ய மாட்டார்கள். இம்மாதிரியான சிந்தனைகளை உதறிவிட்டு ஷிரிடிக்கு போவதற்கு முடிவெடுங்கள்.- 


Thursday, 3 July 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

பிறகு, அவர் மசூதியின் படிகளில் ஏறித் தம் குருவின் (கோலப் நாத்) பாதங்களிலேயே வணங்கிவிட்டு, இரு கைகளையும் கூப்பிக் கொண்டு பேச்சற்று மௌனமாக நின்றார். 

குரு கோலப் சுவாமியை சந்நியாசிகளின் காவி உடையில் பார்த்தவுடனே, முலே சாஸ்திரி ஓடிச் சென்று அவருடைய பாதங்களை கட்டிக் கொண்டார். 

ஒரே கணத்தில் அவருடைய ஜாதி அபிமானம் ஒடிந்து வீழ்ந்தது. குருவை நேரில் கண்டதால் ஞானமென்னும் மையைப் பூசிக் கொண்டு அவருடைய கண்கள் பரிசுத்தமாயின. நிரஞ்சனரான (மாசில்லாத) குருவை கண்டவுடன் அவருடைய ஆத்மா ஞானத்தால் நிரம்பி வழிந்தது. 

கோணல் சிந்தனைகளும் சந்தேகங்களும் ஒழிந்தன; பாபாவின் மேல் அன்பு பீறிட்டது. பாதி மூடிய கண்களால் பாபாவினுடைய திருவடிகளையே உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றார். 

பல ஜன்மங்களில் செய்த நற்செய்கைகள் பழுத்து, அவருக்கு சாயி தரிசனம் கிடைத்தது. சாயிபாதம் என்னும் புண்ணிய தீர்த்தத்தில் அவர் ஸ்நானம் செய்த பொது, தெய்வ அனுக்கிரஹம் தமக்குக் கிடைத்ததை உணர்ந்தார். 

'சிறிது தூரத்திலிருந்தே பாபாவின் மீது பூச்சொரிந்தவர், திடீரென்று எப்படி பாபாவின் திருவடிகளில் தலை சாய்த்து வணங்கினார்?' கூடியிருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். 

மற்றவர் எல்லாரும் பாபாவின் ஹாரதிப் பாட்டை பாடிக் கொண்டிருந்த போது, முலே சாஸ்த்ரி மட்டும் குரு கோலப்பின் ஹாரதிப் பாட்டை உச்சஸ்வரத்தில் பாடினார். பாடப் பாட மேலும் மேலும் அவருக்கு குருவின் மேல் பிரேமை பொங்கியது. 

சிறப்பான மடி ஆசார நியதிகள் பற்றிய கர்வம் பிசுபிசுத்துப் போயிற்று. மேல்ஜாதிக்காரனை  தொடலாம், கீழ் ஜாதிக்காரனை தொடக் கூடாது என்னும் பிடிவாதம் உருகிப் போய்விட்டது. மாறாக, ஆனந்தத்தில் கண்களை மூடிக் கொண்டு சாஷ்டங்கமாக பாபாவுக்கு  தண்டனிட்டார். 

கண்களை திறந்து பார்த்தபோது, கோலப் சுவாமி மறைந்து விட்டிருந்தார். அவருடைய இடத்தில் பாபா உட்கார்ந்து கொண்டு  தக்ஷிணை கேட்டதை பார்த்தார்!

------------------------------------------------------------------------------------------------------------

134 - 2. வேத அங்கங்கள் (வேதாங்கம்) ஆறு 

1. சிக்ஷா - வேத மந்திரங்களின் சரியான உச்சரிப்பு, ஓதும் பொது ஸ்வரத்தை எங்கு உயர்த்துவது, எங்கே தாழ்த்துவது, எங்கே சாதரணமாக ஒலிப்பது என்பது பற்றிய கல்வி. 

2. சந்தஸ் - விருத்தம் அல்லது மெட்டு பற்றிய கல்வி. சமஸ்கிருத மொழியில் சுலோகங்கள், பல மெட்டுகளில் இயற்றப் பட்டிருக்கின்றன. 

3. வியாகரணம் - சமஸ்கிருத பாஷையின் இலக்கணக் கல்வி. 

4. நிருக்தம் - கடினமான பதங்களுக்கு அர்த்தம் - சொல்மூலம், சொல் வடிவம், இவை பற்றிய கல்வி. 

5. கல்பம் - வேத மந்திரங்களை பிரயோகம் செய்து வைதீகச் சடங்குகளை எப்படிச் செய்வது என்பது பற்றிய கல்வி. 

6. ஜ்யோதிஷம் - வான சாஸ்திரம், சோதிடம், நல்ல நேரத்தையும் நல்ல நாளையும் கண்டறிவது, இவை பற்றிய கல்வி. 


Thursday, 26 June 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

இதெல்லாம் கனவு என்று நினைக்க, அவர் நிச்சயமாகத் தூங்கிக் கொண்டிருக்கவில்லை. விழித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்றால், குரு எப்படி இங்கு உடலுடன் உட்கார்ந்து கொண்டிருக்க முடியும்? அவருடைய மனம் எப்படி இவ்வளவு குழம்பியது. பிரமையடைந்தது? சிறிது நேரம் அவர் பேச்சற்று நின்றார். 

இதெல்லாம் ஒரு பிரமை இல்லை என்று உறுதி செய்து கொள்வதற்காகத் தம்மையே கிள்ளிப் பார்த்துக் கொண்டார். எதற்காக  எனக்கு சந்தேகங்களும் குழப்பமும் வர வேண்டும்? நான் இங்கிருக்கிறேன்; தனியாக இல்லை; பல மனிதர்களின் நடுவில்தான் இருக்கிறேன்! (என்று நினைத்தார்). 

முலே சாஸ்திரி பிரதமமாக குரு கோலப்பின் பக்தர். அவருக்கு முதலில் பாபாவைப் பற்றி சந்தேகங்கள் இருந்தாலும், பிறகு அவர் நிர்மலமான மனதுடன் பாபாவின் பக்தராகி விட்டார். 

உயர் குல பிராமணரான அவர், வேதங்களிலும்1 வேதாங்கங்களிலும் 2 சிறந்த பயிற்சி பெற்றிருந்தார். ஆயினும், மசூதியில் குரு கோலப் தரிசனம் கண்டது அவரை வியப்படையும்படி செய்தது. 

------------------------------------------------------------------------------------------------------------

1 வேதங்கள் நான்கு. 1. ரிக் வேதம் 2. யஜூர் வேதம் 3. சாம வேதம் 4. அதர்வண வேதம். 
வேத வியாசரிடமிருந்து ரிக் வேதத்தைப் பைலரும், யஜூர் வேதத்தை வைசம்பாயனரும், சாம வேதத்தை ஜைமினியும், அதவர்வண வேதத்தை சுமந்தும் பெற்றுக் கொண்டதாகக் கூறுவார். இவர்கள் ஒவ்வொருவருக்கும் சிஷ்யர்கள் பலர். அவர்கள் மூலம் பல சாகைகளாக (கிளைகளாக) வேத நெறி பெருகி வந்தது. 

"அனந்தா வை வேதா:" வேதங்கள் எண்ணிறந்தவை என்றாலும், ரிஷிகள் சிலவற்றைத்தான் நமக்குப் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். நம்முடைய இக, பர நலனுக்கும் இதுவே போதும். அத்தனை வேதங்களையும் நாம் தெரிந்துகொண்டு பிரம்மா மாதிரிப் பிரபஞ்சங்களை சிருஷ்டிக்க வேண்டுமா என்ன? சிருஷ்டியாகிவிட்ட இந்த லோகம் நன்றாக இருக்கச் செய்வதற்கான  அளவுக்கு நமக்கு வேதங்கள் தெரிந்தாலே போதும். இப்படிப் பல வேதங்களை ரிஷிகள் நமக்குத் தந்திருக்கிறார்கள். நாலு வேதம் என்று சொல்கிறோம். ஆனால், இது ஒவ்வொன்றிலும் பலவிதமான பாடங்கள், பாட பேதங்கள் உண்டு. பாடாந்தரம் என்று இதைச் சொல்வார்கள். 

ஒரே கீர்த்தனமானாலும், ஒரே ராகமானாலும், அதிலே மகா வைத்திய நாதையர் பாணி, கோனேரி ராஜபுரம் பாணி, சரபசாஸ்திரி பாணி என்று வெவ்வேறு தினுசு இருக்கிறது. சில பாணிகளில் அதிகம் சங்கதிகள் பாடுகிற மாதிரி, சில சுக்தங்கள் ஒரு பாடத்தில் அதிகம் இருக்கும். ஒன்றுகொன்று  மந்திரங்கள் முன்பின்னாக இருக்கும். 

இந்த பாடந்திரம் ஒவ்வொன்றையும் ஒரு சாகை என்று சொல்வார்கள். சாகை என்றால் கிளை. அநேக கிளைகளுடன் கப்பும் கவடும் விட்டுக் கொண்டு ஒரு மகா விருஷம் மாதிரி, அடையாறு ஆலமரம் மாதிரி, வேதம் இருக்கிறது. இத்தனை சாகைகள் இருந்தாலும், இவற்றை ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்று நாலில் ஒன்றைச் சேர்ந்ததாகவே பிரிந்திருக்கிறது".

- தெய்வத்தின் குரல் - இரண்டாம் பகுதி, தொகுப்பாசிரியர் - ரா. கணபதி 

" வேதம் எனப்படுவது மனிதர்களுடைய வாக்கன்று. அது உற்பத்தியான காலம் குறிப்பிடப் படவில்லை. குறிப்பிட முடியாது. வேதம் அநாதி. சிருஷ்டி அளவற்றதாயும் அனாதியாயும் இருப்பது போல் வேதமும் ஆதியும் அந்தமும் அற்றது. இதன் பகுதிகள் பல ரிஷிகளால் கண்டுபிடிக்கப் பட்டவை. ரிஷி என்பவர் 'மந்திர-த்ரஷ்டா ' மந்திரத்தை பார்த்தவர். மந்தரம் அவருடைய கருத்தன்று. வேதத்தின் ஒரு பகுதி ஒரு ரிஷியிடமிருந்து வந்ததென்று சொன்னால் ஏற்கெனெவே இருந்த உயரிய கருத்தை (மந்திரத்தை) அவர் கண்டார் என்பதுதான் பொருள்" - சுவாமி விவேகானந்தர்.