valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 24 March 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"அவர் தக்ஷிணை வாங்கிக்கொண்டார் என்று யாரவது நினைக்கலாம். அது தக்ஷிணை அன்று; என்னால் திருப்பிக் கொடுக்கப்பட்ட கடனேயாகும். தக்ஷிணை என்ற சாக்குப்போக்கில் என்னுடைய பழைய நேர்த்திக்கடன் எனக்கு ஞாபகப்படுத்தப்பட்டது.

தாத்பரியம் என்னவென்றால், சாயி திரவியம் எதையும் யாசிப்பதில்லை; தம்முடைய நிஜமான பக்தர்களையும் யாசிக்க அனுமதித்ததில்லை. செல்வதை அவர் அநர்த்தமாகவே (கேடாகவே)  கண்டார். பக்தர்களையும் பண மோகத்திலிருந்து காப்பாற்றினார்.

சதா சாயிபாதங்களிலேயே மூழ்கியிருந்த மகால்சாபதி என்ற பக்தர் சங்கடத்தில் உழன்றவாறே வறுமையில் காலந்தள்ளினார். சாயி அவரைச் சிறிதளவும் செல்வம் சேர்க்க விடவில்லை.

தமக்கு தக்ஷிணை ரூபத்தில் வந்த பணத்தை சாயி பல பேர்களுக்கு விநியோகம் செய்தார். ஆனால், வறுமையில் வாடிக்கொண்டிருந்த மகால்சாபதிக்கு ஒருநாளும் ஒருபைசாவும் கொடுத்தாரில்லை.

சாயி இவ்வளவு உதாரகுணமுள்ளவராக இருந்தபோதிலும், மகல்சாபதி ஒருநாளும் அவர் முன் கெஞ்சிக் கையை நீட்டினாரில்லை. அவருடைய தன்மான உணர்வு போற்றுதற்குரியது.

அவருடைய  செல்வநிலை எவ்வளவு தாழ்ந்திருந்ததோ, அவ்வளவு உயர்ந்திருந்தது அவருடைய துறவு மனப்பான்மை. சொற்ப வருமானத்திலேயே திருப்தி கண்டு அவர் வறுமையின் கஷ்டங்களை தைரியமாக வாழ்க்கையில் எதிர்கொண்டார்.

ஒருசமயம், ஹம்சராஜ் என்னும் பெயர்கொண்ட தயாளகுணமுள்ள வியாபாரி ஒருவர் மகல்சாபதிக்கு ஏதாவது உதவி செய்யவேண்டுமென்று எண்ணம் கொண்டார்.

அவருடைய கொடிய வறுமையைக் கண்டு தம்மால் முடிந்த உதவியைச் செய்யவேண்டுமென்ற எண்ணம் ஹம்சராஜின் மனத்தில் உதித்தது.

மகல்சாபதியின் வறுமை நன்கு தெரிந்திருந்தும் அவர் வேறு யாரிடமிருந்தும் உதவி பெறுவதை சாயி அனுமதிக்கவில்லை. அவர் திரவியத்தை உதாசீனம் செய்வதையே சாயிநாதர் ஊக்குவித்தார்.

ஆகவே அந்த வியாபாரி என்ன செய்தாரென்றால், இந்த பக்தருக்காக மனம் இளகி, பாபாவின் தர்பார் நடந்துகொண்டிருந்தபோது, அனைவருடைய கண்களுக்கும் தெரியும்படியும் மஹால்சாபதியின் கைகளில் கொஞ்சம் பணத்தையும் கொடுத்தார்.

"சாயியின் அனுமதியின்றி நான் இதை ஏற்றுக்கொள்ளமுடியாது" என்று சொல்லி மிகப் பணிவாக மகால்சாபதி பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.

சுயநலமில்லாத, செல்வத்தை நாடாத, ஆன்மீக ஏற்றத்தையே நாடிய, உடலாலும் உள்ளத்தாலும் சாயிபாதங்களை சரணடைந்துவிட்ட, பிரேமை மிகுந்த பக்தரை இங்கு நாம் பார்க்கிறோம்.