valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 7 October 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஓ, அச்சொற்களின் மோகனசக்திதான் என்னே!  காகாவின் நண்பர் வியப்படைந்த மனத்தினராய், "இவை என் தந்தையின் சொற்களே! குரலும் எனக்கு நன்கு பழக்கப்பட்டது!" என்று சொன்னார்.

காலஞ்சென்ற தந்தையின் பேச்சைப் போன்றே வெளிவந்த வார்த்தைகள் நண்பரின் இதயத்தைத் தொட்டுவிட்டன. ஏற்கெனவே செய்துவைத்திருந்த தீர்மானங்களை விசிறியடித்துவிட்டு பாபாவின் பாதங்களில் தலைசாய்த்தார்.

பின்னர், பாபா காகாவிடம் மட்டும் தக்ஷிணை கேட்டார்; காகா மகிழ்ச்சியுடன் தக்ஷிணை கொடுத்தார். இருவரும் திரும்பினர். மறுபடியும் பிற்பகல் வெளியில் மசூதிக்குச் சென்றனர்.

இருவரும் சேர்ந்தே சென்றனர்; இருவருமே பம்பாய்க்கு திரும்ப வேண்டும். காகா வீடு திரும்புவதற்கு அனுமதி கேட்டார். பாபா மறுபடியும் தக்ஷிணை கேட்டார்.

இம்முறையும் பாபா, "எனக்குப் பதினேழு ரூபாய் கொடு" என்று காகாவை மட்டுமே கேட்டார். நண்பரை ஏதும் கேட்கவில்லை. நண்பரின் மனம் உறுத்தியது.

காகாவிடம் நண்பர் கிசுகிசுத்தார், "பாபா ஏன் உங்களைமட்டும் தக்ஷிணை கேட்டகிறார்? காலையிலும் உங்களைத்தான் கேட்டார்; இப்பொழுதும் உங்களை மட்டுமே கேட்கிறார்.-

"நான் உங்களுடன் சேர்ந்து இருக்கும்போது தக்ஷிணைக்கு என்னை ஏன் விலக்கிவிடுகிறார்?" காகா மெல்லிய குரலில் பதிலுரைத்தார், "பாபாவிடமே இந்தக் கேள்வியைக் கேளுங்கள்".

திடீரென்று பாபா காகாவைக் கேட்டார், "என்ன? நண்பர் உம்மிடம் என்ன சொல்கிறார்?" நண்பர் இப்பொழுது நேரிடையாகவே பாபாவைக் கேட்டார், "நான் உங்களுக்கு தக்ஷிணை கொடுக்கலாமா?".

பாபா பதில் சொன்னார், "உம்முடைய மனத்தில் கொடுக்க வேண்டுமென்ற விருப்பம் இல்லை; ஆகவே, நான் கேட்கவில்லை. இப்பொழுது உமக்குக் கொடுக்க விருப்பமிருந்தால் கொடுக்கலாம்."

பாபா கேட்டபோதெல்லாம் காகா தக்ஷிணை கொடுத்தது பற்றி நண்பர் அவரிக் குற்றம் சாட்டுவது வழக்கம். இப்பொழுதோ, பாபா கேக்காமலேயே தக்ஷிணை கொடுக்கட்டுமா என்று அதே மனிதர் கேட்கிறார்! காகா ஆச்சரியமடைந்தார்.

பாபா "விருப்பமிருந்தால் கொடுக்கலாம்" என்று சொன்னவுடனே நண்பரால் தாமதிக்க முடியவில்லை. உடனே பதினேழு ரூபாயை பாபாவின் பாதங்களில் (பாபா கேட்காமலேயே) வைத்தார்.

பாபா அப்பொழுது அவரிடம் சொன்னார், "போவதற்கு என்ன அவசரம்? ஒரு கணம் உட்காரும்". பிறகு பாபா அவருடைய பேதபுத்தியைச் சீர்படுத்துவற்காக இனிமையான வார்த்தைகளால் உபதேசம் செய்தார்.