valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 9 February 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


முப்பத்துநான்காவது சுலோகத்தில் நானாவின் பாராயணம் நின்றது. ஒருகேள்வியைக் கேட்டு நானாவுக்கு போதனை அளிக்கவேண்டுமென்று பாபாவுக்குத் தோன்றியது.

பாபா கேட்டார், "நானா, நீர் என்ன முணுமுணுக்கிறீர்? நீர் மெல்லிய குரலில் ஓதுவதைத் தெளிவாகவும் உரத்த குரலிலும் ஓதி என் காதுகளுக்குக் கேட்குமாறு செய்வீராக."

பாபாவின் ஆக்ஞயைப் பிரமாணமாக ஏற்றுக்கொண்டு நானா சுலோகம் (34 ஆவது) முழுவதையும் ஒப்பித்தார். அதன் பிறகு, அந்த சுலோகத்தின் பொருளைத் தெளிவாக விவரிக்கும்படி பாபா நானாவைக் கேட்டார்.

மிகுந்த விநயத்துடன் கைகளைக் கூப்பிக்கொண்டு, அந்த சுலோகத்தின் மூலம் ஸ்ரீகிருஷ்ணர் (அர்ஜுனனுக்கு )என்ன அறிவுரை தந்தார் என்பதை நானா மிக்க மகிழ்ச்சியுடன் விவரித்தார்.

சாயி-நானா உரையாடல் எல்லாருக்கும் நன்கு விளங்குமாறு கீதையிலிருந்து எடுத்து மூலசுலோகத்தைப் பதம் பதமாக அளிப்போமாக.

ஞானிகளின் மனோதர்மத்தையும் இக் கேள்வியின் சூக்குமத்தையும் ஐயம் திரிபின்றி எல்லாரும் புரிந்துகொள்ளும்படி தத்துவத்தை விளக்கும் முறையை நான் கையாள வேண்டும் என்பதை நன்கு உணர்கிறேன்.

"சம்ஸ்கிருத மொழி இயல்பாகவே கடினமானது. சாயி பாபாவுக்கு அம்மொழி எப்படி சுலபமாகியது ? எப்படி அவ்வளவு நுணுக்கமான கேள்வியொன்றை கேட்டார்? சாதுக்களின் ஞானம் அளவிடற்கரியது!" என்று எல்லாரும் ஆச்சரியம் அடைந்தனர்.

"அவர் எப்பொழுது சம்ஸ்கிருதத்தை அத்தியயனம் செய்தார்? கீதையை எப்பொழுது வாசித்தார்? கீதையை கரைத்துக் குடித்தவர்போல்  கேள்வி கேட்டாரே?"

கேட்பவர்கள் தெளிவும் திருப்தியும் அடையுமாறு ஸ்ரீகிருஷ்ண பகவானின் திருவாய்மொழியான மூலசுலோகத்தை ஓரெழுத்தும் பிசகாமல் இங்கு அளிக்கிறேன். விளக்குவதற்கும் எளிதாக இருக்கும்.

"தத்வித்தி ப்ரணிபாதனே பரிப்ரச்னேன சேவையா! உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ் தத்வத்ஸனாஹா !" (பணிந்தும், கேட்டும், பணிவிடைசெய்தும் நீ அதை அறிக.உண்மையை யுணர்ந்த ஞானிகள் உனக்கு அந்த ஞானத்தை உபதேசிப்பார்கள் - சுவாமி சித்பவானந்தர் பொழிப்புரை)

இதுவே கீதையின் மூலசுலோகம். கீதைக்கு எத்தனையோ மஹான்கள் பாஷ்யம் (விரிவுரை) எழுதியிருக்கின்றனர்.  அனைவருமே இந்த சுலோகத்திற்கு வேறுபாடு ஏதுமின்றி ஒரேவிதமாக பதவுரை செய்திருக்கின்றனர்.

நானாவும் கல்விகேள்விகளில் சிறந்தவர். கீதையின் வியாக்கியானங்கள் பலவற்றைப் பல ஆண்டுகள் ஆழமாகப் படித்தவர். சுலோகத்தின் பொருளை பதம் பிரித்து  விளக்கினார்.

சுலோகத்தை செய்யுள் உருவிலிருந்து வசன நடைக்கு கவனமாகக் கொண்டு வந்து, மிக்க மரியாதையாகவும் பணிவுடனும் ரசம் ததும்பும் இனிமையான குரலில் அர்த்தம் சொல்லத் தயாரானார்.