ஷீர்டி சாயி சத்சரிதம்
பின்னர்த் தன்னுடைய தீர்மானத்தைக் கணவனிடம் தெரிவித்தாள். கணவன் இந்தத் திட்டத்தைக் கேட்டான். உள்ளுக்குள்ளே பெருங்கலவரமடைந்தான்.
பேராசை கோலோச்சுமிடத்தில் விவேகம் எப்படி இருக்கும்? அதுவும் இறைப்பணிக்குத் தர்மம் அளிக்கும் விவேகமா? அவன் மனத்துக்குள் எண்ணினான், 'ஐயோ! எவ்வளவு விவேகமற்ற செயல்! தவறான நம்பிக்கை கொண்டு முழுக்க ஏமாறிவிட்டாள்.-
'அவளுடைய ஆபரணங்கள் அனைத்தையும் மதிப்பீடு செய்து ஓராயிரம் ரூபாய் என்று நிர்ணயம் செய்தபின், ஒரு நிலத்தை அவள் பெயரில் எழுதிவைத்துவிட வேண்டும்.'
ஆகவே, மனைவியின் ஆபரணங்களைக் கஞ்சனே விலைக்கு வாங்கினான். கடுமையான உழைப்பால் மேடுபள்ளம் திருத்தப்பட்ட சிறிய நிலம் ஒன்று யாராலோ அவனிடம் அடமானமாக வைக்கப்பட்டிருந்தது. பணத்திற்குப் பதிலாக அந்த நிலத்தை கஞ்சன் மனைவிக்கு கொடுத்தான்.
அந்த நிலமும் ஒரு தரிசு; மழை பெய்தாலும் எதுவும் விளையாத நிலம். அவன் மனைவியிடம் சொன்னான், "இதை சிவனுக்கு சமர்ப்பணம் செய். -
"இந்த நிலத்தின் மதிப்பு ஓராயிரம் ரூபாய். உன் கனவுக்காட்சியின்படி இதை நீ கடவுளுக்கு தானம் செய்யலாம். கடவுள் மகிழ்ச்சியடைவார். நீயும் உன் கடனைச் செலுத்தியவளாவாய்".
கணவனின் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து கஞ்சனின் மனைவி அந்த நிலத்தை சங்கரருக்கு சந்தோஷத்துடன் சமர்ப்பணம் செய்தாள்.
உண்மை நிலை என்னவென்றால், அந்த நிலம் டுபகீ என்னும் பெண்மணிக்குச் சொந்தமானது. அவள் இருநூறு ரூபாய் கடனுக்காக அந்த நிலத்தைப் பணக்காரக் கஞ்சனிடம் அடமானம் வைத்திருந்தாள்.
டுபகீ ஓர் அனாதைப் பெண்மணி; நிலம் அவளுடையது. ஆபத்துக்கு காலத்தில், அந்த நிலத்தையும் பணத்துக்காக அடமானம் வைக்கவேண்டியதாயிற்று.
ஆயினும், பணக்காரனோ ஒரு மஹாலோபி. அவன் சங்கரரையும் ஏமாற்றுவதற்கு பயப்படவில்லை. கபடமான வழியில் மனைவியின் சீதனத்தை ஜேபியில் போட்டுக் கொண்டான். எனினும், லாபமடைந்தது பற்றி மகிழ்ச்சியடைந்தான்.
புலன்களின் வலிய ஆசைகள் மிகக் கெட்டவை. அவற்றைத் தேடி ஓடுபவனை புலனின்பங்கள் நாசம் செய்துவிடும். நல்லபடியாக வாழவேண்டுமென்று விரும்பும் மனிதன் புலனின்பநாட்ட வலையில் மாட்டிக்கொள்ளலாகாது.
வேடனின் புல்லாங்குழல் இசையின்மீது ஏற்படும் மயக்கத்தால் மான் மடிகிறது. அதனுடைய தலையில் இருக்கும் அழகிய மாணிக்கம் நாகப்பாம்பின் அழிவுக்குக் காரணமாகிறது. விளக்கொளியின் கவர்ச்சி விட்டில் பூச்சியை எரித்துவிடுகிறது. புலனின்பங்களின் அழிக்கும் இயல்பு இவ்வாறானது.