ஷீர்டி சாயி சத்சரிதம்
மஹானுபவரான சாயி, அவரே சொல்லும் கதையின் அற்புதத்தைக் கேட்டுக் கதை கேட்பவர்கள் மெய்மறந்து போவார்கள். அன்பால் விளையும் அஷ்டபாவம் அவர்களை ஆட்கொள்ளும்!
இக் கதை சாயியின் நேரிடைத் திருவாய்மொழி. இதனுடைய தாத்பரியத்தின்மீது (உட்கருத்தின்மீது) கண்வைத்து நுண்பொருள் உணர்பவர் செய்தற்குரிய கடமையைச் செய்துமுடித்தவர் ஆவார்.
கதைகேட்பவர்களே, என்னுடைய வேண்டுகோளுக்குச் செவிசாய்ப்பீர்களாக. நான்தான் இக் கதையைச் சொல்லுபவன். ஆயினும், நான் சாரமறிந்து ஈடுபாட்டுடன் சொல்லாவிட்டால், நானும் உங்களுக்குச் சமானமாகிவிடுவேன் (கதை சொல்லும் தகுதியை இழந்துவிடுவேன்).
பக்தர்களின்பால் சாயி வைத்திருந்த பிரேமையை ஞாபகப்படுத்திக்கொள்ளும்போது, மனம் தன்னுடைய இயல்பாய் மறந்துவிடுகிறது. உலகவாழ்க்கையின் நடுக்கம் மறைந்து, சாந்தி பிறக்கிறது. இதைவிடப் பெரிய லாபம் ஏதும் உண்டோ?
கதைகேட்பவர்களே, முன்பு சொன்ன கதைக்கும் இந்தக் கதைக்கும் உண்டான தொடர்பைக் கவனத்துடன் கேளுங்கள். மனம் சிதறாமல் கேட்டால், உங்களுடைய ஜீவன் திருப்தியடையும்.
கடந்த அத்தியாயத்தின் முடிவில் ஆடுகளின் கதையைக் கேட்டீர்கள். பாபாவுக்கு ஆடுகளின் மீது ஏற்பட்ட பிரீத்திபற்றியும், அவற்றின் பூர்வஜென்ம வரலாறு அவருக்கு ஞாபகம் வந்த விவரத்தையும் கேட்டீர்கள்.
அந்தக் காதையைப் போலவே, பணத்தாசை எவ்வாறு மனிதனை பரம அவஸ்தைக்குள்ளாக்கி அதலபாதாளத்தில் வீழ்த்துகிறது என்பதை விளக்கும் இந்தக் கதையையும் கவனத்துடன் கேளுங்கள்.
சாயியே பூரணமான அருள்நோக்குடன் ஒன்றன்பின் ஒன்றாக எந்தக் கதையைச் சொல்லவேண்டுமென்று சூசகமாகத் தெரிவித்துக் கதை கேட்பதில் தடங்கல் ஏதும் வராமல் செய்கிறார். இதனால், கேட்பவர்களின் சுகமும் திருப்தியும் அதிகமாகின்றன அல்லவோ?
கதையும் கதையைச் சொல்லுபவரும் விவரணமும் சாயியாக இருக்கும்போது, இந்த ஹேமாட் பந்துக்கு இங்கென்ன வேலை? அது வெறும் புனைபெயர் அன்றோ!
சாயிகதை என்னும் சமுத்திரக்கனியில் உட்கார்ந்திருக்கும் நாம், கதைகளுக்காக கல்லுடைத்துக் கஷ்டப்பட வேண்டுமா என்ன? கற்பகவிருட்சத்தின் கீழ் அமர்ந்திருப்பவரின் ஆசை, உதித்தக்கனமே நிறைவேறும் அன்றோ!
சூரியனின் இல்லத்தில் விளைக்கைப்பற்றி எவராவது கவலைப்படுவாரா? நிரந்தரமாக தேவாமிர்தத்தை அருந்திக்கொண்டிருப்பவருடைய மனத்தில் விஷத்தைப்பற்றிய எண்ண அலைகள் எழுமா?
சாயியைப் போன்ற தெய்வம் நம்மை என்றும் காத்து அருள் செய்யும்போது, அமிர்தம் போன்று இனிக்கும் கதைகளுக்கு நமக்கென்ன பஞ்சம்? உங்கள் இதயம் திருப்தியடையும் வரை கதைகளை ருசித்து அருந்துங்கள்.