valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 28 December 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


சாவடி ஊர்வலம் இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கவேண்டும். ஆனால், அப்பொழுதே மணி பத்து.  பாபா இன்னும் சாந்தமடைந்தாரில்லை. மக்கள் ஆங்காங்கே விழித்தகண் விழித்தவர்களாய் மௌனமாக நின்றுகொண்டிருந்தனர்.

அப்படியே இரவு மணி பதினொன்று ஆகியது. கொஞ்சங்கொஞ்சமாக பாபாவின் கோபம் தணிந்தது. ஒரு புதிய லங்கோட்டையும் கப்னியையும் அணிந்துகொண்டார்.

சாவடி ஊர்வலத்துக்கான மணி ஒலித்தது. ஆங்காங்கே மௌனமாக உட்கார்ந்திருந்த பக்தர்கள் பல்லக்கிற்கு மலர் அலங்காரம் செய்தனர். பாபாவின் அனுமதி பெற்றபின் பல்லக்கை முற்றத்திற்குக் கொண்டுவந்தனர்.

வெள்ளித்தடி , பதாகைகள், சவரி, அலங்காரக் குடை, கொடிகள் போன்ற அரசர்களுக்குரிய அலங்காரங்களுடனும் மரியாதைகளுடனும் ஒருநாள் விட்டு ஒருநாள் நடக்கும் சாவடி ஊர்வலம் கிளம்பியது.

ஊர்வலம் கிளம்பும்போது வாத்தியங்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து பெருஞ்சத்தம் விளைவித்தன. அதையும் மீறி, மக்கள் சாயிநாதருக்கு 'ஜய ஜய' கோஷமிட்டனர். அதை யாரால் வர்ணிக்க முடியும்! எங்கும் ஆனந்தம் பொங்கிவழிந்தது.

பிறகு பாபா வேள்ளைவெளேரென்ற துணியொன்றை எடுத்துத் தலையைச் சுற்றிக் கட்டிக்கொண்டார். கிளம்புவதற்கு சுபமுஹூர்த்த வேளை என்று அறிவிப்பதுபோல், சிலீம், புகையிலை, ஜட்கா இவற்றைக் கையில் எடுத்துக்கொண்டார்.

சிலர் அலங்காரக் குடையையும் சிலர் சவரியையும் (சாமரத்தையும்) ஏந்தினர். மற்றும் சிலர் மயிற்பீலிகளை ஏந்தினர். சிலர் கருடாகி கொடியையும் சிலர் வாயில்காப்போரின் அதிகாரச் சின்னமான கோல்களையும் ஏந்தினர்.

இவ்வாறாக, பிறவிக் கடலின் எல்லையைக் கடப்பதற்கு விஜயதசமிநாள் சுபமான காலம் என்பதை பாபா குறிப்பால் உணர்த்தினார்.

ஆகவே, இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, ஷீர்டி மக்களுடன் பாபா ஒரு தசராவிற்குத்தான் (நவராத்திரிப் பண்டிகைக்குத்தான்) இருந்தார். அடுத்த விஜயதசமியை நல்ல முஹூர்த்தமாக கருதித் தம்முடைய தேகத்தை பூமிக்கு அர்ப்பணம் செய்தார்.

இதை குறிப்பால் உணர்த்தியோடல்லாமல், தம்முடைய செயலால் ஷீர்டி மக்களுக்கு நேரிடை அனுபவத்தையும் அளித்தார். 1916 ஆம் ஆண்டு துனியில் தம் ஆடைகளை எரித்ததுபோல், 1918  ஆம் ஆண்டு அதே நாளில் தம் தேகமெனும் சுத்தமான வஸ்திரத்தை யோகமெனும் அக்கினிக்குப் படையலாக அர்ப்பணம் செய்தார்.

1918  ஆம் ஆண்டின் விஜயதசமி நாளை ஒரு சுபதினமாகச் செய்து மெய்ப்பொருளோடு இரண்டறக் கலந்துவிட்டார்.

இதை நான் எழுதிக்கொண்டிருக்கும்போதே, விஜயதசமி நாளை அவர் முன்னரே தேர்ந்தெடுத்துவிட்டார் என்பதன் நிரூபணமாக சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியொன்று எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.

ஒருசமயம், ஷீர்டி வாசி ராமச்சந்திர பாடீல் கோதே என்பவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் போலிருந்த நோயின் தாக்குதலை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவருடைய நிலைமை அவ்வாறிருந்தது.