valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 23 February 2023

ஷீர்டி சாயி சத்சரிதம்

"கற்பத்திலிருக்கும் சிசுவைப் பனிக்குடமும், முகம் பார்க்கும் கண்ணாடியைத் தூசியும், நெருப்பைச் சாம்பலும் மூடியிருக்கின்றன அல்லவோ?  அதுபோலவே ஞானத்தை அஞ்ஞானம் மூடியிருக்கிறது.-

"பகவான் ஸ்ரீகிருஷ்ணர், கீதையிலேயே வேறிடங்களில் ஞானத்தை அஞ்ஞானம் மூடியிருக்கிறது எனச் சொல்லியிருக்கிறார். ஆகவே, அஞ்ஞானத்தை எடுத்துவிட்டால், ஞானம் இயல்பாகவே பிரகாசிக்கும்.-

"ஞானம் சுயமாகவே நிறைவுபெற்றதாயினும், பாசி மூடிய சுத்தமான நீர் போன்று இருக்கிறது. பாசியை அகற்றும் விழிப்புணர்வு பெற்றவனே சுத்தநீரைப் பெறுகிறான். -

"இது சூரிய, சந்திர கிரஹணங்களைப் போன்றது. அவையென்னவோ எப்பொழுதும் பிரகாசித்துக்கொண்டிருக்கின்றன. ராகுவும் கேதுவும் அவற்றின் பாதையில் குறுக்கிட்டு நம்முடைய பார்வையை மறைக்கின்றன.-

"சூரியனுக்கும் சந்திரனுக்கும் எக் கெடுதலும் ஏற்படுவதில்லை. கெடுவது நம்முடைய பார்க்கும் சக்தியே. அதுபோலவே, ஞானமும் எந்த உபாதையும் இன்றித் தானிருக்கும் இடத்திலேயே இருந்துகொண்டு ஒளிர்கிறது.-

"கண்களின் பார்க்கும் சக்தி ஞானம். கண்களில் வளரும் புரை அஞ்ஞானம். அதை அவசியம் எடுத்துவிடவேண்டும். -

"கையின் திறமையால் புரையையோ திரையையோ விலக்கித் தூர எறிந்து, பார்க்கும் சக்தியைத் திரும்பப் பெற வேண்டும். அஞ்ஞான இருளை விலக்கவேண்டும்.-

"இவ்வுலகில் கண்களால் பார்த்தறிவதனைத்தும் விவரிக்கமுடியாத மாயையால் நிரம்பியிருக்கிறது. மாயை அனாதி; அவித்யை; வெளிப்படாதது. இது, இதுவே அஞ்ஞானத்தின் விளையாட்டு!-

"ஞானம் உணர்வுபூர்வமானது; உபதேசிக்கக்கூடிய விஷயம் அன்று. குருவைத் தொழுவதும் அவருக்கு சேவை செய்வதும் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்டு விளக்கம் பெறுவதும் குருவின் கிருபையைப் பெரும் சாதனங்கள். -

"உலகை சத்தியம் என்று நினைப்பது பெரிய பிரமை. இதுவே, முதலாவதாக எடுத்தெறியப்படவேண்டிய, ஞானத்தை மூடியிருக்கும் இருள். அப்பொழுதுதான் பேரறிவாகிய முழுமுதற்பொருள் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். -

"உலகவாழ்வின் விதை அஞ்ஞானம். குருவின் கிருபையாகிய மையைக்  கண்களில் இட்டுகொண்டால் கண்களை மூடியிருக்கும் மாயையாகிய திரை விலகும். சுபாவமான ஞானம் எஞ்சி நிற்கும். -

"ஞானம் என்பது அடைய வேண்டிய பொருளன்று. அது ஏற்கெனவே அடையப்படும் பிரகாசித்துக்கொண்டு விளங்குகிறது. வழியிலிருக்கும் தடங்கல் அஞ்ஞானமே.-

"இறைவனையும் பக்தர்களையும் வெவ்வேறாகக் கருதுவது அஞ்ஞானத்தின் மூலம், இந்த அஞ்ஞானத்தை எடுத்தெறிந்துவிட்டால் எஞ்சியிருப்பது பூரண ஞானம். -

"பழுதையில் பாம்பு தெரிவது அஞ்ஞானத்தின் தூய உதாரணம். உண்மையில் அப் பொருள் என்னவென்று அறிந்துகொள்வது அஞ்ஞானத்தை விலக்கிவிடுகிறது. எஞ்சி நிற்பது அப் பொருள் பழுதையென்று ஞானமே.-