valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 16 August 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஆயினும் டெண்டுல்கர், " நான் பணியிலிருந்து ஓய்வு பெறும்போது என்னுடைய முதலாளி இந்த அளவிற்கு மாதாந்திர ஓய்வூதியம்?" என்றெண்ணிக் கவலையுற்றார்.

"என்னுடைய சம்பளம் மாதம் ரூ. 150 /- தான். மாதாந்திர செலவுகளை சுமக்கும் முழுப்பாரமும் ஓய்வூதியமாகிய 75 ரூபாயின்மேல்தான் விழும்." இவ்விதமான எண்ணங்கள் அவர் மனதில் உழன்றன.

ஆனால், கடைசியில் என்ன நடந்ததென்பது மிகவும் சுவாரசியமானது. பாபாவின் லீலையைப் பாருங்கள்! குடும்ப நல்வாழ்வுபற்றி ரகுநாத்ராவின் மனைவியுடன் (கனவில்) பேசியபோது அவர் செய்த அற்புதங்களை கேளுங்கள்.

ஓய்வூதியம் பற்றிய கடைசி உத்தரவு தீர்மானிக்கப்படுவதற்கு 15 நாள்களுக்கு முன்னர், பாபா அவருடைய (சாவித்திரி பாயி தெண்டுல்கருடைய ) கனவில் தோன்றி, அவருடைய கருத்து என்னவென்று கேட்டார்.-

"நான் அவருக்கு ரூ. 100 /- (ஓய்வூதியம்) கொடுக்கலாமென்று விரும்புகிறேன். உமது மனத்தின் ஆசையை அது பூர்த்தி செய்யுமென்று நினைக்கிறீரா?" அப்பெண்மணி பதில் சொன்னார், "நீங்கள் என்ன சொல்கிறீர்கள் பாபா! ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்? எங்களுடைய பாரங்களனைத்தும் உங்களுடையதே அல்லவோ?"

நிறுவனத்தில் ரகுநாத் ராவின் மனு சம்பந்தமாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 'ரகுநாதராவ் பல ஆண்டுகளாக இன்று வரை நேர்மையாக சேவை செய்திருக்கிறார். ஆகவே அவருக்குச் சம்பளத்தில் பாதியளவு ஓய்வூதியமாக கொடுக்கப்பட வேண்டும்.'

பாபா ரூ. 100 /- என்று ஏற்கெனவே சொல்லியிருந்தாலும் ரூ. 10 /- அதிகமாகவே அளித்தார். பக்தர்களின் மீது அளவற்ற பிரேமை கொண்ட கருணாகரரான சமர்த்த சாயி இப்படித்தான்!

இன்னுமொரு மனோரஞ்சகமான கதையைக் கேளுங்கள். பக்தர்களின் பிரேமை மேலும் விருத்தியடையும். கேட்பவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

கேப்டன் ஹாடே என்ற பெயர் கொண்ட டாக்டர் ஒருவர் சிரத்தை மிகுந்த பாபா பக்தர். ஒருநாள் விடியற்காலையில், பாபா அவருடைய கனவில் தோன்றிய கதையைக் கேளுங்கள். மனத்தைச் சுண்டியிழுக்கும்.

ஹாடே அப்பொழுது குவாலியரில் வசித்துவந்தார். அங்கேதான் அவர் பாபாவைக் கனவில் கண்டார். கேள்வி கேட்பதில் பாபாவுக்கு இருந்த சாமர்த்தியத்தையும் ஹாடே அவருக்கு அளித்த பதிலையும்பற்றி கேளுங்கள்.

பாபா கேட்டார், "என்னை மறந்து  விட்டீரா என்ன?" ஹாடே உடனே பாபாவின் பாதங்களை பற்றிக்கொண்டு பதிலுரைத்தார், "ஒரு குழந்தை தாயை மறந்துவிட்டால் அபயத்தை (அடைக்கலத்தை) எங்கிருந்து பெறும்?"

உடனே அவர் எழுந்து (கனவில்), தோட்டத்தினுள் சென்று இளசான வால்பப்டிக் (அவரைக்) காய்களை பறித்துக்கொண்டு வந்தார். அரிசி, பருப்பு போன்ற மற்ற மாளிகைச் சாமான்களையும் சேகரித்துக்கொண்டு வந்து, பக்தியுடன் ஒரு சிறப்பான நைவேத்தியம் சமைத்தார். தக்ஷிணையும் தயார் செய்துகொண்டார்.