valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 20 July 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்

"நம்மால் என்ன பெரிய விருந்தளிக்க முடியும்? நாமென்ன விஷேஷமாகவோ ஹோலிப்பண்டிகை கொண்டாடுகிறோம்? ஷிர்டியில் கிடைக்கக்கூடிய இனிப்புகளையும் ருசி மிகுந்த உணவுப்பண்டங்களையும் விட்டுவிட்டு நம்முடைய ருசியற்ற முரட்டுச் சோற்றையா சாப்பிடப்போகிறார்?"-

என்று அவள் கேட்டாள். நான் பதில் சொன்னேன், "கால் சேர் அரிசி அதிகமாக வடிப்பதில் நமக்கென்ன பெரிய ஆயாசம்? உன்னிடம் கால் சேர் அரிசி இல்லாமல் போய்விடவில்லையே!-

"சாயி, தாமே விருந்தாளியாக வருவார் என்று என்னால் சொல்லமுடியவில்லை. ஆயினும், யாரோ ஒரு விருந்தாளி வரப்போகிறார் என்று எனக்கு சந்தேகமில்லாமல் தோன்றுகிறது. -

"அவரை நீ யாரென்று வேண்டுமானாலும் எடுத்துக்கொள்; நான் அவரை சாயிக்கு சமானமாக எடுத்துக்கொள்கிறேன். இல்லை, இல்லை, சாயியாகவே எடுத்துக்கொள்கிறேன்; என்னுடைய சொப்பணமும் உண்மையாகிவிடும்."

இதுவே எங்களுக்குள் நடந்த சம்பாஷணை. பிறகு மதியநேரம் வந்தது. விதிமுறைகளின்படி ஹோலிகா பூஜையும் (அக்கினி பூஜையும்) செய்யப்பட்டது; போஜனத்திற்காகத் தையலிலைகள் போடப்பட்டன.

மகன்கள், பேரன்கள், மகள்கள், மாப்பிள்ளைகள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் - அனைவருக்கும் பந்தியாகத் தையலிலைகளும் மனைகளும் போடப்பட்டன; குடிநீர்ப் பாத்திரங்கள் வைக்கப்பட்டன. பந்தியில் இலைகளைச் சுற்றி அழகான கோலங்கள் போடப்பட்டன.

இந்த அமைப்பின் முக்கிய பந்தியின் மத்தியில் சாயிக்காக ஒரு மணையும் தட்டும் போடப்பட்டன. மற்றவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டபோது இந்தத் தட்டிலும் பரிமாறப்பட்டது.

இந்தத் தட்டைச் சுற்றி பல வண்ணங்களில் அழகாக கோலம் போடப்பட்டிருந்தது. சாப்பிடுபவர் ஒவ்வொருவருக்கும் குடிநீர்ப் பாத்திரம் ஒன்றும் உத்தரணியுடன் கூடிய பஞ்சபாத்திரம் ஒன்றும் வைக்கப்பட்டன. இது எல்லாருக்கும் ஒரேமாதிரியாகச் செய்யப்பட்டது.

அப்பளம், சாண்டகே, பச்சமுடி, காரமான ஊறுகாய் , பலவிதமான காய்கறிகள், பாயசம் ஆகியவை பரிமாறப்பட்டன. எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன.

மணி பன்னிரண்டு ஆகிவிட்டதென்று தெரிந்து, சாப்பிடப்போகிறவர்கள் மடி வேட்டிகளைக் கட்டிக்கொண்டபின் ஒவ்வொருவராக வந்து மணைகளில் அமர்ந்தனர். அப்பொழுதும் விருந்தாளி எவரும் வரவில்லை!

பந்தியில் எல்லா இடங்களும் நிரம்பிவிட்டன. சோறு, போளி, பருப்பு, சப்பாத்தி ஆகியவை பரிமாறப்பட்டன. சாப்பிட ஆரம்பிக்க, மத்தியில் காலியாக இருந்த ஆசனத்தில் அமரவேண்டிய விருந்தாளியைத் தவிர வேறெதுவும் தேவைப்படவில்லை!

விருந்தாளி யாராவது வருவாரென்று எல்லாரும் காத்திருந்தனர். எனக்கே மனத்தில் சந்தேகம் துளிர்விட ஆரம்பித்தது. வாயிற்படியைப் பார்த்துக்கொண்டு எவ்வளவு நேரந்தான் காத்திருப்பது?