valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 30 November 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

"ஒரு ராமதாசிக்கு 'என்னுடையது' என்ற எண்ணமே உதவாது. எதையும் எல்லாரையும் சமபாவனையாகப் பார்க்க வேண்டும். நீரோ இந்தப் பையனின் மேல் அபரிமிதமான விஷத்தைக் கொட்டிவிட்டீர். போதியைப் பிடுங்குவதற்கு அவனுடைய கையை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறீர் ! -

"போய், உம்முடைய இடத்தில அமர்ந்துகொள்ளும். போதிகளை டஜனாக வாங்கினால் மலிவாகவே வாங்கலாம். ஆனால், உலகமெங்கும் தேடினாலும் ஆத்மவிசாரம் செய்யும் ஒரு நல்ல மனிதன் கிடைப்பது கடினம். -

"உம்முடைய போதி எவ்வளவோ மஹத்தானதாக இருக்கலாம்; ஆனால், சாமா எதையும் அறிந்தானில்லை. மேலும், நான்தான் அதைத் தேர்ந்தெடுத்தேன்; நான்தான் அதை அவனுக்கு கொடுத்தேன்.-

"தவிர, உமக்கு அது மனப்பாடமாகத் தெரியும். ஆகவே நான் அதை சாமாவுக்கு கொடுக்கவேண்டுமென்று நினைத்தேன். அவன் அதைத் திரும்ப திரும்ப வாசித்து சகல மங்களங்களையும் அடையவேண்டும் என்பதே என் நோக்கம்."

ஆஹா! என்ன ரசமான பேச்சு! இனிமையானதும் புத்துணர்ச்சியை ஊட்டக் கூடியதுமான வார்த்தைகள். ஆத்மானந்தத்திற்கு நிகராகக் குளிர்ச்சியளிக்கும் மிக அபூர்வமான வார்த்தைகள்!

ராமதாசி மனத்தளவில் தம்முடைய குற்றத்தை உணர்ந்துவிட்டார். மாதவாரவிடம் கடுகடுவென்று சொன்னார், "இதோ பார், நான் உனக்குச் சொல்கிறேன்; உன்னிடமிருந்து போதிக்குப் பதிலாக 'பஞ்சரத்னி கீதையை' எடுத்துக் கொள்ளப் போகிறேன்!"

ராமதாசி இம்மட்டிற்கு சாந்தமடைந்ததைக் கண்ட மாதவராவ் மகிழ்ச்சி அடைந்தார். அவர் சொன்னார், "ஒன்றென்ன, பத்து கீதைப் பிரதிகளை போதிக்குப் பதிலாக அளிக்கிறேன்!"

பின்னர், பஞ்சரத்னி கீதை ஜாமீனாக விளங்க, இச்சண்டை மெதுவாக ஓய்ந்தது. கீதையினுள் இருக்கும் இறைவனை அடையாளம் காணமுடியாதவர்க்கு அந்த நூல் எதற்கு?

பாபாவின் அருகில் அமர்ந்துகொண்டு அத்யாத்ம ராமாயணத்தைத் திரும்பத் திரும்ப பாராயணம் செய்யும் ராமதாசி, பாபாவிடமேவா இவ்வாறு சண்டைக்குப் போக வேண்டும்?

ஆயினும், நான் எப்படி இதைகூடச் சொல்லலாம்? நான் எப்படி யார்மீதும் பழி சொல்லமுடியும்? ஏனெனில், இந்நிகழ்ச்சிகள் நடந்திராவிட்டால் மற்றவர்களுக்கு விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் மகத்துவம் எவ்வாறு சென்றடையும்?

பாபாவின் இன்னலைக் களைந்ததும் (இதய படபடப்பு), எனக்கு அநேக நற்பயன்களை அளிப்பதும், இந்தச் சண்டையைக் கிளப்பிவிட்டதுமான விஷ்ணு சஹஸ்ர நாமம் உண்மையிலேயே இவ்வுலகத்தியது அன்று; சாயியால் அளிக்கப்பட்ட பரிசே.