ஷீர்டி சாயி சத்சரிதம்
இந்த வஸ்துவுக்கு மரண அவஸ்தை உண்டு என்று சொல்வது அடியோடு மாயை. காலனை வென்றவர்களை மரணம் எப்படித் துன்புறுத்த முடியும்?
பிரார்த்தம் (பிராப்தம்) என்றாலோ, சஞ்சிதம் என்றாலோ, என்னவென்று யான் அறியேன். கிரியமாணம் என்றாலும் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆயினும், குருராஜரான சாயி கருணாகரர் என்பது நன்கு தெரியும். அவரிடம் கருணை வேண்டவும் தெரியும்.
வாசனைகளின் அலைகள் நானாவிதமாகப் பொங்குவதால் மனம் சாந்தியடையமாட்டேன் என்கிறது. தேவரீர் கருணை காட்டாவிடின் இந்த ஜீவன் நிலைகொள்ளாது.
கடந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் அளித்த வாக்கை என்னால் பாலனம் (பாதுகாப்பு) செய்யமுடியவில்லை. ஆகவே, விவரணம் நிறைவடையவுமில்லை. ஆதியிலிருந்து அந்தம் வரை இப்பொழுது சம்பூர்ணமாகக் கேளுங்கள்.
அந்திமகாலம் நெருங்கிவிட்டதென்று அறிந்து ஒரு பிராமணரை ராமாயணம் வாசிக்கச் சொல்லி, பதினான்கு நாள்கள் இரவுபகலாக இடையறாது பாபா செவிமடுத்தார்.
இவ்வாறு இரண்டு ராமாயண சப்தாஹங்கள் கேட்டு முடிந்த பிறகு, விஜயதசமி நாளன்று பாபா பூதவுடலை உதிர்த்தார்.
பாபா உயிர்நீத்த பிறகு லக்ஷ்மன் மாமா பூஜை செய்ததும் ஜோக் நீராஞ்சன ஆரத்தி செய்ததும் கடந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டன.
அதன் பிறகு, பாபாவின் பூதவுடலுக்கு எங்கு, எவ்வாறு நற்கதி அளிப்பது என்பதுபற்றிய பேச்சுவார்த்தை இந்துக்களுக்கும் முஸல்மான்களுக்கும் இடையே 36 மணி நேரம் நிகழ்ந்தது.
சமாதி செய்யப்படவேண்டிய இடம் முன்கூட்டியே (பாபாவால்) திட்டப்பமிடப்பட்டது பற்றியும், எதிர்பாராதவிதமாக செங்கல் கீழே விழுந்து உடைந்த சங்கதியும், பாபா ஒருசமயம் மூன்று நாள்களுக்கு நிர்விகல்ப சமாதியில் ஆழ்ந்த விஷயமும்,-
அது சமாதி நிலையா மரணமா என்று எல்லாரும் சந்தேகப்பட்டதுபற்றியும், சுவாசம் நின்றுபோனதைக் கண்டு மீண்டும் உயிர்பெறுதல் நடக்காத காரியம் என்று அனைவரும் தீர்மானம் செய்த விவரமும்,-
அவ்வாறு மூன்று நாள்கள் கழிந்த பிறகு பாபா மரணமடைந்துவிட்டார் என்ற முடிவுக்கு அவர்கள் வந்ததும், உத்தரகிரியை பற்றிய பேச்சு சமத்த (எல்லா) மக்களிடையே இயல்பாக எழுந்ததும்,-