valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 4 January 2019


ஷீர்டி சாயி சத்சரிதம் 


பக்தன், தான் குருவோடு ஒன்றியவன் என்ற பாவனையிலேயே குருவை வழிபடுகிறான். குருவும் பக்தனைத் தன்னில் ஒன்றியவன் என்றே வழிபாட்டை ஏற்றுக்கொள்கிறார். இவ்வாறான பரஸ்பர சமரச பாவனை இல்லாவிட்டால் எல்லாச் செயல்பாடுகளும் கேவலம் வெளிவேஷமே!

வாழ்க்கைக்கு வேண்டிய உணவும் உடையும் எவ்வாறு கிடைக்கும் என்று ஒருகணமும் சிந்திக்க வேண்டா. ஏனெனில், அவை முற்பிறவியில் செய்த் கர்மங்களுக்கேற்றவாறு பிரயத்தனம் செய்யாமலேயே கிடைக்கும்.

இவற்றை சம்பாதிப்பதற்குப் பெருமுயற்சி எடுத்தீர்களானால் அத்தனையும் வீண். அதற்குப் பதிலாக ஆன்மீக வளர்ச்சியில் இரவு பகலாக கவனம் செலுத்துங்கள்.

"எழுமின்! விழிமின்! ஏன் குறட்டை விட்டுக்கொண்டு நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறீர்கள் ?" என்று வேதமாதா உச்சஸ்வரத்தில் கர்ஜிக்கிறாள். பிரேமையுடன் பக்தனைத் துயிலெழுப்ப முயல்கிறாள்.

எல்லா அனர்த்தங்களுக்கும் மூலவிதையாகிய அஞ்ஞான உறக்கத்தில் எவரெல்லாம் புரண்டு புரண்டு படுக்கிறார்களோ, அவரெல்லாம் சீக்கிரமாகவே துயில் விடுத்து, குரு அருளும் அமிருதத்தை பருகுவார்களாக !

அதை பெறுவதற்கு மிக விநயத்துடன் குருவின் பாதங்களில் சரணடையுங்கள். எது விதிக்கப்பட்டது, எது விதிக்கப்படாதது என்பதை அவரே அறிவார். நாம் ஒன்றுமறியாக் குழந்தைகள். 

அஹங்காரம் கொண்ட ஜீவன் சிறுமதி படைத்தது; அஹங்காரமே இல்லாத சிவம் அனைத்துமறிந்தது. இவ்விரண்டும் ஒன்றே என்று அறிந்துகொள்ள குருவே வழி. 

அஞ்ஞானத்தில் அமிழ்ந்திருக்கும் ஜீவனையும் மாயையைக் கடந்த சிவனையும் பேதமற இணைக்கச் செய்வதற்குண்டான சக்தி சமர்த்த குருராயரிடமே உண்டு. 

சங்கற்பங்களாலும் (திடசிந்தனை) விகற்பங்களாலும் (கோணல் சிந்தனைகளும் குழப்பங்களும்) நிறைந்து வழியும் மனத்தை சாயி பாதங்களில் சமர்ப்பித்துவிடுங்கள். அதன் பிறகு, 'மனதில் உதிக்கும் எண்ணங்களை செயல்படுத்துவது நான்தான்' என்னும் சிந்தனை ஒழிந்துவிடும். (சாயியே செயல்புரிபவர் ஆகிவிடுவார்).


அதுபோலவே, எல்லாச் செயல்புரியும் சக்திகளையும் சாயி பாதங்களில் சமர்ப்பித்துவிடுங்கள். பிறகு அவர் ஆணையிட்ட ரீதியிலேயே செயல்படுங்கள். 


சாயி சர்வசக்தியும் நிறைந்தவரென்பதை அறிந்துகொள்ளுங்கள். பாரத்தை அவர் மீது போட்டுவிட்டு அபிமானம் கொள்ளாது செயல் புரியுங்கள்; எல்லா சித்திகளையும் பெறுவீர்கள். 

மாறாக, மிகச் சிறிய அளவில் அபிமானம் ஒட்டிக்கொண்டிருந்தது. 'நான்தான் செய்கிறேன்' என்று நினைத்தால் ஒரு கணமும் தாமதமில்லாது உடனே அதனுடைய விளைவு தெரியும்.