valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 30 May 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

29 . கனவிலும் நனவிலும் அனுக்கிரஹம் (பகுதி 1 ) 

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும், என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

பாபாவின், கற்பனைக்கெட்டாத லீலைகளில் ஒன்றை இந்த அத்தியாயத்தில் சொல்கிறேன். விஷயம் அதுவேயானாலும் முந்தைய அத்தியாயத்தில் விவரிக்கப்பட்ட லீலைகளை காட்டிலும் இது மேலும் விசித்திரமானது.

பாபவின் அற்புதமான லீலைகளை பற்றி கேள்விப்பட்டு ஒரு பஜனை கோஷ்டி 1916 ஆம் ஆண்டு பாபாவை தரிசனம் செய்வதற்காக ஷிர்டிக்கு வந்தது.

மதராஸிலிருந்து காசி யாத்திரைக்காகக் கிளம்பிய இந்த கோஷ்டி பாபாவின் புகழைக் கேள்விப்பட்டு வழியில் ஷிர்டியில் இறங்கியது.

"சாயிபாபா ஒரு சிறந்த மஹான்; தீரம், உதாரம், தன்னடக்கம் போன்ற பல நற்குணங்களின் பெட்டகம். புனிதப் பயணிகளிடம் கிருபையுள்ளவர்; அவர்களுக்கு நிதியும் நிறைய அளிக்கிறார்.-

"ஒரு பைசா, ஓரணாவெல்லாம் ஒரு பொருட்டே அல்ல; நாலணா, எட்டணா காசுகள் மழையாகக் கொட்டும்! சிலருக்கு பத்து ரூபாய், இன்னும் சிலருக்கு இருபது ரூபாய், வேறு சிலருக்கு ஐம்பது ரூபாயும் கொடுக்கிறார். -

"இந்தக் காசுமழை ஏதோ விசேஷ நாள்களிலோ, பண்டிகைகளிலோ, தானம் செய்யவேண்டிய புண்ணிய காலங்களிலோ மட்டும் பொழியவில்லை. மேற்சொன்ன ரீதியிலும் அளவிலும் ஒவ்வொரு நாளும் பாபா சந்தோஷமாக கொடுக்கிறார். -

"பஹுட்களும், பவய்யாக்களும் (மராட்டிய கிராமிய கலைஞர்கள்) வந்து நடனமாடுவர்; பாடகர்கள் பாடுவார்கள்; நாடோடிப் பாவாணர்கள் புகழ் பாடுவர்; கேளிக்கைக்காரர்கள் தமாஷா செய்து அணிவகுப்பு நடத்தி மரியாதை செலுத்துவர்; ஹரி பக்தர்கள் மெய்மறந்து பஜனை செய்வர். -

"மஹராஜ் அவ்வளவு உதாரகுணம் படைத்தவர்; தானமும் தருமமும் அவரிடமிருந்து மழையாகப் பொழிகிறது!" இந்தக் கீர்த்தி காதுவழிச் செய்தியாக மதராஸ் பஜனை கோஷ்டியை அடைந்தது. ஆகவே, அவர்கள் பாபாவை தரிசனம் செய்யவேண்டுமென்று விரும்பினார்.