ஷீர்டி சாயி சத்சரிதம்
"ஹீனர்களும் தீனர்களுமாகிய நாங்கள் பாமர மக்கள்.  அனாதைகளாகிய எங்களிடம் கிருபை காட்டுங்கள்.  இன்றிலிருந்து நிரந்தரமாக தேவரீர் பாதங்களில் நாங்கள் அடைக்கலம் காண்போமாக.-
"விழிப்புநிலையிலும் சொப்பனநிலையிலும் எங்கள் மனத்தில் பலவிதமான எண்ண அலைகள் மோதிப் பகலிலும் இரவிலும் சிரமபரிஹாரம் (இளைப்பாறுதல்) கிடைக்காமல் செய்கின்றன.  ஆகவே, எங்களை உங்களுடைய வழிபாட்டுக்கு இழுங்கள்".
முரளீதரன் எனப் பெயரிடப்பட்ட மகன் பிறந்தது போல, காலக்கிரமத்தில் பாஸ்கரன், தினகரன் என்ற இரண்டு மகன்களும் பிறந்தனர்.  சபட்னேகர் பெருமகிழ்ச்சி அடைந்தார். 
இவ்வாறாக, தயை மிகுந்த சாயியை வந்தனம் செய்ததால், சஞ்சலமடைந்திருந்த தம் மனத்தை உறுதியாக்கிக்கொண்டும், வந்த காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொண்டும் சபட்னேகர் தம் மனைவியுடன் வீடு திரும்பினார். 
ஆரம்பத்தில், கதையைச் சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றே என் மனம் நினைத்தது.  ஆயினும், என்னைச் சொல்லவைப்பவர்  சாயிநாதர் என்ற காரணத்தால், கிரந்தம் (நூல்) விஸ்தாரமாகிவிட்டது. 
ஹேமாட் அவரிடம் முழுமையாக சரணடைந்து, அடுத்த கதையின் தாத்பரியத்தை (உட்கருத்தைக்) கதை கேட்பவர்களுக்கு கோடிட்டு காட்டுகிறேன். 
அடுத்த கதை இதனினும் சுவாரசியமானது.  ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சாயி, அற்புதங்களை பார்க்க விரும்பிய ஒரு பக்தரைத் திருப்தி செய்த காதை. 
சாயியின் பெருமையை மக்கள் பலர் போற்றுகின்றனர். ஆயினும், குற்றங்காணும் குணமுடையவனுக்கு குற்றந்தான் தெரியும்.  உலகியல் நாட்டமோ ஆன்மீக நாட்டமோ இல்லாதவனுடைய மனம் தோஷங்களை காண்பதில்தான் மகிழ்ச்சியடையும். 
"சாயி பாபா ஒரு ஞானியாக இருக்கலாம். ஆனால், எனக்கே ஓர் அனுபவம் ஏற்பட்டாலன்றி, அதை அவர் எனக்கு அளித்தாலன்றி, நான் அவரைச் சிறிதும் மதிக்கமாட்டேன்." இவ்விதம் நினைத்து, -
பரீட்சை செய்து பார்ப்பதற்கென்றே சென்றவரையும் அவர் திருப்தி செய்தார்! அடுத்த அத்தியாயத்தின் காதை இதுவே.  கதைகேட்கும் நல்லவர்களே, கவனத்துடன் கேளுங்கள். 
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு , சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'சந்தேகிகளுக்கும் அருள்' என்னும் நாற்பத்தெட்டாவது அத்தியாயம் முற்றும். 
 ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். 
சுபம் உண்டாகட்டும்.
 

