valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 2 August 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

தாயாரிடமிருந்து இக் கதையைக் கேட்ட பிதலே பரமானந்தம் அடைந்தார். சாயியின் எங்கும் நிறைந்திருக்கும் தன்மையும் தரிசனத்தால் விளைந்த நன்மையும் அவருடைய மனத்தில் அழியாத முத்திரை பதித்துவிட்டன.

தாயாரின் அமிருதமயமான வார்த்தைகள், பல ஆண்டுகளாக நசித்துப்போன தெய்வபக்தியை புத்துயிர் பெறச் செய்தன. பிராயச்சித்தம் (பாவத்தை போக்குவதற்கான சடங்கு) செய்யவேண்டுமென்ற மனோபாவமும் பச்சாதாபமும் எதிர்கால நல்வாழ்வுக்கு வழிவகுத்தன.

ஆகவே, எது நடக்கவேண்டுமோ அது நடந்துவிட்டது! தூங்கிக்கொண்டிருந்த தமது கடமையுணர்வை  சாயி பாபா எழுப்பிவிட்டது பற்றி பிதலே மிக்க நன்றியுடைவரானார். தம்முடைய கடமைகளை செய்வதில் கண்ணுங்கருத்தமாக வாழ்க்கை நடத்தினார்.

இப்பொழுது அதே போன்ற இன்னொரு நிகழ்ச்சிபற்றி சொல்கிறேன்; நிறைந்த மனத்துடன் கேளுங்கள். கட்டவிழ்ந்து தெறித்தோடிய பக்தர்களின் மனத்தை பாபா எவ்வாறு அடக்கி அமைதியுறச் செய்தார் என்பதை இக்காதை காட்டும்.

கோபால் ஆம்ப்ட்டாகர் நாராயண் என்றொரு சிறந்த பக்தர் பூனாவில் வாழ்ந்து வந்தார். அவருடைய கதையை பயபக்தியுடன் கேளுங்கள்.

அவர் பிரிட்டிஷ் ராஜாங்கத்தின் கலால் வரி இலாகாவில் (Excise Department ) உத்தியோகம் பார்த்து வந்தார். பாத்து ஆண்டுகள் வேலை பார்த்த பிறகு உத்தியோகத்தை விட்டுவிட்டு, வேறு வேலை ஏதும் பாராமல் வீட்டிலேயே இருந்தார்.

அவருக்கு கெட்டகாலம் தொடங்கியது. வாழ்நாள் முழுவதும் சீராக ஒரே மாதிரியாக அமையுமோ? நவகிரகங்கள் விளைவித்த சுழற்சியில் மாட்டிக்கொண்டார். யார்தான் விதியின் பயனை அனுபவிக்காது தப்பிக்க முடியும்?

அவர் ஆரம்பகாலத்தில் தானே ஜில்லாவில் வேலை செய்தார். பிறகு, ஜவஹர் ஜில்லாவில் வேலை செய்ய நேர்ந்தது. அங்கு அவர் ஆஃபீசராக உத்தியோகம் பார்த்தார். பிறகு வேலையே இல்லாமல் போய்விட்டது.

உத்தியோகம் என்பது தாமரை இலையின்மேல் ததும்பும் நீர்த்துளி அன்றோ! அது எவ்வாறு பழைய இடத்துக்கே திரும்பும்? அந்த சமயத்தில் தீவிரமாக பிரயத்தனங்கள் செய்தார்.

ஆனால், அவருக்கு அதிருஷ்டமில்லை! ஆகவே, அவர் தமது சுதந்திரத்தை காத்து கொள்வதென்று முடிவு செய்தார். துன்பத்திற்குப் பின் துன்பம் தொடர்ந்தது; அவர் எல்லாவிதத்திலும் சோர்வடைந்து விட்டார்.

வருடாவருடம் நிதிநிலைமை படிப்படியாக க்ஷணமடைந்தது.(நசித்தது). ஆபத்துகள் வரிசையாக தொடர்ந்தன. குடும்ப நிலைமை சகிக்கமுடியாதபடி ஆகிவிட்டது.

ஏழு ஆண்டுகள் இவ்வாறு கழிந்தன. ஒவ்வோர் ஆண்டும் ஷிர்டிக்குச் சென்று பாபாவிடம் தம்முடைய துன்பங்களை பற்றி ஒப்பாரி வைத்தார். இரவுபகலாக பாபாவை வணங்கினார்.