ஷீர்டி சாயி சத்சரிதம்
யாரை பாபா அரவணைக்கிறாரோ, அவர் தம்முடைய வீட்டிலிருந்தாலும் சரி, ஏதோ தீவிலிருந்தாலும் சரி, சர்வ நிச்சயமாக சாயி அவரருகில் இரவும் பகலும் இருக்கிறார்.
பக்தர் எங்கே சென்றாலும் எவ்விடத்தில் இருந்தாலும், சாயீ அவருக்கு முன்னமேயே அங்கே சென்று சற்றும் எதிர்பாராத வகையில் தரிசனம் அளிக்கிறார்.
இப்பொழுது அதே முக்கியத்துவத்துடன் ஒரு புதுமையான காதை சொல்லுகிறேன். இதைக் கேட்பவர்கள் ஆச்சரியத்திலாழ்த்து மனமகிழ்ச்சி அடைவார்கள்.
நம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும் சாயியின் இவ்வமுதமொழிகளைக் கேட்பவர்கள் ஆத்மானந்தத்தில் பொங்குவார்கள். யோகசமாதி நிலை அளிக்கும் ஆனந்தங்கூட இந் நிலைக்கு ஈடாகாது.
அற்புதமான திருப்பங்களைக் கொண்ட இவ்வினிமையான காதை, கேட்பவருடைய இதயத்தில் உணர்ச்சி பொங்கும்படி செய்து தம்மையே மறக்கச் செய்யும்.
காகசாஹெப் தீக்ஷிதரின் மூத்த மகன் பாபுவிற்கு உபநயனம் (பூணுல் கலியாணம்) நாக்பூரில் நடத்தப்படவேண்டுமென்று நிச்சயிக்கப்பட்டது.
அதுபோலவே, நானா சாந்தோர்க்கரின் மூத்த மகனின் திருமணமும் குவாலியர் நகரத்திற்குச் சென்று நடத்தப்படவேண்டுமென்று நிச்சயிக்கப்பட்டது.
பூணுல் கலியாணத்தை முடித்துவிட்டு, குவாலியரில் நடக்கும் கலியாணத்திற்கு தீக்ஷிதர் நேரத்தில் வந்துசேர இயலாது என்று சாந்தோர்க்கருக்குத் தோன்றியது.
இதைத் தவிர்ப்பதற்காக, நாக்பூரிலிருந்து குவாலியருக்கு உரிய நேரத்தில் சௌகரியமாக தீக்ஷிதர் வந்து சேரும் வகையில், இருதரப்பினருக்கும் வசதியான ஒரு முகூர்த்த நாள் நிச்சயிக்கப்பட்டது.
இதன் பிறகு, பக்தமணியான சாந்தோர்க்கர் சாயியை தரிசனம் செய்யவும், மகனின் கலியாணத்திற்கு வரும்படி அவரை நேரில் அழைப்பதற்காகவும் உற்சாகத்துடன் ஷிர்டிக்கு வந்தார்.
தீக்ஷிதர் ஏற்கெனவே ஷிர்டியில் இருந்தார். சாந்தோர்க்கர் மசூதிக்குச் சென்று கைகூப்பி வணங்கி பாபாவைக் கலியாணத்திற்கு விஜயம் செய்யுமாறு வேண்டிக்கொண்டார்.
பாபா சிறிது யோசித்துவிட்டு, "சரி, சரி, சாமாவை உம்முடன் அழைத்துச் செல்லும்" என்று சொன்னார். இரண்டு நாள்கள் களைத்து தீக்ஷிதரும் பாபாவைத் தம் மகனின் பூணுல் கலியாணத்திற்கு விஜயம் செய்யும்படி வேண்டிக்கொண்டார்.
அவருக்கும் பாபாவை, "சாமாவை உம்முடன் அழைத்துச் செல்லும்" என்று அதே பதிலை அளித்தார். தீக்ஷிதர் பாபவையே நேரில் வரும்படி மன்றாடி வேண்டினார்.
அதற்கும் பளிச்சென்று பதில் வந்தது, "காசிக்கும் பிரயாகுக்கும் (அலஹாபாத் - திரிவேணி சங்கமம் ஆகும் இடம் ) வேகமாகச் சென்றபின் சாமாவுக்கும் முன்னாடி நான் வந்து சேருவேன். நான் அங்கு வருவதை யாரால் தாமதம் செய்ய இயலும்?"
கதைகேட்பவர்கள் இங்கே கவனமாகக் கேட்டு இவ்வார்த்தைகளின் பரிமாணத்தை நன்றாகக் புரிந்து கொள்ளவேண்டும்; அப்பொழுதுதான் இவ்வார்த்தைகளில் பொதிந்திருக்கும் உண்மையையும் பாபா எங்கும் நிறைந்திருப்பதையும் நன்கு உணரமுடியும்.