valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 18 January 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


சிஷ்ய பரிவாரத்துடன் சமாதிக்கு முன்பாக நின்றுகொண்டு இரவுபகலாக பஜனையும் கீர்த்தனையும் பாடினார். அவ்வப்பொழுது பக்தர்கள் கூட்டம் நாமகோஷம் செய்தது.

தாசகணு, ஹரிநாமம் என்னும் பூக்களால் தம்முடைய கைகளாலேயே மிக மனோஹரமான மாலையொன்றைத் தொடுத்துப் பிரேமையுடன் சமாதிக்கு அணிவித்தார். அன்னதானமும் செய்தார்.

அகண்ட பஜனையின் கோஷம் ஷிர்டியைப் பூலோகவைகுண்டம்போல் தோற்றுவித்தது. தாசகணு வாரிவழங்கிய நாமகோஷம் ஷீர்டி கிராமத்தையே நிரப்பியது.

ஆயினும், பாபாவுக்கென்ன விஜயதசமிநாளின்மீது பிரீதி? வருடத்தின் மிகச் சிறந்த சுபமுகூர்த்த தினங்களான மூன்றரை நாள்களில், இந்த நாள் (விஜய தசமி), பிரயாணம் கிளம்புவதற்கு விசேஷமான சுபதினமாகக் கருதப்படுகிறது. இது அனைவர்க்கும் தெரிந்ததே.

இருந்தபோதிலும், இவ்வாறு சொல்வது பிரம்மாணமாகாது. போவது வருவது என்று ஒன்றும் இல்லாதவற்குப் புறப்பாடு என்று ஒன்று எப்படி இருக்க முடியும்? அத்தகையவர்க்கு சுபதினத்தில் என்ன பிரயோஜனம்?

எவர் எல்லாம் பற்றுக்களையும் துறந்தவரோ, எவர் தர்மம், அதர்மம் என்னும் பந்தங்களிலிருந்து விடுபட்டவரோ, எவருடைய பிராணனுக்கு வெளியேறுவது என்பது இல்லையோ, அவருக்கென்ன கடைசிப்பயணம்?

"பிரம்மத்தோடு ஒன்றாகியவர் பிரம்மத்தை அடைகிறார்". இதுவே சாயி மஹாராஜின் நிலை. அவருக்குப் போவதோ வருவதோ இல்லை. இவ்வாறிருக்க, அவர் நிர்ணய நிலையை அடைவதெப்படி?

உத்தாராயணமாக இருந்தாலென்ன, தக்ஷிணாயணமாக இருந்தாலென்ன? தீபம் அணையும்போது, ஒளி தீபத்தினுள்ளேயே சென்றுவிடுவதுபோல், இருந்த இடத்திலேயே பிரம்மத்தில் ஐக்கியமானவருக்குப் பிரயாணம் என்று ஏதும் இல்லையே!

மனிதவுடல் கேவலம், பஞ்சபூதங்களில் இருந்து கடன்வாங்கப்பட்ட பொருள். வேலை முடிந்தபிறகு எவரெவர்களுக்குச் சொந்தமோ அவரவர்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டியதுதானே!

வரப்போகும் நிகழ்ச்சிக்கு பாபா முன்னதாகவே சூசகமாக எச்சரிக்கை விடுத்து மக்களை வியப்படையச் செய்தார். அந்தப் பொன்னான வேளை தன்னுடைய கீர்த்தியை ஸ்தாபித்துவிட்டுப் போய்விட்டது.

ஜுரம் வந்தது ஒரு நிமித்த காரணமே (சாக்குபோக்குதான்). உலகியல் ரீதியையொட்டி பாபா சிலசமயம் முக்கினர்; சிலசமயம் முனகினார். ஆனால், எப்பொழுதும் உள்ளுக்குள் தெளிவான மனத்துடன் இருந்தார்.