ஷீர்டி சாயி சத்சரிதம்
"மேலும், இங்கு நாம் உட்கார்ந்து, எழுந்து, நடமாடும்போது நம்முடைய சுகதுக்கங்கள்பற்றி உரையாடுவோம். இவ்விடத்திலேயே ஆண் பெண் அனைத்து மக்களும் மன அமைதி பெறுவர்."
பாபா இதைச் சொன்ன காலத்தில், ஏதோ பேசவேண்டுமென்பதற்காக பாபா இவ்வாறு பேசினார் என்றே அனைவரும் நினைத்தனர். பிற்காலத்தில் நேரிடை அனுபவம் ஏற்பட்டபோது அவ் வார்த்தைகளின் சூக்குமப் பொருளைப் புரிந்துகொண்டனர்.
பாபா காலமானதால் முரளீதரர் சிலை ஸ்தாபனம் நடக்கவில்லை. அதற்குப் பதிலாக சாயீ என்னும் பொக்கிஷத்தைப் பாதுகாக்க அவ்விடமே உத்தமமான தலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
"இந்த சரீரத்தை வாடாவில் வையுங்கள்" என்ற பாபாவின் கடைசி உத்தரவே இறுதி முடிவாயிற்று. பாபாவே முரளீதரர் ஆனார்!
ஸ்ரீமான் புட்டி இந்த முடிவை விரும்பினார். இந்துக்களும் முசல்மான்களும் அனைத்து மக்களும் இந்தத் திட்டத்தில் ராஜியாயினர் (சமாதானமாகி ஒன்றுபட்டனர்), புட்டிவாடா ஒரு நல்ல காரியத்திற்கு உபயோகமாயிற்று.
அவ்வளவு விலையுயர்த்த மாளிகை இருந்தபோது, பாபாவின் தேகத்தை வேறெங்காவது அடக்கம் செய்திருந்தால், அந்த மாளிகை சூனியமாகிப் போயிருக்கும், பாழடைந்த காலிக் கட்டடமாக காட்சி அளித்திருக்கும்.
இன்று அங்கு நடக்கும் பூஜைக்கும் பஜனைக்கு கதாதீர்த்தனத்துக்கும் ஆன்மீகப் பேருரைக்கும், அதிதியாக அங்கு வரும் பக்தர்களுக்கு செய்யப்படும் அன்னதானத்திற்கும், அனைத்திற்கும் சாயியே காரணம்.
இன்று அங்கு நடக்கும் அன்னசந்தர்ப்பணம் (பல மக்களுக்கு அன்னமிட்டு மகிழ்வித்தல்), நாட்டின் பல பகுதிகளிலிருந்து வரும் பக்தர்கள் செய்யும் லகுருத்ர-மஹாருத்ர பாராயணம், ஹோமங்கள், இவையனைத்திற்கும் சாயியே காரணம்.
ஆகவே, ஒரு ஞானியின் திருவாய்மொழியைக் காதுகளால் கேட்டு ஒவ்வொரு எழுத்தையும் கவனத்தில் வைக்கவேண்டும். ஏதோ சொல்கிறார் என்றெண்ணி அச் சொற்களை அவமதிக்கவோ கைவிடவோ செய்யாதீர்.
ஆரம்பத்தில் முட்டாள்தனமாகவும் துர்போதனையாகவுங்க்கூட தோன்றலாம். காலம் செல்ல செல்ல அவற்றின் உட்கருத்து விளங்கும்.
தேகம் விழுவதற்கு சில நாள்களுக்கு முன்னர், ஷிர்டியின் மசூதியில், வரப்போகும் நிகழ்ச்சியைக் கோடிகாட்டும் வகையில் சில துர்ச்சகுனங்கள் நிகழ்ந்தன.
அவற்றில் ஒன்றை மட்டும் கேட்பவர்களுக்கு தெரியப்படுத்துகிறேன். ஏனெனில், அவை அனைத்தையும் விவரமாகச் சொல்லப் புகுந்தால் இந்த நூல் மிக விஸ்தாரமானதாக ஆகிவிடும்.