ஷீர்டி சாயி சத்சரிதம்
"இறைவா! இது என்ன சித்திரம்?" பாபா படத்தைப் பார்த்துவிட்டு சபட்னேகரைச் சுட்டிக்காட்டியவாறு பதிலளித்தார், "இது அவர் நண்பரின் படம்"
இவ்வாறு சொல்லிக்கொண்டே பாபா நகைத்தார். கூடியிருந்தவர்களுக்கும் சிரிப்பு வந்தது. "பாபா, இதன் இங்கிதம் (குறிப்பு) என்னவோ?" என்று பாலா சிம்பி பாபாவை வினவினார். (பாபாவிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை).
உடனே பாலா சிம்பி சபட்னேகரிடம் சொன்னார், " தரிசனம் செய்துகொள்ளுங்கள்; சீக்கிரம்." ஆனால், நமஸ்காரம் செய்தபொழுது ,, "போ வெளியே " என்ற முழக்கத்தை சபட்னேகர் செவிமடுத்தார்.
"அய்யகோ! அதே 'போ வெளியே ' இன்னும் என்னைப் பின்தொடர்கிறதே! இப்பொழுது நான் எவ்வழி செல்வேன்?" இதுவே சபட்னேகரின் பெருவியப்பு.
அவர்கள் இருவரும் பாபாவின் எதிரில் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தபோது பாபா அவர்களுக்கு ஆணையிட்டார், "இங்கிருந்து உடனே வெளியே போய்விடுங்கள்!"
"சமர்த்த ஸ்வாமியே! உம்முடைய ஆணையை எப்பொழுதும் எவராலும் தாண்டமுடியாது. இவ்வாறிருக்கையில், பாமரர்களாகிய எங்களுடைய கதை என்ன! இக்கணமே நாங்கள் வெளியேறிவிடுகிறோம். -
"பெரும் உதாரகுணம் படைத்தவரென்று கேள்விப்பட்டு தரிசனம் செய்ய வந்தோம். ஆனால், "போ வெளியே " என்ற வார்த்தைகளால் வரவேற்கப்பட்டோம்! இதில் பொதிந்துள்ள ரகசியம் என்னவென்றும் அறியோம்.-
"எங்களைக் கருணையுடன் நோக்குங்கள். நாங்கள் கூடிய சீக்கிரம் மறுபடியும் வந்து உங்களை தரிசனம் செய்ய வேண்டுமென்று ஆசியளியுங்கள்." அவர்கள் வேண்டிக்கொண்ட ஆறுதல் மேற்கண்டவாறு.
பாபாவின் மனத்தில் என்ன எண்ணம் இருக்கிறது என்பதை அறியும் சக்தியுடைய ஞானியும் உண்டோ ! ஆகவே, ஆணைக்கு அடிபணிந்து இருவரும் அவரவர் வசிப்பிடங்களுக்குச் சென்றனர்.
பாபாவின் முதல் தரிசனம் இவ்வாறு நிகழ்ந்தது, இருவரையும் வருத்தமடையச் செய்தது. தாமதம் ஏதும் செய்யாமல், இருவரும் அவரவர் கிராமத்தைச் சென்றடைந்தனர்.
மேலும் ஓராண்டு கழிந்தது. ஆனபோதிலும், சபட்னேகரின் மனம் உறுதிப்படவில்லை. மறுபடியும் கண்காபூருக்குச் சென்றார். மனக்கலக்கம் அதிகரித்தது.
ஓய்வெடுப்பதற்காக மாடேகாங்விற்குச் சென்றார். கடைசியில் காசி க்ஷேத்திரத்திற்குச் செல்வதென்று முடிவெடுத்தார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
காசிக்குப் புனிதப் பயணமாகக் கிளம்புவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு அவர் மனைவிக்கு ஒரு தெய்வீகக் காட்சி கிடைத்தது. காசிப் பயணம் நிறுத்தப்பட்டது!
ஆச்சரியமளிக்கக்கூடிய அந்த தெய்வீகக் காட்சி ஏற்பட்டது எப்படியென்ற புதினத்தை விவரிக்கிறேன். சாயியின் லீலைகளைக் கவனத்துடன் கேளுங்கள்.
சபட்னேகரின் மனைவி படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்தபோது, ஒரு குடத்தை எடுத்துக்கொண்டு 'லக்கட்சா ' வின் கிணற்றுக்குத் தாம் செல்வதுபோல் கனவொன்று கண்டார்.