valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 27 September 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஓ சாயிநாதரே! என்னைக் காத்தருள ஓடி வாரும்! உமது பாதங்களில் என் தலையைச் சாய்த்துவிட்டேன். அனைத்து அபராதங்களையும் (குற்றங்களையும்) மன்னித்து, இவ்வடிமையின் சஞ்சலங்களையும் கவலையையும் நிவாரணம் செய்யுங்கள்.

பல சங்கடங்களால் துன்பமுற்ற பக்தன், இவ்விதமாக சாயியை அழைத்தால் தன்னுடைய உளையும் மனதிற்கு சாந்தியை அளிக்கக்கூடிய சக்தி பெற்ற ஒரே தருமவானை சாயியின் காண்பான்.

தயாசாகரமான சாயி எனக்குச் செய்த கிருபையால்தான் என்னால் வாசகர்களுக்கு இந்த மங்களமான காவியத்தை அளிக்கமுடிகிறது.

இல்லையெனில், எனக்கு என்ன பவிசு இருந்தது? யார் இந்த மிக சிரமமான பணியைத் தலைமேல் ஏற்றுக்கொள்வார்? ஆனால், சாயி தம்முடைய வேலைக்குத் தாமே பொறுப்பு ஏற்றுக்கொள்ளும்போது, அது எனெக்கென்ன பாரம்?

அஞ்ஞான இருளை அழிப்பவரும் ஞானதீபமுமாகிய  சமர்த்த சாயி என்னுடைய எழுத்துக்கு ஒளியூட்டும்போது எனக்கென்ன சந்தேகம் வரமுடியும்?

தயாநிதியான என் பிரபுவின் மேல் பாரத்தை போட்டுவிட்ட நான் அணுவளவும் சிரமப்படவில்லை. அவருடைய கிருபை என்னும் பிரகாசத்தினால் என்னுடைய இதயத்தின் தாபம் நிறைவேறிவிட்டது.

புத்தக ரூபத்தில் சாயிக்குச் செய்யும் சேவை எனது பூர்வஜென்ம புண்ணியங்களின் பலத்தால் விளைந்ததே. இறைவா! தேவரீர் இந்த எளிய சேவையை ஏற்றுக்கொள்வதற்கு யான் என்ன பேறு பெற்றேன் ஐயனே!

தயாசகரமான சாயி பலவிதமான தெய்வீக காட்சிகளை அளித்து பக்தர்களுக்குப் பிரதானமான போதனைகள் அருள் செய்ததுபற்றிக் கடந்த அத்தியாயத்தில் கேட்டீர்கள்.

இந்த அத்தியாயத்திலும், சப்தசிருங்கி தேவி உபாசகர் ஒருவரின் மிக சுவாரஸ்யமானதும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதுமான கதையைக் கேளுங்கள்.

தேவர்களும் தேவிகளும் தங்களுடைய பக்தர்களை ஞானியரின் கைகளில் ஒப்படைக்கும் அதிசயத்தை பயபக்தியுடன் கேளுங்கள்.

ஒன்றைவிட மற்றொன்று அற்புதமானதாக, மஹாராஜின் கதைகள் எத்தனையோ உண்டு. இந்தக் கதை கேட்பதற்குகந்தது. ஒருமுகப்பட்ட மனத்துடன் கேளுங்கள்.

இது வெறும் கதையன்று; அமிருத பானம். சாயியின் மகிமையையும் எங்கும் நிறைந்த தன்மையையும் எடுத்துக்காட்டும். கேட்பவர்கள் மனநிறைவு பெறுவர்.

தர்க்கவாதிகளுக்கும் விமரிசகர்களுக்கும் இக் கதை வேண்டா. வாதப்பிரதிவாதங்களுக்கும் இங்கு இடமில்லை. தேவை, அளவற்ற பிரேமையும் பக்தியுமே!

கேட்பவர் புத்திசாலியாகவும் அதே சமயம் பக்தராகவும் இருக்கவேண்டும்; விசுவாசமும் சிரத்தையும் வேண்டும்; ஞானிகளின் தொண்டராகவும் இருக்கவேண்டும். மற்றவர்களுக்கு இக்கதைகள் மாயையாகத் தோன்றும்.