valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 20 December 2018

ஷீர்டி சாயி சத்சரிதம் 

ஒருமுறை காபர்டேவின் மனைவி ஒரு தட்டில் பலவகையான சுவைமிகுந்த உணவுப் பொருள்களையும் இனிப்புகளையும் பாபாவுக்கு நைவேத்தியாமாகக் கொண்டுவந்தார். சாதம், பருப்பு, பூரி, ரவாகேசரி, சாஞ்சா, பாயாசம், அப்பளம், பூசணி வடகம், கோசுமல்லி ஆகிய பண்டங்கள் அந்தத் தட்டில் இருந்தன. 

அந்தத் தட்டு வந்தவுடனே பாபா தம் கப்னியின் கைகளை மடித்துவிட்டுக் கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் இறுக்கியில் இருந்து எழுந்துவிட்டார். 

சாப்பிடும் இடத்திற்குச் சென்று அமர்ந்துகொண்டார். அந்தத் தட்டைத் தம்மெதிரில் எடுத்துவைத்துக் கொண்டார். தட்டிலிருந்த உணவைச் சுவைக்கும் ஆர்வத்தில் மூடியை எடுத்து அப்பால் வைத்தார். 

சுவை மிகுந்ததாக எத்தனையோ நைவேத்தியங்கள் தினமும் வரும். அவையெல்லாம் பாபாவின் கவனிப்பின்றி அங்கேயே நெடுநேரம் கிடக்கும். இந்தத் தட்டின் மீது மாத்திரம் ஏன் இவ்வளவு ஆர்வம்? 
 
இது சாதாரணர்களின் நடத்தையன்றோ ! ஒரு ஞானி ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறார்? மாதவ்ராவ் சட்டென்று சமர்த்த சாயியைக் கேட்டார், "பாபா, ஏன் இவ்வாறு பாரபட்சம் காட்டுகிறீர்?-

"மற்றவர்களுடைய நைவேத்தியத்தைத் தள்ளிவைத்துவிடுகிறீர். சிலசமயங்களில் வெள்ளித்தட்டுகளையும் விசிறியடித்து விடுகிறீர். இந்தப் பெண்மணியின் (காபர்டேவின் மனைவியின்) நைவேத்தியம் வந்தவுடனே உற்சாகமாக எழுந்து உணவுகொள்ள ஆரம்பிக்கிறீர். உண்மையில் இது ஒரு வினோதம்!-

"ஓ தேவா! இந்தப் பெண்மணியின் உணவுமட்டும் எப்படி அவ்வளவு சுவை மிகுந்ததாக அமைகிறது என்பது எங்களுக்கெல்லாம் விளங்காத மர்மமாக இருக்கிறது. இதென்ன நீர் செய்யும் தில்லுமுல்லு வேலை? ஏன் இவ்வாறு விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்கிறீர்?"

பாபா சொன்னார், "ஓ சாமா ! இந்த உணவு எவ்வளவு அபூர்வமானது என்பதை நான் எவ்வாறு விளக்குவேன்? முற்பிறவியில் இப் பெண்மணி ஒரு வியாபாரியின் பசுவாக இருந்தால். நல்ல ஊட்டமளிக்கப்பட்டு நிறைய பால் கொடுத்தாள்.-

"பிறகு அவள் எங்கோ காணாமற்போய் ஒரு விவசாயியின் குடும்பத்தில் பிறந்தால். அடுத்த ஜென்மத்தில் க்ஷத்திரிய வம்சத்தில் பிறந்து ஒரு வைசியனுக்கு மணம் செய்விக்கப்பட்டாள்.-

"இந்த ஜென்மத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்திருக்கிறாள். பல காலத்திற்குப் பிறகு அவளை நான் கண்டேன். மிகுந்த பிரேமையுடன் அளிக்கப்பட்ட இந்த உணவில் இரண்டு கவளமாவது என்னை நிம்மதியாகவும் மகிழ்ச்சியுடனும் சாப்பிட விடு!"

இவ்வாறு பதிலளித்தபின், பாபா தாம் திருப்தியடையும்வரை உணவுண்டார். கைகளையும் வாயையும் அலம்பிக்கொண்டபின், வயிறு நிரம்பியதன் அறிகுறியாக ஏப்பம் விட்டார். பிறகு அவர் தம்முடைய இருக்கைக்குச் சென்று அமர்ந்துகொண்டார். 

காபர்டேவின் மனைவி பாபாவுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு அவருடைய பாதங்களை பிடித்துவிட ஆரம்பித்தாள். இந்த நல்வாய்ப்பைப்  பயன்படுத்திக்கொண்டு அவளிடம் பரிவுடன் இனிமையாகப் பேசினார் பாபா.