ஷீர்டி சாயி சத்சரிதம்
தாமே இறையனுபவம் பெறாதவர், சிஷ்யனுக்கு என்ன அளிக்க முடியும்? எவருக்குப் பிரதட்சயமான இறையனுபவம் இல்லையோ, அவரை எக்காலத்தும் சத்குரு என்று அழைக்கலாகாது.
எவர், தம் சிஷ்யனிடமிருந்து சேவை பெறவேண்டுமென்று கனவிலும் நினைக்காமல், அதற்கு மாறாக, சிஷ்யனுக்காகத் தமது உடலை ஓடாகத் தேய்க்க விரும்புகிறாரோ அவரையே ஒரு சத்குருவென்று அறிவீராக.
'சிஷ்யன் ஒரு துரும்பு, குருவோ உத்தமர்களில் உத்தமமானவர்' என்ற அகம்பாவம் இல்லாத சத் குருவே நன்மை செய்யக்கூடியவர்.
சிஷ்யனை முழுமுதற்பொருளாகக் கருதி அவனைத் தம் மகனைப்போல நேசித்துத் தம்முடைய வாழ்க்கைத்தேவைகளுக்காக சிஷ்யனிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத சத் குருவே, இப்புவியில் பரம சிரேஷ்டமானவர் (தலைசிறந்தவர்).
பரம சாந்தியின் இருப்பிடமானவரும், ஞான கர்வம் இல்லதாவரும், சிறியோரையும் பெரியாரையும் சரிசமமாக மதிப்பவருமாகிய சத்குரு எனக் கொள்வீராக.
இவையே ஒரு சத்குருவின் சர்வசாதாரணமான லக்ஷணங்கள். இவற்றைத் தொகுத்துச் சுருக்கிக் கதைகேட்பவர்களுக்கு அடியேன் அளித்திருக்கிறேன்.
ஏற்கெனவே சாயிதரிசனம் செய்து திருப்தியடைந்த கண்களை பெற்றிருக்கும் பாக்யசாலிகளுக்கு ஒரு சத்குருவின் லக்ஷணங்களைப் (சிறப்பு இயல்புகளைப்பற்றி ) பற்றி அடியேன் மேற்கொண்டு என்ன வர்ணனை செய்யமுடியும்?
ஜென்மஜென்மங்களாக சேமித்துவைத்த புண்ணியங்களின் விளைவாக நாம் சத் குருராயர் சாயியின் பாதங்களை வந்தடைந்தோம்.
இளமையிலேயே அவர் தமது என்று எதையும் உடைமையாக்கி கொள்ளவில்லை; வீடுவாசல் ஏதும் இன்றி நிராதரவாக வாழ்ந்தார். உடைமைகள் என்று அவர் வைத்திருந்தவை புகையிலையும் சிலீமும் மகத்தான மனவொடுக்கமுமே!
பதினெட்டு வயதிலேயே அவர் பூரண மனோஜயம் பெற்றவராக இருந்தார். தன்னிலேயே லயித்து ஏகாந்தமாகவும் நிர்ப்பயமாகவும் (பயமின்றியும்) வாழ்ந்தார்.
'நான் பக்தர்களின் அடிமை' என்னும் தம் வாக்குறுதியை நிரூபிப்பதற்காக, எங்கே சுத்தமான அன்பை பக்தர்களிடம் கண்டாரோ, அங்கே அவர் எப்பொழுதும் இருந்தார்.
பர பிரம்மமே, பழம்பொருளே, ஜய ஜய ! தீனர்களைக் கைதூக்கிவிடுபவரே, மலர்ந்த முகத்தோரே, ஜய ஜய! பிரபஞ்சப் பேருணர்வால்
நிரம்பியிருப்பவரே, பக்தர்களின் வசத்தில் இருப்பவரே, ஜய ஜய! பக்தர்களுக்கு தரிசனம் தாரும் ஸ்வாமி!
இரட்டைச் சுழல்களுக்கு அப்பாற்பட்டவரே, ஜய ஜய! உருவமுள்ளதும் உருவமில்லாதவருமான இறையே, ஜய ஜய! பிரபஞ்ச நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் சாட்சியே, ஜய ஜய! அனைத்திற்க்கும் அப்பாற்பட்டவரே, ஜய ஜய! பக்தர் அல்லாதாருடைய புத்திக்கு நீர் எட்ட மாட்டீர்.
இவ்வுலக வாழ்வின் இன்னல்களையும் துக்கங்களையும் அழிப்பவரே, ஜய ஜய! பிறவியெனும் யானையைக் கிழித்துக் கொள்பவரே, ஜய ஜய ! அடைக்கலம் புகுந்தவர்களிடம் பூரணமான பிரேமை செலுத்துபவரே, ஜய ஜய! சங்கடங்களிலிருந்து பக்கதர்களை விடுவிக்கும் சத் குருராயரே, ஜய ஜய!