valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 12 February 2026

 ஷீர்டி சாயி சத்சரிதம் 

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய புலனுறுப்புகளை முரட்டுக் குதிரைகளாகவும் தொடுவுணர்வு, சுவை, பார்வை, வாசனை, ஓசை ஆகிய புலனின்பங்களை அளிக்கக்கூடிய எல்லா விஷயங்களையும் நரகத்திற்கு மார்க்கங்களாகவும் கருதவேண்டும். 

விஷயசுகங்களின் மீது சிறிதளவு பற்று இருந்தாலும் பரமார்த்த (வீடுபேறு) சுகத்தை அது நாசம் செய்து விடும்.  ஆகவே, அதை மிச்சம் மீதியின்றித் தியாகம் செய்துவிடுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு மோட்சம் கிடைக்கும். 

கை, கால் முதலிய புறவுறுப்புகள் பற்றிழந்துவிட்டாலும், அந்தக்கரணம் ஏங்குமானால் ஜனன மரணச் சுழற்சிக்கு முடிவேற்படாது.  விஷயசுகங்கள் அவ்வளவு அபாயகரமானவை!

விவேகமுள்ள சாரதி கிடைத்தால், லகான்களை லாவகத்துடன் கையாள்வார். அப்பொழுது, புலனின்பங்களாகிய குதிரைகள் கனவிலும் சிறிதளவும் நெறிதவறிச் செல்லமாட்டா. 

சமநிலை கலையாத மனமுடையவனும் அடக்கும் சக்தி பெற்றவனும் உஷாரானவனும் தொழில்நுட்பம் தெரிந்தவனும் சாமார்த்தியசாலியுமான மனிதன் தேரோட்டியாகக் கிடைக்கும் பாக்கியம் ஏற்படுமானால், விஷ்ணு பதம் வெகுதூரத்தில் இருக்கிறது?

அந்தப் பதமே பர பிரம்மம் (முழுமுதற்பொருள்). வாசுதேவன் என்பது அதற்கு மற்றொரு பெயரே. அந்தப் பதமே அனைத்திலும் சிறந்த, உயர்ந்த, என்றும் நிலையான, அப்பாலும் கப்பாலாய் இருக்கும் நிலை. 

ஆக, இந்த அத்தியாயம் முடிவடைகிறது.  அடுத்தாற்போல்  வரும் அத்தியாயம் இதைவிட வசீகரமானது. சான்றோர்களாகிய பக்தர்களின் மனத்தைக் கவர்ந்து இழுக்கும். கிரமமாக கேளுங்கள். 

பிரிவதற்கு முன்பாக - சிருஷ்டியை நிர்வகிப்பவரும் புத்திசக்தியைத் தூண்டிவிடுபவரும் எவரோ, அந்த சத்குருவின் சேவடிகளில் ஹேமாட் தலைசாய்த்து வணங்குகிறேன். 

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயிபக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், "மஹானை சோதித்தல் - மனத்தை அடக்குதல்' என்னும் நாற்பத்தொன்பதாவது அத்தியாயம் முற்றும். 

ஸ்ரீஸத்குரு   சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். 

சுபம் உண்டாகட்டும்.