valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 16 November 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"இவ்வாறாக , 'போதியை வாசியும்' என்ற சாயியின் திருவாய்மொழி என்னுள்ளே இருந்த முடிச்சை அவிழ்த்தது. மிகுந்த ஆனந்தமுடையவனாக ஆனேன் .-

"அந்த ஆக்ஞயைப் பிரமாணமாக ஏற்றுக்கொண்டு அன்றிலிருந்து ஞானேச்வரியை தினமும் தவறாமல் வாசிக்க ஆரம்பித்தேன். படிக்கும்போது விவரணமும் செய்தேன்.-

"நான் வாஞ்சையுடன் எதிர்பார்த்த ஆக்கினை எனக்கு கிடைத்தது. விரதமேற்றுக்கொண்டதன் விளைவாக என் இதயத்தில் எழுந்த தாபம் தணிந்தது. இப்பொழுதிலிருந்து என்னால் ஞானேச்வரியை நியமம் தவறாது படிக்கமுடியும்.-

"இப்பொழுது நான் குருவின் ஆணையைத் தரித்துக்கொண்டிருப்பதால், ஞானேச்வரரே எனக்கு இன்முகம் காட்டுவார். இன்றுவரை நடந்தது கடந்ததாக இருக்கட்டும்; இனிமேல் நான் நியமத்துடன் தவறாது படிக்கவேண்டும்.-

"எனக்கு என்னுடைய மனமே சாட்சி. மேலும் சாயியின் ஆணையே எனக்குப் பிரமாணம். அந்த ஆணையின் பலத்தால் என்னுடைய போதி பாராயணம் நிர்விக்கினமாக (தடங்கலின்றி) நடக்கும். -

"பாபா! நான் வேறெதிலும் நாட்டமின்றி உங்களுடைய பாதங்களை நமஸ்கரித்து சரணடைகிறேன். இந்தக் குழந்தையை உங்களுடைய அரவணைப்பில் ஏற்றுக்கொண்டு அதைப் போதி படிக்கவைப்பீராக !-

"கந்தல் துணி ' என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்று இப்பொழுது புரிந்துவிட்டது. நான் பாலக்ராமை விசாரித்ததுதான் கந்தல் துணி. அந்தக் கந்தல் துணியைத்தான் பாபாவுக்குப் பிடிக்கவில்லை; அவரைக் கடுங்கோபத்தில் ஆழ்த்தியதும் அதுவே.-

"உபாசனையில் உங்களை எப்படி வழிநடத்தினார்? பிரம்ம சிந்தனையை எப்படிச் சொல்லிக்கொடுத்தார்? என்றெல்லாம் நான் பாலக்ராமைக் கேட்டது பாபாவுக்குப் பிடிக்கவில்லை. -

"எந்தக் கேள்வியைக் கேட்டாலும் தெளிவாகப் பதில் சொல்வதற்கு பாபா தயாராகக் காத்திருக்கும்போது, நான் தனிப்பட்டமுறையில் இந்தக் கேள்விகளை பாலக்ராமை எதற்காகக் கேட்கவேண்டும்? அதனால் விளைந்ததுதான் இந்தத் துன்புறுத்தலெல்லாம் !-

"ஆயினும் 'துன்புறுத்தினார்' என்று சொல்வது தகாத வார்த்தை. பக்தர்களிடம் பிரேமையால் பொங்கிவழிபவரும், தாயன்பு காட்டுபவருமான சாயி, பக்தர்களைத் துன்புறுத்துவத்தைக் கனவிலும் நினைக்கமாட்டார். 'துன்புறுத்து' என்னும் வினைச்சொல் அவருக்குச் சற்றும் பொருந்தாது. -

"அவர் என்னைத் துன்புறுத்தவில்லை. 'உன்னுடைய மனத்தில் என்னென்ன தோன்றுகின்றனவோ அன்னன்ன விருப்பங்களை பூர்த்திபண்ணுபவன் நானே. திருட்டுப் பொருள் வேலைக்கு உதவாது' என்ற பாடத்தை எனக்குப் புகட்டினார். -

"வெளிப்பார்வைக்குக் கோபங்கொண்டவர்போல் தோன்றினாலும், அகமுகமாக அவர் மகிழ்ச்சியாக இருந்தார். வெளிபார்வைக்குக் கடுஞ்சினத்தால் எரித்துவிடுபவர்போல் தோன்றினாலும், உள்ளுக்குள் அவர் திருப்தியாகவும் ஆனந்தமாகவும் இருந்தார். -