ஷீர்டி சாயி சத்சரிதம்
பக்த சிரேஷ்டரான (தலைசிறந்த பக்தரான) உபாஸனி, ஜோக் குடன் பவித்திரமான பாகீரதி (கங்கை ) நதிக்கரைக்குச் சென்று ஹோமங்களையும் ஹவன்களையும் செய்தார்.
சாஸ்திர விதிகளின்படி பிராமணர்களுக்கு போஜனம் சீவித்து, அண்ணா சந்தர்ப்பணம் (பல ஜனங்களுக்கு அன்னமளித்து மகிழ்வித்தல்) செய்து, தக்ஷிணையும் அளித்தனர். பின்னர் இருவரும் திரும்பி வந்தனர்.
இப்பொழுது பாபாவும் இல்லை; சம்வாதமும் (உரையாடலும்) இல்லை. இந்த பேதம் நிகழ்ந்துவிட்ட போதிலும், மசூதியின் மேல் பார்வை பட்டவுடன் கடந்த காலத்தில் சுகமான உரையாடல்கள் ஞாபகத்திற்கு வருகின்றன.
பாபா எப்பொழுதும் அமர்ந்த யோகாசன நிலையில் அவரை மறுபடியும் பார்த்து, ஆனந்தத்தில் மெய்மறக்கச் செய்யும்படியாக, உத்தமோத்தமமான (சிறந்தவற்றில் சிறந்த) பாபாவின் உருவப்படம் ஒன்று வண்ண ஓவியமாக மசூதியில் பிரேமையுடன் நிறுவப்பட்டுள்ளது.
சாயி தேக நிவிர்த்தி அடைந்துவிட்ட போதிலும், இந்த உருவப்படத்தை தரிசனம் செய்தால் அவரை நேரில் காணும் திருப்தி ஏற்படுகிறது. பாவமுள்ள பக்தர்களுக்கு, பாபா திரும்பி வந்துவிட்டது போன்ற உணர்வும் ஏற்படுகிறது.
ஜயகர் என்ற குடும்பப் பெயர் கொண்ட சாம்ராவ் இந்த அழகிய ஓவியத்தை வரைந்தார். நிரந்தரமான நினைவை அளிக்கும்படியாக இந்த மனோஹரமான வண்ண ஓவியம் அமைந்திருக்கிறது.
பிரசித்தி பெற்ற சித்திரக்காரரான சாம்ராவ் ஜயகர் பாபாவிடம் மிகுந்த பக்தி வைத்திருந்தார். பாபவின் ஆக்கினையை அனுசரித்துச் சிந்தித்துச் செயல்பட்டிருக்கிறார்.
அவர் இம்மாதிரியான பல அழகிய சித்திரங்களை தம்முடைய கைகளால் வரைந்திருக்கிறார். அவையனைத்தும் பக்தர்களின் இல்லங்களில் தியானம் நிலைப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
ஞானிகள் என்றும் மரணமடைவதில்லை. இது முன்னரே அநேக முறைகள் விவரணம் செய்யப்பட்டுவிட்டது. இது உங்களுக்கு ஞாபகமிருக்கும். மேலும் தெளிவு படுத்தவேண்டிய அவசியம் இல்லை.
இன்று பாபா தேகத்துடன் இல்லை. ஆயினும், அவரை நினைவில் வைத்திருப்பவர்களுக்கு, தேகத்துடன் இருந்தபோது செய்தது போலவே நன்மைகள் பல செய்து பாதுகாத்துவைக்கிறார்.
அவர் யாரிடமாவது ஏதாவது சொல்லியிருக்கலாம்; அது இன்னும் அனுபவமாகாமலும் இருக்கலாம், அவர் தேகத்தை விடுத்துவிட்டதால், அவை வெறும் வார்த்தைகள் என்று நினைக்க வேண்டா.
ஏனெனில், பாபாவின் திருவாய்மொழி பிரம்மதேவரின் எழுத்துக்கு (தலையெழுத்துக்கு) ஒப்பாகும். நம்பிக்கையுடன் அனுபவத்திற்காகக் காத்திருங்கள். உடனே நடக்காவிட்டாலும் காலப்போக்கில் நிச்சயமாக நடக்கும்.