valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 10 April 2014

ஷிர்டி சாயி சத் சரிதம் 

தபால் காரர் காகாவைப் பற்றி விசாரித்துக் கொண்டு வந்தபோது, காகா ஷிரிடியிலிருந்து கிளம்பிவிட்டிருந்தார். கடிதம் பம்பாய்க்கு திருப்பி அனுப்பப் பட்டது. காகாவுக்கு இந்தக் கடிதம் வீட்டில் கிடைத்தது. 

இந்நிகழ்ச்சிக்கு நேர்மாறாக, எவ்வாறு பக்தர்களுக்கே தங்களுடைய நலன் தெரியாதிருந்த போதும், பாபாவுக்கு நன்கு தெரிந்திருந்தது  என்பது பற்றி ஒரு சின்ன கதை சொல்கிறேன்; கேளுங்கள்!

ஒருமுறை நாசிக்கிலிருந்து , புகழ்பெற்ற வக்கீலும் பாபாவுக்கு  பக்தருமான பாபு சாஹேப் துமால் என்பவர் பாபாவை தரிசனம் செய்வதற்காகவே ஷீரடிக்கு வந்தார். 

சீக்கிரமாக தரிசனம் செய்து கொண்டு, பாபாவின் திருவடிகளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு பாபாவின் ஆசீர்வாதங்களையும் உதீயையும் பெற்றுக் கொண்டு உடனே திரும்பி விடவேண்டும் என்று நினைத்துக் கொண்டு வந்தார். 

திரும்பும் வழியில் நிபாட் என்னுமிடத்தில் இறங்கிக் கோர்ட்டில் வழக்கு ஒன்றை வாதாட வேண்டிய அவசியம் இருந்தது. 

அவர் அவ்வாறு திட்டமிட்டுக் கொண்டு வந்திருந்தாலும், அவருக்கு எது உசிதம் எது உசிதமில்லை என்று பாபாவுக்கு தெரிந்திருந்தது. ஆகவே, அவர் வீடு திரும்ப அனுமதி கேட்டபோது பாபா மறுத்து விட்டார். 

அனுமதி கொடுக்கத் திட்டவட்டமாக மறுத்து, அவரை ஒரு வாரம் ஷீரடியில் தங்கும்படி செய்துவிட்டார். கோர்ட்டில் வழக்கு விசாரணை மூன்று முறைகள் தள்ளிப் போடப் பட்டு தாமதமேற்பட்டது. 

துமால் ஒரு வாரத்திற்கு மேலாகவே, ஷிரிடியில் தங்கவைக்கப் பட்டார். வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்களில் நீதிபதிக்கு உடல் நலம் பாதிக்கப் பட்டது. 

நீதிபதிக்கு அம்மாதிரியான, பொறுக்க முடியாத வயிற்று வலி அதுவரை வந்ததே இல்லை. அதன் காரணமாக, வேறு வழியில்லாமல் வழக்கு தள்ளிப் போடப்பட்டது. வக்கீல் துமாலை பொறுத்தவரை அவருடைய நேரம் மிகச் சிரத முறையில் உபயோகப் படுத்தப் பட்டது. 


துமாலுக்கு சாயியின் சஹவாசம் என்னும் பெரும் பாக்கியம் கிடைத்தது. துமாலின் கட்சிக்காரருக்கோ கவலையிலிருந்து விடுதலை கிடைத்தது. சாயியின் மீது வைத்த விசுவாத்தினால் எல்லாமே பிரயாசையின்றி நடந்தது. 

பிறகு, பொருத்தமான காலத்தில் துமால் வீடு திரும்ப அனுமதிக்கப் பட்டார். அவருடைய வேலையும் திருப்தி கரமாக முடிக்கப் பட்டது. இதுவே சாயியின் லீலை; ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது. 

இந்த வழக்கு, நீதிமன்றத்தில் நான்கு மாதங்கள் நடந்தது. நான்கு நீதிபதிகள் ஒருவர்பின் ஒருவராக இவ்வழக்கை விசாரிக்கும்படி ஆயிற்று. முடிவில் வக்கீல் துமால் தம் கட்சிகாரர் குற்றமற்றவர் என்று நிரூபிப்பதில் வெற்றி பெற்றார். 

சாயி ஒருமுறை பரம பக்தரான நானா சாஹேப் நிமோன்கரின் மனைவியின் கட்சிக்காக வாதாடிய நிகழ்ச்சியை சொல்கிறேன்; கேளுங்கள்.