ஷீர்டி சாயி சத்சரிதம்
கயாவாளி பெரும் பணக்காரர். வீட்டுக்கு வெளியில் யானைகள் சவாரிக்காகக் காத்திருந்தன! தாம் ஒரு பல்லக்கில் ஏறிக்கொண்டு சாமாவை யானைச்சவாரி செய்யும்படி செய்தார்.
பூஜை திரவியங்களை எடுத்துக்கொண்டு இருவரும் விஷ்ணுபாதம் என்னுமிடத்திற்குச் சென்று மகாவிஷ்ணுவுக்கு அபிஷேகமும் பூஜையும் மனமகிழ்ச்சியுடன் செய்தனர். பிறகு அட்சயவடம் என்ற இடத்திற்குச் சென்று, மூதாதையர்களுக்குப் பிண்டதானமும் (ஈமச்ச சடங்கும்) செய்தனர்.
அதன் பின்னர் தெய்வங்களுக்கு நிவேதனம் செய்தபின், பிராமணர்களுக்குத் திருப்தியாக போஜனம் செய்வித்து தக்ஷிணையும் கொடுத்தனர். இவ்விதமாக அவர்களுடைய புனிதப் பயணம் இனிதே நிறைவடைந்தது. சரியாகச் சொல்லவேண்டுமென்றால், பாபாவால் நிறைவேற்றிவைக்கப்பட்டது.
பாபாவின் திருவாய்மொழிச்சொல்லுக்குச் சொல் உண்மையாகிறது; நிறைவேறுகிறது. இதுவே இக் கதையின் சாரம். மேலும், பக்தர்களிடம் அவருடைய அன்பு அளவற்றது.
இக் காதை பாபா தம் பக்தர்களிடம் காட்டிய அன்புபற்றியது மட்டுமே. வாஸ்தவமாக, மற்ற ஜீவராசிகளையும் சமமாகவே பாபா பாவித்தார். ஜீவராசிகளிடம் பாசத்துடன் இருந்தது மட்டுமின்றி, அவற்றின் ஆத்மாவுடன் ஒன்றியவராகவே இருந்தார்.
லெண்டித் தோட்டத்திலிருந்து மசூதிக்கு சாவதானமாகத் திரும்பி வரும்போது, எப்பொழுதாவது ஓர் ஆட்டு மந்தையைச் சந்தித்தால் பாபா மிகவும் குஷியாகிவிடுவார்.
அமுதம் பொழியும் கண்வீச்சை எல்லா ஆடுகளின்மீது செலுத்துவார். சில சமயம் ஓரிரண்டு ஆடுகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்வார்.
உரிமையாளர் என்ன விலை கேட்டாலும் பாபா உடனே பணம் கொடுத்து ஆடுகளை வாங்கி, கொண்டாஜியிடம் ஒப்படைத்துவிடுவார். இதுவே பாபாவினுடைய பழக்கமாக இருந்தது.
ஒருநாள் பாபா இரண்டு ஆடுகளை 32 ரூபாய் கொடுத்து வாங்கினார். எல்லாருக்கும் அது விநோதமாகத் தெரிந்தது.
அவ்விரண்டு ஆடுகளைப் பார்த்ததும் திடீரென்று அவற்றின்மேல் பாசமேற்பட்டு அருகில் சென்று முதுகில் தட்டிக்கொடுத்தார்.
மிருகப்பிறவி எடுத்த அவற்றைப் பார்த்து பாபாவின் மனத்தில் காருண்யம் ததும்பியது. அவை இருந்த நிலையைப் பார்த்து மனம் நெகிழ்ந்தார். அன்பின் அலைகளில் அமிழ்ந்துபோனார்.
அவ்விரண்டு ஆடுகளைத் தம்மருகே இழுத்துக்கொண்ட பின், வாஞ்சையுடன் முதுகில் தடவிக்கொடுத்தார். பாபாவின் அவ்விநோதமான செயலைக்கண்ட பக்தர்கள் வியப்பெய்தினர்.
முன் ஜென்மத்தில் அவர்கள் மீது தாம் வைத்திருந்த பாசம் ஞாபகத்திற்கு வந்தபோது பாபாவிடமிருந்து அன்பு பீறிட்டது. ஆடுகளாகப் பிறந்த அவர்களைப் பார்த்தபோது பாபா மிகுந்த பரிதாபமுற்றார்.