valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 30 August 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

வியாதிகளில் இருந்து விடுதலை பெறும் நோக்கத்தில் அவர் அக்கல் கோட் மஹாராஜருக்குப் பல தினங்கள் சேவை செய்தார். துன்பத்தை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மனம் கலங்கி  சோகத்தில் ஆழ்ந்தார்.

ஆத்மஹத்தி (தற்கொலை) செய்துகொள்வது என்று நிர்ணயம் செய்துகொண்டு, இரவு நேரத்தில் சுற்றிலும் நிசப்தமாக இருந்தபோது ஒரு கிணற்றிற்குச் சென்று அதனுள் குதித்து விட்டார்.

திடீரென்று அக்கல்கோட் மஹராஜ் அங்கே தோன்றினார். தம்முடைய கைகளாலேயே பக்தரை வெளியே கொண்டுவந்து போட்டார்; உபதேசமும் செய்தார். "எதை அனுபவிக்க வேண்டுமென்றிருக்கிறதோ, அதை அனுபவித்தே தீர வேண்டும்.-

"நம்முடைய பூர்வஜென்ம வினைகளை ரோகங்களாகவும் குஷ்டமாகவும் வலியாகவும் கவலையாகவும் முழுவதும் அனுபவித்துத் தீர்க்கும்வரை தற்கொலை எதை சாதிக்க முடியும்?-

"மேலும், துன்பத்தையும் வலியையும் முழுமையாக அனுபவித்துத் தீர்க்காவிட்டால், அதை முடிப்பதற்காகவே இன்னும் ஒரு ஜென்மம் எடுக்க வேண்டும். ஆகவே, இந்தத் துன்பத்தை இன்னும்கொஞ்சம் பொறுத்துக்கொள். உன்னுடைய உயிரை நீயே அளித்துக் கொள்ளாதே."

தம்முடைய மனநிலைக்கு மிகப் பொருத்தமான இக் கதையைப் படித்த ஆம்ப்டேகர் மெய்சிலிர்த்துப் போனார். உடனே, "எங்கும் நிறைந்திருக்கும் பாபாவின் சமூகத்தில் நாம் இக் காரியத்தைச் செய்யத் துணிந்தோமே ' என்று நினைத்து மனம் நொந்தார்.

ஆம்ப்டேகர் உடைய மனதிற்கு, 'விதிக்கப்பட்டதை அனுபவித்தே தீர வேண்டும்' என்பது நன்கு விளங்கியது. சரியான சமயத்தில் அதுவே குறிப்பாக அருளப்பட்டது. தாம் செய்ய நினைத்த சாகச செயல், தமக்கு நன்மை தரக்கூடியதன்று என்பதும் தெளிவாகியது.

அவர் படித்த கதை, உண்மையில் வானத்தில் இருந்து தோன்றிய அசரீரியே. செயற்கரிய செயலான இந்த லீலையைக் கண்ட ஆம்பிடேகருக்கு சாயி பாதங்களில் நம்பைக்கையும் விசுவாசமும் மேலும் பலப்பட்டன.

சற்றும் எதிர்பாராத  வகையில், சற்குணமேரு நாயக்கரின் வாய்மொழி மூலமாகவும் போதி புத்தகத்தின் மூலமாகவும் வந்த எச்சரிக்கை, கொஞ்சம் தாமதப்பட்டிருந்தாலும் அவருடைய ஜென்மமே அழிந்துபோயிருக்கும்.

அவர் நினைத்தார், "என்னுடைய உயிரே போயிருக்கும். என்னுடைய குடும்பத்திற்குப் பெரும் தீங்கும் என் மனைவிக்குத் தாங்கொணாத கஷ்டங்களும் விளைந்திருக்கும். இகத்திலும் பரத்திலுமாக இரட்டை நஷ்டம் அடைந்திருப்பேன்.-

"சகுணமேரு நாயக்கரின் மனத்தைத் தூண்டிவிட்டுப் போதியைக் கருவியாக வைத்துத் தற்கொலைத் திட்டத்தில் இருந்து என்னை மனம் மாற வைத்திருக்கிறார் பாபா. "

அவ்வாறு நிகழ்ந்திராவிட்டால், அந்த ஏழை (ஆம்டேகர்) வீணாக மரண மடைந்திருப்பார். ஆனால், சாயியை போன்ற ரட்சகர் இருக்கும்போது சாவு எப்படி நெருங்கும்?