ஷீர்டி சாயி சத்சரிதம்
ஆகவே, நாங்கள் எங்களுடைய எண்ணம், சொல், செயல், இவற்றைத் தங்கள் பாதகமலங்களில் செலுத்திவிட்டு இடைவிடாமல் உம்முடைய திவ்விய நாமத்தை ஜெபிப்போமாக! அவ்வழியேதான் எங்களுடைய பாவங்கள் கழுவப்பட்டு விலகும்.
வேண்டியவர்களுக்கு வேண்டியதை அளிக்கிறீர்; வேண்டுதல் ஏதும் இல்லாதவர்களுக்கு பரமபதத்தை அளிக்கிறீர். பக்தர்களுக்கு இனிமையானதும் மகிழ்ச்சிகரமானதும் மிக்க சுலபமான வழியன்றோ உமது நாமம்!
உமது நாமஜபத்தினால் பாவம் அழிகிறது; ராஜஸ குணமும் தாமச குணமும் மறைகின்றன. சத்துவ குணம் மேலோங்குகிறது. இதில் சந்தேகம் ஏதுமில்லை. படிப்படியாக வாழ்வில் தருமநெறி வளர்கிறது.
கடவுள் பக்தியும் அறநெறி வாழ்வும் இவ்வாறு விழித்துக்கொண்ட நிலையில், பற்றற்ற மனப்பான்மை வேகமாகத் தொடர்கிறது; புலன் அவாக்கள் அறவே அழிக்கப்படுகின்றன; ஆத்மஞானம் அக்கணமே பளிச்சென்று தோன்றுகிறது.
விவேகத்துடனும் அறிவுக்கூர்மையுடனும் தேடப்படும் ஞானம், தனக்குள்ளேயே லயிக்கும் (அமிழ்ந்து போகும்) மன ஒருமையே. இது குருவின் பாதகமலங்களில் பணிவுடன் விழுந்துகிடப்பதுதான். இதுவே குருவிடம் முழுமையான சரணாகதியாகும்.
சாயியின் பாதகமலங்களில் மனம் பரிபூரண சரணாகதி அடைந்துவிட்டதற்குச் சின்னம் ஒன்றே ஒன்றுதான். பக்தன் பரமசாந்த நிலையை எய்துகிறான்; நிஜமான பக்தி பொங்கிவழிகிறது.
குருவிடம் செலுத்தப்படும் அன்பு கலந்த பக்தியே அறநெறியாகும். "அனைத்தும் நானே" என்பதே ஞானத்தின் சாரம். புலனின்பங்களின்மேல் விருப்பமின்மையே பெரும் வைராக்கியமாகும். இந்த நிலை எய்திவிட்டால் உலகியல் வாழ்க்கை மறைந்துபோகிறது.
என்னே இந்த பக்தியின் மஹிமை! குவிந்த மனத்துடன் அனுஷ்டானம் செய்யப்படும்போது, தன் சக்தியுள் பொதிந்து கிடக்கும் சாந்தி, விரக்தி, கீர்த்தி, இம் மூன்றையும் வெளிப்படுத்துகிறது.
அவ்வகை குருபக்தி உடையவருக்குக் குறை ஏதும் உண்டோ? அவர் மனத்தால் என்ன வேண்டுமென்று விருப்பப்படுகிறாரோ, அது அவரிடம் பிரயாசை (உழைப்பு) ஏதுமில்லாமலேயே வந்து சேரும்.
அவ்வகை குருபக்திக்கு, திருமணத்தின்போது மகளுக்குக் கொடுக்கப்படும் சொத்துகள்போல இந்திர பதவியும் அடிமைபட்டுக் கிடக்கிறது. புண்ணிய க்ஷேத்திரங்களே காலடியில் கிடக்கும் அந் நிலையில் மோக்ஷத்திற்கு முக்கியத்துவம் யாருமே கொடுப்பதில்லை.
தீக்ஷிதரின் பாகவத பாராயணத்தைப்பற்றியும் நவயோகீந்திரர்கள் பற்றியும் சாயிபாத தரிசனம் பற்றியும் சென்ற அத்தியாயத்தில் விவரணம் கண்டோம்.
ஆனந்தராவ் பாகாடேயின் அற்புதக் கனவுபற்றியும் சாயிபக்தியின் பெருமையையும் எடுத்துரைத்தேன்.