ஷீர்டி சாயி சத்சரிதம்
இது சம்பந்தமாக, சாயியின் திருவாய்மொழியாக வெளிவந்த அமிர்தவாணியும் தூய்மையை அளிக்கக்கூடியதுமான ஒரு கதையைப் பயபக்தியுடன் சொல்லுகிறேன். கேட்க்கும்போது கவனத்துடன் கேளுங்கள்.
அக் கதை நான் கேட்டவாறே என் மனத்தில் பதிந்திருக்கிறது. அதை சாயி மாதாவின் கூற்றாகவே விவரிக்கிறேன்.
சாயியே தம்முடைய கதைக்குச் சரித்திரக்காரர். கதையை விஸ்தாரமாக அவரே எழுதவைக்கிறார். ஹேமாட் ஒரு கருவி மாத்திரமே; சூத்திரதாரி அவரே!
(ஹேமாட் சொன்ன கதை இங்கு ஆரம்பம்)
ஒருநாள் காலை எட்டு மணி அளவில், என்னுடைய வழக்கமான காலைச் சிற்றுண்டியை முடித்தபின் நான் வெளியே உலாவச் சென்றேன்.
வழி நடந்து, நடந்து களைத்துபோனேன். ஆகவே ஒரு நதியின் கரையை அடைந்தபோது, பாதங்களைக் கழுவியபின் ஸ்நானம் செய்தேன்; புத்துணர்ச்சி பெற்றேன்.
அந்த நதியும் ராஹாதாவுக்கு அருகிலுள்ள நதியளவிற்குப் பெரியது. வெள்ளம் இரு கறைகளை தொட்டுக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. இருமருங்கிலும் தர்ப்பைப்புல் அடர்ந்து வளர்ந்து மண்டிக்கிடந்தது.
அங்கு ஓர் ஒற்றையடிப்பாதையும் தெளிவாகத் தெரிந்த வண்டிப்பாதையும் இருந்தன. ஆற்றங்கரையில் பல மரங்கள் ஓங்கிப் பருத்து வளர்ந்திருந்தன. அவற்றின் நிழலும் உன்னதமாக இருந்தது.
மெல்லிய பூங்காற்று வீசி மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. காடு போன்று வளர்ந்திருந்த மரங்களைக் கண்டு நான் நிழலில் நிம்மதியாக உட்கார்ந்தேன்.
புகை குடிக்கச் சிலீமை நிரப்பவேண்டும். 'சாபியை' நீரில் நனைப்பதற்காக துறைக்குச் சென்றேன். அப்பொழுது "க்ரோக், க்ரோக்" என்ற சத்தம் கேட்டது. அது ஒரு தவளை எழுப்பும் ஒலி என்று நான் நினைத்தேன்.
அதில் என்ன ஆச்சரியம்? தண்ணீர் இருக்குமிடத்தில் தவளையும் இருப்பது இயற்கையன்றோ? சாபியை நனைத்தபின் நான் திரும்பி வந்து சிக்கி முக்கிக்கல்லை கையிலெடுத்தேன்.
சிக்கிமுக்கிகல் நெருப்பு பொறி தந்தது. சிலீம் பற்றிக்கொண்டு தயாராகியது. அந்த சமயத்தில் அங்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். எனக்கு வணக்கம் செலுத்திவிட்டு என்னருகில் அமர்ந்தார்.
மிகுந்த பணிவுடன் சிலீமைத் தம்முடைய கையில் வாங்கிக்கொண்டு கூறினார், "நீங்கள் நெடுந்தூரம் வந்திருக்கிறீர்கள்!-
"மசூதி வெகுதொலைவில் இருக்கிறது. நீங்கள் திரும்பிப் போவதற்குள் கடுமையான வெப்பமாகிவிடும். என்னுடைய வீடு அருகில்தான் இருக்கிறது. சிலீம் பிடித்துவிட்டு அங்கே செல்வோம். -