valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 28 December 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

காகாவினுடைய இளகிய இதயம் குருவின் ஆணையைப் பிரமாணமாக ஏற்றுக்கொண்டு ஆட்டைக் கொல்லத் தீர்மானித்தபோது அவருடைய பிராணனே நடுங்கியது.

பிறகு அவர் பாபாவின் ஆணையின்படி சாடே வாடாவுக்குச் சென்று ஆயுதத்தை கொண்டுவந்தார். எள்ளளவும் பிசகாதவாறு ஆட்டுக்கடாவைக் கொல்லத் தம்மைத் தயார் செய்துகொண்டார்.

குருவாக்கிய பரிபாலனம் வீரலட்சுமியை அளித்தது. ஆயுதத்தை கையிலெடுத்து கொண்டு மனதை திடம் செய்துகொண்டார்.

நிர்மலமான பிராமண வம்சத்தில் பிறந்து, பிறந்ததிலிருந்தே அஹிம்சையைக் கடைபிடித்தவருக்கு, அடடா! என்ன இக்கட்டான நிலைமை இது! கொலை செய்யக் கை எவ்வாறு ஓங்கும்?

குருவின் ஆணையை பரிபாலனம் செய்வதில் அதைரியத்திற்கு இடம் கொடாமல் மனதை ஒருவழியாக திடம் செய்துகொண்டார். ஆயினும் இதயம் படபடவென்று துடிதுடித்தது; உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டியது.

எண்ணத்தாலோ சொல்லாலோ செயலாலோ ஹிம்சையை ஒருபொழுதும் செய்யாதவர். கொடுவாளை எடுத்து ஆட்டை வெட்டுவதா! துரதிஷ்டமே உருவெடுத்து வந்ததோ?

குருவின் வசனத்தை அவமானம் செய்பவர்கள் பூர்வ புண்ணியங்கள் அனைத்தையும் நிச்சயமாகப் பறிகொடுத்துவிடுவார்கள்.

ஆபரணங்களில் எல்லாம் சிறந்த ஆபரணம் குருவின் ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவதே. நல்ல சிஷ்யனுக்கு அடையாளம் இதுவே. குருவின் ஆணையை மீறுவது மஹாபாவமாகும்.

குருவின் ஆணையை ஒரு கணமும் தாமதியாது நிறைவேற்ற வேண்டும். சந்தேகிப்பவரும் இழுத்தடிப்பவரும் ஈனர்கள்; பார்க்கப்போனால், அவர்கள் வாலில்லாத இருகால் மிருகங்கள்.

குருவின் ஆணையை நிறைவேற்ற முகூர்த்தம் பார்க்கவேண்டியதில்லை. சுபம் / அசுபம், உடனே செய்தல் / தள்ளிப் போடுதல், என்ற கேள்விக்கெல்லாம் இங்கு இடமே இல்லை. உடனே ஆணையை நிறைவேற்றுபவன் சான்றோன்; நீளமாக நூல் இழுப்பவன் (தாமதிப்பவன்) துர்பாக்யசாலி.

வேட்டியின் நுனியை ஒரு கையால் இடுப்பில் செருகிக்கொண்டு இன்னொரு கையில் ஆயுதத்தை எடுத்துக்கொண்டு ஆடு இருந்த இடத்திற்கு சென்றவாறே சட்டையின் கைகளை மடித்துவிட்டுக்கொண்டார் (காகா).

கிராம மக்கள் ஆச்சரியம் அடைந்தனர், "இதென்ன, உலகம் விரும்பாத செயல்! காகாவின் இளகிய மனம் எங்கு ஓடி மறைந்தது?-

"முஸ்லீமும் மாமிச உணவு சாப்பிடுபவருமாகிய பக்கீர் பாபா, இம்சைப்படும் ஆட்டின் மேல் கத்தி ஒங்க மறுத்துவிட்டார்; அக் காரியத்தை செய்யக் காகா தயாராகிவிட்டாரே!"