valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 4 July 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்

அவ்வாறான சூழ்நிலையிலும் உள்ளுக்குள் விழிப்புணர்வுடன் இருந்த பாபா, மீண்டும் தேஹவுணர்வு பெற்று மக்களின் கவலையை அகற்றியதும், இப்பொழுது விரிவாக எடுத்துரைக்கப்படும்.

கதைகேட்பவர்களே, இந்தக் கதைகள் அனைத்தையும் கேட்கும்போது பிரேம பாவத்துடன் கேளுங்கள். கேட்கும்போது உணர்ச்சி தொண்டையை அடைக்கும்; உங்களுடைய சித்தம் ஆனந்தமடையும்.

இவை வெறும் கதைகளல்ல. சாயீ என்னும் விலைமதிப்பற்ற ரத்தினத்தைக் காப்பதில் வைத்திருக்கும் பெட்டகம். பிரேமபூர்வமாகத் திறந்து உள்ளே பாருங்கள்; சுகத்தை அளிக்கும் தரிசனத்தை அனுபவியுங்கள்.

இந்த அத்தியாயங்களுக்குள் சாயிநாதர் பூரணமாக நிறைந்திருப்பதைக் காண்பீர்கள். காது கொடுத்துக் கேட்டால், மனோரதங்கள் அனைத்தும் நிறைவேறும். நினைவுக்கு கொண்டுவருவதால், நாதன் (காப்பாற்றுவோன்) உடையவர்கள் ஆவீர்கள்.

பரம உதாரத்துவத்துடன் (பெருங்கொடை தன்மையுடன்) எவர் நடந்துகொண்டாரோ அந்த சாயியின் சரித்திரம் இது. பிரேமையுடனும் ஒருமுகப்பட்ட மனத்துடனும் கேட்பதற்குத் தயாராகுங்கள்.

இந்தப் புனிதமான கதைகளைக் கேட்கும் பக்தர்களின் மனம் திருப்தியடையாது. காரணம், கதை கேட்கும்போது உலகவாழ்வின் அல்லல்களிலிருந்து விடுபட்டு இளைப்பாறி ஆனந்தத்தால் நிரம்புகின்றனர் அல்லரோ!

மலர்ந்த மனத்தின் மகிழ்ச்சியும் சுயானந்தமும் அவர்களை எதிர்கொள்கின்றன. சர்வ சுகங்களிலும் மேன்மையான, தூய்மையான சுகம் சாயியின் கதைகள்.

எத்தனை தடவைகள் கேட்டாலும் தினமும் ஒரு நூதனம் (புதுமை) தென்படுகிறது. ரமணீயமான விஷயங்களுக்கு இது அடையாளம். ஆகவே, இந்த ஞானியின் புனிதமான கதையை வேறெதிலும் நாட்டமின்றிக் கவனத்துடன் கேளுங்கள்.

இவ்வாறாக, பூதவுடலுக்கு நற்கதியளிப்பதுபற்றி வாதித்து, வாதித்து அனைவரும் களைப்படைந்தனர். கடைசியில் என்ன நடந்ததென்று பாருங்கள்.

புட்டீ வாடாவின் பெரிய கூடத்தில் முரளீதரர் சிலையை ஸ்தாபனம் செய்வதற்காக கட்டப்பட்டிருந்த கர்ப்பகிருஹம் பாபாவின் தலம் என்று முடிவுசெய்யப்பட்டது.

ஒருகாலத்தில், கட்டடத்திற்கு அஸ்திவாரம் போடும் வேலை நடந்துகொண்டிருந்தது. அச்சமயம் பாபா லெண்டிக்குப் போனபொழுது மாதவ்ராவ் (சாமா) விநயத்துடன் விடுத்த வேண்டுகோளுக்கு பாபா தலையசைத்து அங்கீகாரம் அளித்தார்.

முரளீதரர் சிலையை ஸ்தாபனம் செய்ய கர்ப்பகிருஹ (கருவறை) வேலை நடந்துகொண்டிருந்தபோது மாதவ்ராவ் ஒரு தேங்காயை பாபாவின் கையில் வைத்து, அவருடைய அருட்பார்வையை அதன்மேல் செலுத்தும்படி வேண்டினார்.

அது சுபமுகூர்த்த வேளை என்றறிந்து பாபா சொன்னார், "தேங்காயை உடை. நாமும் அனைத்து பாலகோபாலர்களும் இவ்விடத்திலேயே காலத்தைக் கழிப்போம்.-