valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 25 February 2021

 ஷீர்டி சாய் சத்சரிதம்


ஒருமுகப்பட்ட மனதில் சாயிசிந்தனை பின்தொடரும். இதைத்தான் சாயி நம்மைச் செய்யவைக்கிறார். எடுத்த காரியமும் தடங்கலின்றி நிறைவேறுகிறது.

உலகியல் விவகாரங்களை விட்டுவிட வேண்டிய அவசியம் இல்லை. ஆயினும், இவ்வாறு மனத்தை அப்பியாசம் செய்தால், உலகியல் விஷயங்களின் மீதான மோஹம் தானாகவே விலகும். முயற்சிகளும் சுலபமாக வெற்றியடையும்.

பூமியில் பிறந்த தேகம் செயல் புரிந்தே ஆகவேண்டும். இதில் சந்தேகம் ஏதுமில்லை. ஆகவே, மனைவி, மக்கள், செல்வம், வீடு, வாசல் இவற்றை மனம் நிறையும்வரை தேடி அடையுங்கள்.

எதெல்லாம் நடக்கவேண்டுமோ, அதெல்லாம் யதேஷ்டமாக நடக்கட்டும். ஆனால், நம்முடைய நல்வாழ்வு சத்குருவைப்பற்றிய சிந்தனையில்தான் இருக்கிறது. சங்கற்பங்களும் விகற்பங்களும் நஷ்டப்பட்டுப் போகும். விதியால் நிர்ணயிக்கப்பட்ட விபத்துக்களும் இன்னல் தரும் நிகழ்ச்சிகளும் விலகும்!

மஹானுபவரான சாயி, பக்தர்களின் பாவத்தைக் கண்டு அவர்களுடைய பக்தியைப் பாராட்டுவதற்காக ஒன்றன்பின் ஒன்றாக சீரிய அனுபவங்களை அளிக்கிறார்.

விரும்பிய வேஷத்தை அணிந்து எங்கு நினைக்கிறாரோ அங்கெல்லாம் தோன்றுகிறார். பக்தர்களுக்கு மங்களம் அருள்வதற்காக எங்கெல்லாமோ அலைகிறார். பக்தருக்குத்தான் (அடையாளம் கண்டுகொள்ள) நம்பிக்கை வேண்டும்!

கதை கேட்பவர்களே! இது சம்பந்தப்பட்ட கதையொன்றை பயபக்தியுடன் கேளுங்கள். ஞானிகள் தம் பக்தர்களுக்காக இரவுபகலாக எப்படி சிரமப்படுகிறார்கள் என்பதை இக் காதை காட்டும்.

உங்களுடைய இதயக் கோயிலினுள் இக் காதை புகுமாறு, கதவுகளாகிய காதுகளைத் திறந்துவையுங்கள். பிறவி அச்சத்தையும் சங்கடங்களையும் கடப்பதற்கு அனுகூலமாக இருக்கும்.

சமீபத்தில் முடிவுக்கு வந்த, ஜெர்மனிக்கு எதிரான முதல் உலக மகாயுத்தம், எதிரியுடன் போரிடுவதற்காக ஒரு படையைத் தயார் செய்யவேண்டிய நெருக்கடியை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியது.

பிரிட்டிஷ் அரசாங்கம் பாரத பூமியின் எல்லா நகரங்களிலும் ராணுவத்திற்கு ஆள் சேர்த்தது.

ஆண்டு 1917 , டானே ஜில்லாவில் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பக்தர் ஒருவருக்கு நல்ல நேரம் வந்தது. ஒரு வினோதமான நிகழ்ச்சி நடந்தது.

பக்தருடைய பெயர் ஆப்பாசாஹெப் குல்கர்நீ. சாயியின்  பிரபாவத்தாலும் கற்பனைக்கு எட்டாத லீலையாலும் அவருக்கு பக்திபாவம் ஏற்பட்டது.

பல ஆண்டுகளுக்கு முன்பு பாலாசாஹேப் பாடே அவர்களால் அளிக்கப்பட்ட பாபாவின் நிழற்படத்தை அவர் ஏற்கெனவே வழிபட்டுவந்தார்.