valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 4 January 2018

ஷீர்டி சாயி சத்சரிதம்

உலகின் உத்தமர்கள் செயல்புரிவதில் இந்திரனுடைய வஜ்ராயுதத்தை விட உறுதியானவர்கள்; இதயத்திலோ மலரினும் மென்மையானவர்கள்!

வெட்டுவதற்காக ஓங்கிய ஆயுதத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு காகா கேட்டார், "பாபா, ஒரே ஒரு முறை கேட்கிறேன்; இந்த ஆட்டை வெட்டி விடட்டுமா?"

இன்னல் படுபவர்களையும் எளியவர்களையும் காப்பதற்குண்டான இவ்வாயுதத்தை நிரபராதியான ஆட்டைக் கொல்லவா உபயோகிக்க வேண்டும்? மறுபக்கம் பார்த்தால், குருசேவையில் உயிரையே வைத்திருக்கிறோமே? சிறிய சந்தேகம் எழுவது இயற்கையன்றோ!

ஆட்டை வெட்டும் செயலை எவ்வளவு சீக்கிரமாகச் செய்யமுடியுமோ அவ்வளவு சீக்கிரமாகச் செய்து முடித்து விட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருப்பினும், திடீரென்று அவருடைய மனம் உருகி, ஆயுதத்தை பிடித்துக்கொண்டிருந்த காய் நடுங்கிப் பின் வாங்கியது; மறுபடியும் முன்னேற மறுத்தது!

"ஹும்! வெட்டும்! ஏன் தயங்குறீர்?" இந்த முடிவான ஆணையை கேட்டவுடன் ஆவேசமாக வெட்டுவதற்காக காகா ஓர் அரைவட்டம் சுற்றினார்.

ஆயுதம் ஏந்திய கையைக் காகா உயர்த்தினார்; ஆட்டுக்கிடாவுக்கு வேளை வந்துவிட்டது. ஆயினும் கடாவைக் காக்க இறைவன் கடைசிக்கு கணத்தில் ஓடோடி வந்தான்!

தீட்சிதர் எக்கணமும் வெட்டலாம் என்பதை நிச்சயமாக தெரிந்துகொண்ட சாயிமாதா, ஒரு கணம் தாமதித்தாலும் அசம்பாவிதம் நேருமென அறிந்து, திடீரென்று சொன்னார், "ஓ, விட்டுவிடும், விட்டுவிடும்!-

"காகா ! வேண்டா, வேண்டா! திரும்பி விடும்! ஒரு பிராமணராகிய நீர் ஆட்டை வெட்ட விரும்புகிறீரா ? உமது மனதில் பரிவு என்பதே இல்லையா?"

இதைக் கேட்டவுடன் காகா ஆயுதத்தை கீழே போட்டார். கூடியிருந்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். ஆட்டுக்கடா உயிர் தப்பியது; குருபக்தி சிகரத்தை எட்டியது.!

கத்தியை கீழே போட்டுவிட்டு காகா என்ன கூறினார் என்பதை கவனமாக கேளுங்கள். "பாபா, தங்களுடைய அமுதமொழியே எங்களுக்கு தரும சாஸ்திரம்.-

"அதை விடுத்து வேறெந்த தருமநெறியும் எங்களுக்குத் தெரியாது. இது விஷயமாக எங்களுக்கு வெட்கமோ அவமானமோ சிறிதும் இல்லை. குருவான பரிபாலனமே எங்கள் வாழ்வின் சாரம்; அதுவே எங்களுடைய ஆகமம்.-

"குருவின் ஆணையை நிறைவேற்றுவதில்தான் சிஷ்யனுடைய சிஷ்ய தன்மையே இருக்கிறது. அதுவே எங்களுக்கு ஆபரணம். ஆணையை எவ்விதமாக அவமதித்தாலும் அது இழுக்காகும். -

"சுகத்தை கொடுக்குமா, கஷ்டத்தை கொடுக்குமா என்கிற விளைவைப்பற்றிய பார்வையே எங்களுக்கு இல்லை. நடப்பதெல்லாம் விதிப்படியே நடக்கும்; அதை இறைவனிடம் விட்டுவிடுகிறோம்.-