ஷீர்டி சாயி சத்சரிதம்
முதலில் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பின்னர், வழியில் பரஸ்பரம் சந்தித்தபோது குசலம் விசாரித்தனர். சந்தோஷமாக உரையாடினர்.
"எங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். எங்களுடைய இல்லத்தில் பாதம் பதித்து அதை புனிதமாக்கவேண்டும் என்பதே என் பிரார்த்தனை." (பாயீஜி) சுவாமிஜி பதில் கூறினார். "நாராயணர் உமது இச்சையைப் பூர்த்திசெய்வாராக."
1906 ஆம் ஆண்டு, உத்தரகாசிப் பிரதேசத்தில் இவ்விருவருக்குமிடையே நடந்த சம்பாஷணை மேற்கண்டவாறு.
பரஸ்பரம் விலாசத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டார். மைதானத்தை விட்டு வெளியே வந்தவுடன் பிரிந்தனர்.
ஐந்தாண்டுக் காலம் கழிந்தது. சுவாமிஜி சாயியை சந்திக்கவேண்டிய வேளை நெருங்கியது. பாயீஜியைக் காணவேண்டுமென்ற உந்துதல் சுவாமிஜிக்கு ஏற்பட்டது.
ஆகவே, 1911 ஆம் ஆண்டு, சுவாமிஜி நாக்பூருக்கு வந்தார். சாயீநாதரின் பவித்திரமான சரித்திரத்தை கேட்டு ஆனந்தமடைந்தார்.
ஷீர்டி க்ஷேத்திரத்தை சுவாமிஜி சென்றடைவதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்தபின், பாயீஜி ஒரு சிபாரிசு கடிதமும் கொடுத்தார். இதன் பிறகு சுவாமி நாக்பூரை விட்டுக் கிளம்பினார்.
மன்மாடில் இறங்கியபோது கோபர்காங்வ் ரயில்வண்டி தயாராகக் காத்திருந்தது. கோபர்காங்வில் ஒரு குதிரைவண்டியில் ஏறி ஆனந்தம் நிரம்பியவராக சுவாமிஜி சாயீதரிசனத்திற்குச் சென்றார்.
எங்கே சென்று பார்த்தாலும் சாதுக்களுடைய பழக்கவழக்கங்களும் நடையுடைபாவனைகளும் ஒரே சீராக இருப்பதில்லை. ஒருவர் ஒருவிதம், இன்னொருவர் வேறுவிதம். அவர்கள் ஒரே விதமாக எங்கும் இருப்பதில்லை.
ஒரு ஞானியின் பழக்கவழக்கங்களும் அனுஷ்டானமும் இன்னொரு ஞானிக்குப் பிரமாணம் (அளவுகோல்) ஆகா. இவற்றில் எது தூய்மையானது, எது தூய்மையற்றது என்று அனுமானிக்க நம்மிடம் சாதனம் ஏதும் இல்லை.
கேட்கப்போனால், ஞானியை தரிசனம் செய்யச் செல்பவர் இதைப்பற்றி எதற்காக மூளையைக் குழப்பிக்கொள்ள வேண்டும்? ஒரு ஞானியின் நடைமுறையை ஆராய்ச்சி செய்யப் புகுபவர் தமக்கே தீங்கு இழைத்துக்கொள்வார் அல்லரோ?
