valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 18 August 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்


வாத்தியங்கள் இன்னிசை முழங்கின. பக்தர்கள் பாபாவுக்கு ஜெயஜெயகோஷம் கர்ஜித்தனர். இவ்வாறு பக்தர்களின் கூட்டம் நடந்துசென்றபோது அதிகாரக் கோலேந்திகள் அவ்வப்பொழுது ஜெயகோஷத்தில் பிரேமையுடன் கலந்துகொண்டனர்.

ஹரிநாமமும் அவ்வப்பொழுது கர்ஜிக்கப்பட்டது. பக்தர்களின் சம்மேளனம் சேகண்டி, மிருதங்கம், ஜால்ரா இவற்றின் ஒலிகளுக்கேற்ப நடைபோட்டுச் சென்றது.

ஊர்வலம் தெருமுனையை அடையும் சமயத்தில், ஆனந்தமாக ஜெயஜெயகோஷம் போட்டுகொண்டு சாயிக்கு முன்னால் செல்லும் பஜனை கோஷ்டி நிற்கும்.

சேகண்டிகள், ஜால்ராக்கள், டோலக்குகள் போன்ற வாத்தியங்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து ஒலிக்கப் பக்தி பாவத்துடன் பாடப்பட்ட பஜனை இசையின் ஆரவாரம் உச்சகட்டத்தை எட்டும். சாயி நாம கோஷம் இவற்றையும் மீறி ஒலிக்கும்.

பஜனை இசையால் கிளர்ந்த ஆனந்தம் நிரம்பியவர்களாய் இருமருங்கிலும் ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் ஆண்களும் பெண்களும் எழுப்பும் சாயி நாம கோஷம் வானைப் பிளக்கும்.

அவர்களுக்கு மேலிருந்த வானமே இசையால் நிறைந்தபோது மக்கட்கூட்டம் அகமகிழ்ச்சியால் பொங்கியது. இவ்விதமாகச் சாவடி ஊர்வலம் அனைவரும் கண்டு அனுப்பிவைக்கவேண்டிய கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. அந்த விழாக்கோலத்திற்கும் சோபைக்கும் ஈடிணையே இல்லை.

சாவடியின் முன்பாக பாபா நின்றபோது அவருடைய திருமுகத்தின் சோபை, உருக்கிய பொன் போன்றும், உதயகாலத்திலும் அஸ்தமனகாலத்திலும் வானை நிரப்பும் சூரியனுடைய பிரபையைப் போன்றும் செந்நிற ஒளி வீசியது.

அந்நேரத்தில் அவருடைய திருமுகத்திலிருந்து வீசிய ஒளி உதயசூரியனின் பிரபையை ஒத்திருந்தது. இக் காட்சி, பிரபஞ்ச சக்தியே அவருடைய திருமுகத்தில் ஒளியாக வெஸ்ஸியது போன்றிருந்தது. இந்த லாபத்தை யாராவது விட்டுவிடுவார்களா என்ன?

அந்த சமயத்தில் அவரை தரிசனம் செய்தவர்கள் தன்யர்கள். அவர் வடக்கு நோக்கி யாரையோ கூப்பிடுபவரை போல ஒருமுனைப்பட்ட மனத்துடன் நின்றபோது அவருடைய திருமுகம் செந்நிறத்தில் ஜொலித்தது.

இன்னிசை வாத்தியங்களின் முழக்கத்திற்கு நடுவே மஹராஜ் ஆனந்தம் நிரம்பியவராகத் தம்முடைய வலக்கையை மேலும் கீழுமாக மீண்டும் மீண்டும் ஆட்டுவார்.

பக்தர்களில் சிரேஷ்டராகிய (தலை சிறந்தவராகிய ) ஹரி சீதாராம் தீக்ஷிதர் ஒரு வெள்ளித்தட்டு நிறையப் பூக்களை வைத்துக்கொண்டு பாபாவின் மேல் மறுபடியும் மறுபடியும் பூமாரி பொழிவார்.

இவ்வாறாக, காகாசாஹெப் தீக்ஷிதர் 'குலால்' (சிவப்பு வர்ணாப் பொடி) கலந்த ரோஜாக்களை பிரேமையுடன் பாபாவின் சிரத்தின்மீது மீண்டும் மீண்டும் பொழிவார்.

குலால் கலந்த ரோஜாக்களை அவர் பொழியும்போது கஞ்சிராக்களும் ஜால்ராக்களும் சேகண்டிகளும் பேரிகைகளும் ஒருசேர ஒலித்து ஆரவாரம் செய்யும்.