valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday, 18 May 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


இது ஆதாரமில்லாத கருத்து என்று சந்தேகப்படுபவர்கள் பாவிஷ்யோத்ர புராணத்தைப்  படிக்கலாம். அந்தப் புராணத்தில், திரிபுரம் எரித்த சிவனே இவ்வாறு திருவாய்மொழிந்திருக்கிறார் .

ஈதனைத்தும் சாயியின் அருள்வெளிப்பாடே, ஆயினும், உலகியல் ரீதிக்கு உட்பட்டும் பக்தர்களின் நன்மை கருதியும் இக் காவியம் இயற்றுவதற்கு எனக்கு அனுமதி தந்தார்.

அதன் பிறகு, சமர்த்த சாயியின் கதையை பக்தர்கள் சாயி லீலா பத்திரிக்கையில் மாதந்தோறும் மிகுந்த பிரேமையுடன் கேட்டுவருகிறார்கள்.

அனுமதி அளித்த ஸாயிதான் எனக்கு புத்தியையும் அளித்தார். அவர்தான் ஆதாரமான உணர்வையும் எனக்கு ஊட்டினார். அவர்தான் தம்முடைய கதையத் தாமே எழுதவைக்கிறார்.

ஹேமாட் தம்முடைய புத்தியை உபயோகித்து இக் காவியத்தை இயற்றுகிறார் என்ற விகற்பமான சிந்தனை உங்கள் மனத்தில் சிறிதளவும் வேண்டா. ஆகவே, உங்களை மிகுந்த விநயத்துடன் கேட்டுக்கொள்கிறேன்; குணத்தையோ தோஷத்தையோ என்னுடையது ஆக்காதீர்!

குணம் (சிறப்பு) தெரிந்தால் அது சாயியினுடையது. தோஷம் (பிழை) ஏதாவது தெரிந்தால் அதுவும் அவருடையதே! நான் சாயியின் கையிலிருக்கும் பொம்மை; நூல்களின் இழுப்புக்கேற்ப நான் நடனமாடுகிறேன்.

நூல்களனைத்தும் பொம்மலாட்டாக்காரரின் கைகளில் இருக்கின்றன. கதைக்கேற்றவாறு பலவிதமான வண்ணங்களிலும் உருவங்களிலுமுள்ள விசித்திரமான பொம்மைகளைக் கதாபாத்திரங்களாக்கி நடிக்கவைக்கிறார்.

இப்பொழுது இந்த அறிமுக உரை போதும்! கதை மேற்கொண்டு தொடரவேண்டுமென்ற ஆர்வமுள்ள கதைகேட்பவர்கள், "அடுத்த அற்புதமான கதை என்ன?" என்று கேட்பது இயல்பே. குருவின் பெருமையையும் பக்தர்களின் அருமையையும் அவர்களுக்கு விவரிக்கிறேன்.

சென்ற அத்தியாயத்தை முடிக்கும் சமயத்தில், எனக்கு எந்தக் கதை ஞாபகப்படுத்தப்படுகிறதோ, அதை அடுத்த அத்தியாயத்தில் சொல்வதென்று முடிவு செய்யப்பட்டது. ஆகவே, இப்பொழுது என் மனத்தில் உதித்திருக்கும் கதையைக் கேளுங்கள்.

பக்தர் பிரேமையுடன் போஜனம் (உணவு) அளிக்கும்போது சாயி எவ்வாறு பரம திருப்தி அடைகிறார் என்பதுபற்றிய இனிமையான கதையைச் சொல்கிறேன்; ஒருமுகப்பட்ட மனத்துடன் கேளுங்கள்.

வாஸ்தவமாக, சிசுவுக்கு தாயார் எப்படியோ அப்படியே பக்தருக்கு சாயி பிரத்யட்சம். குழந்தையைக் காக்கத் தாய் எப்படி ஓடி வருகிறாளோ, அப்படி பக்தன் எங்கிருந்தாலும் சாயி ஓடி வருகிறார். யாரால், அவருக்கு கைம்மாறு செய்யமுடியும்?

உடலளவில் அவர் ஷிர்டியில் சுற்றி வந்துகொண்டிருந்தார்; ஆயினும் அவர் மூன்று உலகங்களிலும் சஞ்சாரம் செய்தார். இது சம்பந்தமாக ஒரு சுவாரசியமான விருத்தாந்தம் சொல்கிறேன்; சாந்தமான மனத்துடன் கேளுங்கள்.