valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 30 November 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

நாவின் சுவைக்கு அவர் இடமே அளிக்காததால், அறுசுவை பண்டங்களுக்காக அவர் ஏங்கவில்லை. பிச்சை கிடைக்குமோ கிடைக்காதோ என்றோ, கிடைத்த உணவின் தரம் என்னவென்றோ அவர் கவலைப்படவில்லை. எது கிடைத்ததோ அதில் திருப்திகொண்டார்!

இவ்விதமாக, அவர் உயிர்பிழைத்திருப்பதற்காக உணவு கொண்டார். சரீரத்தை ஞானத்திற்கும் மோட்சத்திற்கும் உண்டான ஒரு சாதனமாகவே கண்டு ரட்சித்தார். சரீரத்தின்மீது அபிமானம் என்பது இல்லை.

ஆத்ம சாந்தியையே பூஷணமாக அணிந்தவர்க்கு கழுத்தைச் சுற்றி மாலையும் அணிகலன்களும் எதற்காக? உடலுக்குச் சந்தனமும் விபூதியும் பூசவேண்டிய அவசியமும் இல்லை. பிரம்மத்தால் (முழு முதற்பொருள்) நிறைந்தவரல்லரோ  சாயி!

வாழ்க்கையில் குருபக்தியே பிரதானமென்று எடுத்துக்காட்டும் இக் காதை மிகப் புனிதமானது; நமக்கு போதனை அளிப்பது. கவனமாக கேட்பவர்கள் உலக சுக நாட்டங்கள் படிப்படியாக குறைவதை உணர்வார்கள்.

எவ்வளவுக்கெவ்வளவு  கதை கேட்பவர்களின் நம்பிக்கையும் விசுவாசமும் அதிகரிக்கின்றதோ அவ்வளவுக்கவ்வளவு சாயியின் பண்டாரம் (பொக்கிஷம்) அவர்களுக்குத் திறக்கும். குதர்க்கிகளுக்கும் தொந்தரவு கொடுப்பவர்களுக்கும் இந்த லாபம் கிடைக்காது. அன்பார்ந்த, நம்பிக்கையுள்ள பக்தனே இதை அனுபவிக்க முடியும்.

சொல்லப்போகும் இக் காதையை மனமொன்றி கேட்பவர்கள் பிரேமையால்  பூரித்து நயனங்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வடிப்பர்.

பாபாவின் வழிமுறைகள் சாமர்த்தியம் ததும்பியவை அல்லவா! அவருடைய உக்திகளும் இலக்குகளும் எவ்வளவு அற்புதமாக இருந்தன! அவருடைய நெருக்கமான பக்தர்கள் திரும்பத் திரும்ப கிடைத்த அனுபவத்தால் அதன் சாரத்தை அறிந்திருந்தனர்.

சாயியின் சரித்திரத்தை கேட்பது இனிமையான அமுதத்தை பருகுவது போன்றதாகும்! உங்களுடைய மனதை குருவின் பாதங்களில் பயபக்தியுடன் வைத்து, சொல்லப் போகும் கதையை கேளுங்கள்.

இக் காதை ஒரு பல்சுவை விருந்தாகும்; அவசரமாக உன்னைக் கூடாது; ஒவ்வொரு பதார்த்தையும் ரசித்து உண்டால்தான் விருந்தின் புதுமையை  திருப்தியாக அனுபவிக்கலாம்.

இப்பொழுது விறகு வண்டியைப் பற்றிய விவரணம் போதும்! அதைவிட உயர்ந்தது வெள்ளாட்டுக்கடாவின் கதை. கேட்பவர்கள் ஆச்சரியமடைவார்கள்; குரு பக்தர்கள் ஆனந்தமடைவார்கள்.

ஒரு சமயம் ஷிர்டியில் விசேஷமான சம்பவமொன்று நிகழ்ந்தது. பலம் குன்றியதும் சாகும் தருவாயில் இருந்ததுமான வெள்ளாட்டுக்கடா ஒன்றை யாரோ ஒருவர் கொண்டுவந்தார். மக்கள் அதை பார்க்கக் கூடினர்.