valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 10 September 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

'எது நியாயம், எது அநித்தியம் என்னும் விவேகத்தை விடச் சிறந்த, உன்னதமான வழி வேறேதும் பிரம்மத்தை அடைவதற்கு இல்லை.' இது சத்தியமான வேதாந்த வசனம். ஆயினும் அம்மாதிரியான விவேகம் எல்லாருடைய சக்திக்கும் உட்பட்டதா என்ன?

சிரமமான அப்பியாசங்களாலும் கடினமான பயிற்சிகளாலும் உடலை எலும்புக் கூடாகத் தேய்க்க வேண்டும். அதன் பின்னரே குருவின் அருள் என்னும் ஒளியால் விவேகம் மெதுவாக உதயமாகும்.

எப்பொழுது நான்முகன், 'நான் ஈசுவரன், நான் அனைத்தையும் நிர்வகிப்பவன்' என்று நினைத்து தம்முடைய உண்மையான நிலையை மறந்துவிடுகிறாரோ, அப்பொழுதே இப் பிரபஞ்சம் சிருஷ்டி செய்யப்படுகிறது.

ஆனால், 'நானே பிரம்மமாக (முழு முதற் பொருளாக) இருக்கிறேன்' என்ற ஞானம் உதிக்கும்போது, அறிபவர் பிரம்மத்தோடு ஐக்கியமாகி விடுகிறார். அக்கணமே இப் பிரபஞ்சமென்னும் மாயை தூக்கி எறியப்படுகிறது. இங்ஙனம் வேதங்கள் மொழிகின்றன.

எப்பொழுது ஒருவர் பிரம்மத்துடன் ஐக்கியமான உணர்வுடன் 'தன்னை அறிந்து' கொள்கிறாரோ, அப்பொழுது இப்பிரபஞ்சம் பிரம்மமாகிய அக்கினிக்கு ஆஹுதி (படையல் ) ஆகி விடுகிறது. அவரைப் பொறுத்தவரை பிரபஞ்சம் சாம்பலாகிப் போகிறது.

மற்ற ஜீவன்களுக்கும் இதே நிலைதான். அவர்களுடைய பிரமைகள், சூரிய ஒளி வந்த பின் பாம்பு மற்றும் வெள்ளி போன்ற இருட்டு நேர பிரமைகள் விலகுவது போன்று, உடனே விலகிவிடுகின்றன. (கயிறு பாம்பாகவும் கிளிஞ்சல் வெள்ளியாகவும் தெரிவது பிரமை)

கிளிஞ்சல் என்று தெரியாத அறியாமை, வெள்ளியோ என்னும் மாயையைத் தோற்றுவிக்கிறது. வெள்ளியைப் பற்றிய உண்மயான ஞானம், நாம் பார்த்தது கிளிஞ்சல்தான் என அறிந்து கொள்ள வைக்கிறது. அந்தக் கணத்தில் வெள்ளி என்னும் மாயை மறைந்து கிளிஞ்சல் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிகிறது.

அஞ்ஞானத்தால் ஒன்றை மற்றொன்றாக அறியும் நிலைமை இது. ஞான தீபத்தை தேய்த்து துலக்கி சுத்தம் செய்து அஞ்ஞான மலத்தை அகற்றுங்கள். எல்லா பிரமைகளையும் ஒழிந்துவிடும்.

பிறப்பு, இறப்பு, என்னும் பந்தங்கள் இல்லையென்றால் மோக்ஷத்திற்கு நிர்ப்பந்தம் என்ன இருக்கிறது? வேதாந்தத்துக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? இந்தப் பிரபந்தம் (நூல்) எதற்காக?

'நான்  கட்டுண்டிருக்கேன்; விடுதலை பெற வேண்டும்;" என்ற நம்பிக்கையும் உறுதிப்பாடும் இருப்பவரே பிரம்ம ஞானம் தேடுவதற்கு அதிகாரியாவார்; சுத்தமான அஞ்ஞானியோ அல்லது முற்றும் உணர்ந்த ஞானியோ அதிகாரி அல்லர்;

கட்டுகளே இல்லாத போது எதிலிருந்து விடுதலை பெறுவது? இதுவே வாஸ்தவமான நிலைமை. முக்குணங்களின் சம்பந்ததாலேயே பந்தமும் முக்தியும்; இதுவே அனைவருடைய அனுபவமும்.