valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 17 February 2022

 ஷீர்டி சாயி சத்சரிதம்

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

கடந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டதை நிறைவேற்றும் வகையில் ஒரு திருடு பற்றிய ரம்மியமான கதையை விவரிக்கிறேன்; ஆசுவாசமாகக் கேளுங்கள்.

இது வெறும் கதையன்று; ஆத்மானந்த தீர்த்தம். குடித்தால், மேலும் குடிக்க வேண்டுமென்கிற ஆவல் பெருகும். அதைக் தணிக்க இன்னும் ஒரு கதை சொல்லப்படும்!

ரசமான இக் கதையைக் கேட்பவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். சம்சாரக் கடலின் சிரமங்கள் நிவாரணமடையும். சாந்தியும் சந்தோஷமும் நிலவும்.

தன்னுடைய நல்வாழ்வை விரும்பும் பாக்யசாலியான மனிதன், சாயியின் கதைகள் சொல்லப்படும்போது பயபக்தியுடன் கேட்கவேண்டும்.

ஞானிகளின் மஹிமை அளவிடற்கரியது; எவராலும் முழுமையாக விவரிக்க முடியாதது. நிலைமை இவ்வாறிருக்க, என்னுடைய புலமை எந்த மூலைக்குப் போதுமானது? இதை நான் நன்கு அறிந்திருக்கிறேன்.

கதை சொல்பவரின் இந்தச் சிறிய 'நான்' எனும் எண்ணமே சாயிக்குப் போதுமானது. கதை சொல்பவரின் கையை லாவகமாகப் பிடித்துக்கொண்டு பக்தர்களின் நன்மை கருதி தம்முடைய உன்னதமான குணங்களை எழுதவைத்துவிடுகிறார்.

அவர் முழுமுதற்பொருளாகிய நீர்நிலையில் பிரம்ம ரூப முத்துக்களை உன்ன விரும்பும் அன்னப்பறவை. 'நானே அவன்; அவனே நான்' என்ற நிலையில் மூழ்கியிருப்பது மட்டுமல்லாமல் ஒப்பற்ற சாகசங்களும் புரிபவர்.

ஊரும் பெயரும் இல்லாத சாயி அளவுகடந்த மஹிமை வாய்ந்தவர். கடைக்கண்பார்வையால் ஆண்டியையும் அரசனாக்க வல்லவர்!

தத்துவஞானத்தின் அவதாரமான சாயி தாம் பெற்ற இறையனுபவத்தை மக்களுக்கு காட்சிகள் அளிப்பதன் மூலமும் நிகழ்ச்சிகளை உண்டுபண்ணுவதன் மூலமும் அளிக்கிறார். அதே சமயம் எந்த விஷயத்திலும் சம்பந்தப்படாதவர் போல் தோன்றுகிறார்.