valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday, 29 November 2019


                                                                 ஷீர்டி சாயி சத்சரிதம்

                                                           31 . சாயீ சந்நிதியில் முக்தி

ஓம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

கடந்த அத்தியாயத்தில் சப்தசிருங்கி தேவி உபாசகரின் கதையையும் மாதவராவின் நேர்த்திக்கடன் சாயீ எவ்வாறு நிறைவேற்றிவைத்தார் என்ற விவரத்தையும் சொன்னேன்.

குசால் சேட்டுக்கும் ராம்லாலுக்கும் கனவில் தரிசனம் அளித்ததையும் ராம்லாலைத் தம்முடைய மஹாசமாதி நாள்வரை தம்முடன் வைத்துக்கொண்ட விவரத்தையும் சொன்னேன்.

இந்த அத்தியாயம் முன்னதைவிட அபூர்வமானது. கேட்பவர்கள் பயபக்தியுடனும் கவனமாகவும் கேளுங்கள். மானஸஸரோவர் ஏரிக்கு யாத்திரையாக கிளம்பிவந்த சந்நியாசி ஒருவர் திடீரென்று ஷிர்டியில் முக்தியடைந்தார்.

பாலாராம் மாங்கர், தாத்யா சாஹேப் நூல்கர், மேகா, இவர்களுடைய (முக்தி) விருப்பத்தையும் சாயி நிறைவேற்றிவைத்தார். இவர்களாவது மனிதர்கள்; பயங்கர மிருகமான ஒரு புலிக்கும் பாபா தமது சந்நிதியிலேயே முக்தி அளித்தது அற்புதமான செயல் அன்றோ!

இவையெல்லாம் விரிவான காதைகள். சொல்லப்புகுந்தால் காவியம் மிகப் பெரியதாகிவிடும். ஆகவே, சுருக்கமாக சாரத்தை மட்டும் சொல்கிறேன். பக்தர்களுக்கு நன்மையளிக்கும்.

மரணத்தருவாயில் உதிக்கும் எண்ணங்கள் என்னவோ, அவற்றுக்கேற்றவாறே, பிராணிகளின் அடுத்த ஜென்மம் அமைகிறது. பயத்தால் பூச்சிகள் வண்டுகளாகின்றன. மான்குட்டியின்மீது ஏற்பட்ட பிரியத்தால் ஜடபரதர் அடுத்த பிறவியில் மானாகப் பிறந்தார்!

உயிர் பிரியும் சமயத்தில் மனக்கண்ணால் எந்த உருவத்தைக் காண்கிறோமோ அதே உருவத்தில் அடுத்த பிறவி அமைகிறது. இறைவனுடைய மலரடிகளை நினைப்பவர்க்கு அடுத்த பிறவியே இல்லாமற்போகிறது.