valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 27 December 2018

ஷீர்டி சாயி சத்சரிதம் 

தம்முடைய பாதங்களைப் பிடித்துவிட்டுக்கொண்டிருந்த அவளுடைய கைகளைத் தம் கைகளால் பிடித்துவிட்டார். (பாபா), இறைவனும் பக்தையும் ஒருவருக்கொருவர் அன்புடன் செய்துகொண்டிருந்த சேவையைக் கண்ட சாமா கேலி செய்ய ஆரம்பித்தார். 

"ஆஹா, ஆஹா, பாபா! அற்புதம், அற்புதம்! கண்கொள்ளாக் காட்சி! இந்தப் பரஸ்பர பாவத்தைக் கண்டு நாங்கள் திகைப்படைகிறோம்!"

அவ்வம்மையாருடைய பக்திபூர்வமான சேவையால் மனம் குளிர்ந்த பாபா அவரிடம் மெதுவாகவும் மென்மையாகவும் கூறினார், "ராஜாராம், ராஜாராம் என்று எந்நேரமும் சொல்லிக்கொண்டே இருங்கள்.-

"தாயே! இவ்விதமாக சொல்லிக்கொண்டேயிருந்தால், உம்முடைய வாழ்க்கை நிறைவு பெறும்; உம்முடைய மனம் சாந்தமடையும்; அபரிதமான நன்மைகள் விளையும்".

எவ்வளவு அற்புதமான வார்த்தைகள் இவை! இந்த உபதேசத்தின் மூலமாக பக்தைக்கு தெய்வீகச் சக்தியை பாய்ச்சியது போல இவ்வார்த்தைகள் அம்மையாரின் இதயத்தினுள்ளே புகுந்தன. 

அன்பும் அடக்கமும் உள்ள பக்தர்களை பாலித்து அவர்களுடைய மனோரதங்களையும் பூர்த்திசெய்து ஆன்மீக முன்னேற்றத்திற்கும் அருள் பொழியும் கிருபாசமுத்திரம் அல்லரோ ஸ்ரீசமர்த்த சாயிநாதர்!

நான் மிகப்பணிவாகவும் பிரீதியுடனும் ஒரு வேண்டுகோளை வாசகர்கள் முன் அவர்களுடைய நன்மை கருதியே வைக்க விரும்புகிறேன். 

வெல்லக்கட்டியின் இனிமையை விரும்பும் எறும்பு, தன மண்டையை உடைத்துக் கொள்வதாயினும் சரி, அதை விடவே விடாது. சாயி பாதங்களில் உங்களுடைய சரணாகதியும் அதைப் போன்றே இருக்கவேண்டும். கிருபை செய்து சாயி உங்களை பாதுகாப்பார். 

குருவும் பக்தனும் வேறல்லர்; வெவ்வேறாகத் தெரிந்தாலும் இருவரும் ஒருவரே. பலத்தால் அவர்களைப் பிரிக்க முயல்பவன் கடைசியில் கர்வபங்க மடைவான். 

ஒருவரில்லாமல் மற்றொருவரைப் பார்க்க நம்மால் முடிந்தால், குரு குறையுள்ளவர்; சிஷ்யனும் குறையுள்ளவன். உத்தமமான குருவால் பயிற்சி அளிக்கப்பட்ட சிஷ்யன், குரு-சிஷ்ய வேற்றுமையைப்பற்றி நினைக்கவே மாட்டான். 

குரு ஒரு கிராமத்திலும் சிஷ்யன் வேறொரு கிராமத்திலும் வாசம் செய்வதால் அவர்களிருவரும் தனித்தனி என்று நினைப்பவன் உண்மையை அறியாதவன். 

அவர்கள் இருவேறு மனிதர்களே இல்லையென்றால், தனித்தனியாக எப்படி இருக்க முடியும்? ஒருவரின்றி மற்றவர் இருக்க முடியாது. அவர்களுடைய ஒருமை இவ்வாறானதே. 

குருவுக்கும் பக்தனுக்கும் இருமை ஏதும் இல்லை. அவர்கள் இருவரும் எப்பொழுதும் இணைந்தே இருக்கிறார்கள் (ஆன்மீக மட்டத்தில்). பக்தன் குருவின் பாதங்களில் தலைசாய்ப்பது உடலளவில் செய்யப்படும் உபசாரமே.