valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 30 July 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

இதற்கு மாறாக, ஞானம் பெறுவதற்காக ஒரு குருவை வேண்டுமானால் அமர்த்தலாம். தக்ஷிணை கொடுத்தே செல்வம் கரையுமே தவிர, நல்லுபதேசம் என்ன கிடைத்ததென்று பார்த்தால், கடைசியில் பூஜ்யம் ஒன்றே தெரியும். மிஞ்சுவது தன்னிரக்கம் ஒன்றே.-

பாஷாண்டியாகவே வளர்ந்து, யோக்கியரைப் போலவும் நாணயமானவரைப் போலவும் நடித்து, மனிதசக்திக்கு மீறிய ரகசிய ஞானத்தைப் பற்றி டம்பம் அடித்துக்கொள்பவரால் சிஷ்யனுக்கு என்ன அளிக்க முடியும்?

வெளிப்பார்வைக்கு மடி ஆசாரங்களை கடைப்பிடிப்பவர். ஆனால், அகமுதிர்ச்சி இல்லாதவர்; சுயமாக அனுபவம் பெறாதவர்; இவருடைய பாடசாலை உபயோகமற்றது.-

எங்கு வார்த்தை ஜாலமும் புத்தக அறிவும் மிகுந்திருக்கிறதோ, எவர் தம்முடைய பெருமையில் தாமே மகிழ்ந்துபோகிறாரோ, எங்கு பிரம்ம ஞான அனுபவம் இல்லையோ, அங்கிருந்து சிஷ்யன் என்ன லாபம் பெறுவான்?-

எவருடைய போதனை சிஷ்யனின் இதயத்தைத் தொடவில்லையோ, எவருடைய சாட்சியும் நிரூபணமும் சிஷ்யனின் மனத்தில் உறுதியான நம்பிக்கையைத் தோற்றுவிக்க முடியவில்லையோ, அவருடைய பாடத்தால் யாருக்கு என்ன பயன்? அது உள்ளீடற்ற வெறும் பிதற்றலன்றோ!-

என் குரு, தியான முறையில் என்னை உபாசனை செய்யவைத்து எனக்கு உண்மையான ஞானக்கருவூலத்தைக் காட்டினார். நான் அதைத் தேடி அலையவேண்டிய அவசியமே ஏற்படவில்லை. மற்றப் பொருளை அறியவும் நான் முயற்சி ஏதும் எடுக்கவில்லை.-

உட்பொருளும் மறைபொருளும் தம்மைத்தாமே வெளிப்படுத்திக்கொண்டன. பிரயாசை (முயற்சி) ஏதும் செய்யாமலேயே அவை என் கைக்கு வந்துசேர்ந்தன. இதுவே குருவருள் செய்யும் அற்புதம்! தேடல்கள் அனைத்தும் அங்கேயே அப்பொழுதே ஒரு முடிவுக்கு வந்தன!

குருராயர் என்னைத் தலைகீழாகத் தொங்கவிட்டபோதே, நான் எங்கனம் ஆனந்தமடைந்தேன் என்பதைப் புரிந்துகொள்ளும் சக்தி அவருக்கே உண்டு."
(உருவகக் கதை இங்கு முற்றும்)

ஞானியரின் நடைமுறை, உலகியல் நடைமுறைக்கு எதிராகத்தான் இருக்கும். அவர்களுடைய ஞானம் அனுபவத்தால் விளைந்தது. இங்கு நிஷ்டை ஒன்றே பிரமாணம்; குருவின் கிருபை ஒன்றே  சாதனம்.

சடங்குச் செல்வர்களுக்கு விதிகளும் தடைகளும் கட்டுமானங்களும்; பண்டிதர்களுக்கு வித்யா கர்வம்; யோகிகளுக்கோ டம்பமே படுகுழி. ஆகவே, விசுவாசத்தை விடுத்தால் வேறெதுவும் இங்கே செல்லுபடியாகாது.

பண்டிதர்கள் கல்விச் செருக்கால் குருடர்கள் ஆகின்றனர். அவர்கள் அகங்காரத்தின் வடிவமே ஆவர். சாதுவோ பண்டிதர்களைக் கண்டால் ஓட்டம் பிடிக்கிறார்; அவர்களுடைய சங்கத்தை விரும்புவதில்லை.