valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 9 March 2023

 ஷீர்டி சாயி சத்சரிதம்


"தேரோட்டுபவன் திறமைசாலியாக இருக்கும்போது தேரில் அமர்ந்திருப்பவர் ஏன் சஞ்சலப்படவேண்டும்? உலக விவகாரங்களை அமைதியான மனத்துடன் நடத்த வேண்டியதுதானே!-

"தேகத்தின் நடத்தையை மேற்பார்வையை செய்யவேண்டியது புத்தி செய்யவேண்டிய வேலைதான். மனம் இதற்குப் பழகிவிட்டால் எல்லா முயற்சிகளும் விவகாரங்களும் நற்பலன்களை அளிக்கும். -

"கேள்வி, தொடுமுணர்வு, பார்வை போன்ற விஷயங்களை (ஐம்புல ருசிகளை) இந்திரியங்கள் நாடும்போது வீணாக்கச் சக்தியிழப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு படியிலும், விழுந்துவிடுவோமோ என்ற பயமும் ஏற்படுகிறது. -

"ஐம்புலன்களால் தேடும் சுகங்கள் அனைத்தும் கடைசியில் சுகமின்மையில் கொண்டுபோய்ச் சேர்க்கின்றன. அஞ்ஞானம் பரம துக்கம்!-

"செவி இனிமையில் (வேடன் ஊதும் குழல்) மயங்கும் மான், கடைசியில் தன் உயிரை இழக்கிறது. யானை தொடுமுணர்வு (சிற்றின்ப) சுகத்தில் மயங்கி மாட்டிக்கொண்டு அங்குசத்தின் குத்தலை அனுபவிக்கிறது. -

"ஒளியைக் கண்டு மயங்கும் விட்டில் பூச்சி நெருப்பில் எரிந்துபோகிறது. நாக்கின் சுவைக்கு அடிமையாகும் மீன் உடனே உயிரை இழக்கிறது. -

"வாசனையால் கவர்ந்திழுக்கப்படும் வந்து தாமரையினுள்ளே மாட்டிக்கொள்கிறது. ஒவ்வொரு புலனுமே இவ்வாறு பயங்கரமான விளைவை உண்டாக்கும்போது ஐம்புலன்களும் ஒன்று சேர்ந்தால் எப்படிப்பட்ட பயங்கரமான விளைவுகளை உண்டாக்கும்?-

"மேற்கூறியவையோ மிருகங்களும் பட்சிகளும் நீர்வாழ்ப் பிராணிகளுமே. இவற்றின் துக்கநிலையைத் திரும்பத் திரும்ப பார்த்தபிறகும் விவேகமுள்ள மனிதன் ஐம்புலன்களின் பின்னால் ஓட வேண்டுமா! அய்யகோ! இதுவன்றி வேறு எது அஞ்ஞானம்?-

"அஞ்ஞானத்தை நாசம் செய்து புலனின்பங்களுக்குக் கடுமுகம் காட்டினால், குழப்பமடைந்த மனம் மாயையிலிருந்து விடுபடும். ஜீவன் ஞான சொரூபத்தை நோக்கித் திரும்பும்; அளவிடமுடியாத சுகம் கிடைக்கும். -

"இதயத்தால் ஹரி-குரு சிந்தனையைச் செய்யும். காதுகளால் அவருடைய சரித்திரத்தை கேளும். மனத்தால் இடைவிடாது அவருடைய உருவத்தை தியானம் செய்யும். நாக்கால் நாமஸ்மரணம் செய்யும்.-

"ஹரி-குருவின் கிராமத்திற்குக் கால்களால் நடந்து செல்லும். அர்ச்சனை செய்யப்பட்ட மலர்களின் நறுமணத்தை மூக்கால் நுகர்ந்து பாரும். இரு கைகளையும் கூப்பி அவருடைய பாதங்களுக்கு வந்தனம் செய்யும். கண்களால் அவரை தரிசனம் செய்யும். -

"இவ்விதமாக ஐம்புலன்களின் நாட்டங்களும் பிரீதியுடன் அவரை நோக்கிச் செலுத்தப்படும்போது பக்தர்களின் நிலை பெரும்பேறு பெறுகிறது. இது கடவுள் - பக்தி இல்லையெனில் வேறு எது கடவுள்-பக்தி!-