ஷீர்டி சாயி சத்சரிதம்
அவதார காரியம் பூரணமானவுடனே அவருடைய ஆகிருதி நம் கண்பார்வையிலிருந்து மறைந்துவிட்டது. ஆயினும், 'சாயி சொல்லோவியமான' இந்தக் காவியத்தின் ஒவ்வொரு பதமும் அவரை நினைவுக்குக் கொண்டுவரும்.
மேலும், கதைகளைக் கேட்பதால் மனத்திற்கு ஒருமுனைப்பட்ட நிலை லாபமாகும். அதிலிருந்து பிறக்கும் சாந்தி அபூர்வமானது. அதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
கதைகேட்கும் நீங்கள் சர்வ ஞானம் படைத்தவர்கள்; உங்களுடைய முன்னிலையில் நான் ஓர் அற்ப ஞானமுடையவன். அவ்வாறு இருந்தபோதிலும், இது சொல்லால் சாயிக்குச் செய்யப்பட்ட யக்ஞம் (யாகம்). ஆகவே, நன்றியுணர்வுடனும் பயபக்தியுடனும் கேளுங்கள்.
இந்த வாக்கு யக்ஞம் மங்களங்களை விளைவிக்கக்கூடியது. என்போன்ற அஞ்ஞானியால் செய்யப்படும் இந்த யாகத்தை, 'செய்வது அறிந்து செய்யும்' திறமை படைத்த சாயி வெற்றிகரமாக நிறைவு செய்வார். அனைத்துமறிந்த கதைகேட்பவர்கள் இதையும் அறிவர்.
எவர் முதலில் சாயி பாதங்களுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, ஒருமுகப்பட்ட மனத்துடன் இந்த மகா மங்களமானதும் பரம பாவனமானதுமான (ஒப்பில்லாத தூய்மைளிப்பதுமான) கதையைச் செவிமடுக்கிறாரோ,-
எந்த பக்தர் தமக்கு நன்மைகள் ஏற்படவேண்டுமென்ற ஆர்வத்தால் உந்தப்பட்டு பக்திபாவத்துடனும் ஒருமுனைப்பட்ட மனத்துடனும் இந்தக் கதாமிருதத்தைச் சுவைக்கிறாரோ, அவருடைய வழிபாடு என்றுமே வியர்த்தம் ஆகாது.
சாயி அவருடைய வேண்டுகோள்களை நிறைவேற்றுகிறார். உலகியல் தேவைகளையும் ஆன்மீகத் தேவைகளையும் பூர்த்திசெய்கிறார். அவர் செய்யும் வழிபாடு என்றுமே வீண்போவதில்லை. கடைசியில் அவர் எல்லாப் பேறுகளையும் பெற்றவர் ஆகிறார்.
நாற்பத்துநான்கு அத்தியாயங்களின் முடிவில், சாயியின் நிர்யாணம் (கடைசிப்பயணம்) பரிசீலனை செய்யப்பட்ட பிறகும், இந்தக் காவியம் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே போகிறது. இந்த அற்புதத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
கடந்த அத்தியாயத்தில் சாயியின் நிர்யாணம் கிரமமாக நிறைவு செய்யப்பட்டது. ஆயினும், சாயிலீலையும் காதின் பூச்சியும் ஒருகணமும் ஓய்வு அறியமாட்டா.
ஆழ்ந்து பார்த்தால், இதில் வியப்பு ஏதுமில்லை; நிர்யாணம் (பூதவுடலைத் துறப்பது) என்பது உடலுக்கு மட்டும்தான். இந்த சாயி ஜனனமரணங்களுக்கு அப்பாற்பட்டவர்; முன்பிருந்தது போலத் தோன்றாநிலையில் இருக்கிறார்.
தேகம் மறைந்துவிட்டது; உருவமும் மறைந்துவிட்டது. ஆனால், அவர் தோன்றாநிலையில் முன்பு எப்படி இருந்தாரோ அப்படியே இப்பொழுதும் இருக்கிறார்.