valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 14 March 2024

 ஷீர்டி சாயி சத்சரிதம்


இந்த அத்தியாயத்தில், தம்முடைய முடிவு நெருங்கிய காலத்தில் பாபா எவ்வாறு ஒரு பிராமணரை ராமாயணம் படிக்கச் செவிமடுத்தார் என்ற விவரமும்,-

சமாதி அமைய வேண்டிய இடம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட விவரமும், நினைவுச்சின்னமாக பாபா பாதுகாத்துவந்த செங்கல் எதிர்பாராதவிதமாகக் கீழே விழுந்து உடைந்த விவரமும் சொல்லப்படும். இவையனைத்தையும் கவனமாகக் கேளுங்கள்.

அதுபோலவே, முன்பொரு சமயம் பாபா பிரம்மாண்டத்தில் தம்முடைய பிராணனை மூன்று நாள்கள் வைத்தபோது (நிர்விகல்ப சமாதி நிலை), அது சமாதி நிலை இல்லை என்றும், பாபா இறந்துவிட்டார் என்றும் ஷீர்டி மக்கள் உறுதிபட நினைத்துப்பற்றியும் கேளுங்கள்.

உத்தரகிரியைகள் (இறுதிச் சடங்குகள்) செய்வதற்குத் தயார் செய்துகொண்டிருந்தபோது பாபா திடீரென்று உயிர்தெழுந்ததைக் கண்டு மக்கள் திடுக்கிட்ட விவரத்தையும் கேளுங்கள்.

ஆயினும், இது யாரும் கேட்க விரும்பாத நிர்யாணக் கதை. பாபா தேஹத்தை விடுத்தது பற்றிய சங்கதிகள், கேட்பவர்களுக்கு மனவேதனையையும் சிரமத்தையும் அளிக்கும்.

இருந்தபோதிலும், சாதுக்கள் மற்றும் ஞானிகளுடைய முக்தி சம்பந்தமான கதைகள், கேட்பவர்களையும் சொல்லுபவரையும் புனிதப்படுத்தும். ஆகவே, விஸ்தாரத்திற்கு (விரிவுக்கு) பயந்து, பகுதி பகுதியாக முடிந்தவரை கேட்டு சமாதானமடையுங்கள்.

பூதவுடலை உகுத்ததால், எளிதில் அடையமுடியாததும் மறுபிறப்பில்லாததும் என்றும் அழியாததுமான பேரின்ப நிலையை பாபா அடைந்தார்.

தேஹத்தை தரித்தபோது அவர் உருவ நிலையில் இருந்தார். தேஹத்தைத் தியாகம் செய்ததால், அருவ நிலைக்கு மாறிவிட்டார். ஓர் உடலில் எடுத்த அவதாரம் முடிந்தது; எல்லா உடல்களிலும் வியாபித்திருக்கும் நிலைக்குத் திரும்பிவிட்டார்.

ஓரிடத்தில் இருந்த நிலைமையை முடித்துக்கொண்டு எங்கும் நிறைந்த நிலைமைக்குத் திரும்பினார். ஆதியந்தமில்லாத முழுமுதற்பொருளுடன் இரண்டறக் கலந்துவிட்டார்.

எல்லாருடைய வாழ்க்கையையும் சாயியை மையமாக வைத்தே சுழன்றது; இல்லை; சாயியே அவர்கள் எல்லாருடைய பிராணன் என்று சொல்வதே பொருத்தம். சாயி இல்லாது, ஷீர்டி கிராம மக்கள் ஹீனர்களாகவும் தீனர்களாகவும் ஆயினர்.

தேகம் அசைவின்ரிச் சில்லிட்டுப்போக ஆரம்பித்தபோது ஒரு பெரும் ஓலம் எழுந்தது. பாலர்களிலிருந்து வயசாதிகர்கள் வரை அனைவரும் தங்களுடைய வாழ்க்கைக்கே முடிவு வந்துவிட்டது போலப் பெருந்துயரத்தில் மூழ்கினர்.

ஜுரம் போன்ற உடல் உபாதிகள் உலகியல் வாழ்வில் கட்டுண்டவர்களைத்தான் பிடிக்கும். எக்காலத்திலும் யோகிகளை நெருங்கி அவமரியாதை செய்வதில்லை.