valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Saturday 15 June 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபா அன்புடன் செல்லமாக கொஞ்சும் போதிலும் அமனியின் மனம் ரூபாயில்தான் இருக்கும். "பாபா கொடு, சீக்கிரம் கொடு!" என்று அவருடைய பாக்கெட்டில் கண்வைத்தவாறே கேட்பாள்.

அமனியாவது ஒரு சிறு குழந்தை! ஆனால், பெரியவர்களுக்கும் கனவான்களுக்குமே இப் பேராசை இருக்கிறது. காசுக்காகவே சுயநலமாக அனைவரும் அலைகின்றனர். ஆன்மீக வாழ்வில் நாட்டம் கொண்டவர் எவரோ ஒருவரே.

அமனி பாபாவின் மடியில் அமர்ந்திருப்பாள். தாயாரோ சற்று தூரத்தில் கிராதிக்கு அப்பால் நின்றுகொண்டு 'கொடுக்கும்வரை அவரை விடாதே' என்று விளங்கும்படி சைகை செய்வாள்.

"என்னைக் கொள்ளையடிக்க வந்த உதவாக்கரையே, நான் உன் அப்பனுக்கு கடன் பட்டிருக்கிறேனா என்ன? என்னைப் பிடுங்கியெடுக்கிறாயே " என்று பாபா கோபத்துடன் வினவுவார்.

ஆனால், இந்த கோபம் பொய்க்கோபமே. இதயத்திலோ அன்பின் அலைகள் பொங்கின. பாக்கெட்டில் கையை விட்டு ஒரு ரூபாயை எடுப்பார்.

ரூபாயை அந்தச் சிறிய டப்பாவில் இட்டு, டப்பென்று மூடுவார். டப்பா கையில் கிடைத்தவுடனே அமனி வீடு நோக்கிப் பாய்வாள்!

இது காலை உணவு நேரத்தின் நடப்பு. இதுபோலவே லெண்டித் தோட்டத்திற்குப் போகும்போதும் அமனியை அன்புடன் கடிந்துவிட்டு, மேலும் ஒரு ரூபாய் கொடுப்பார்.

இவ்வாறாக, அவர் தினமும் அமனிக்கு இரண்டு ரூபாயும் ஜமலிக்கு   ஆறு ரூபாயும் தாதா கேள்கருக்கு ஐந்து ரூபாயும் பாக்கியாவுக்கும் சுந்தரிக்கும் தலா இரண்டு ரூபாயும் கொடுப்பார்.

தினமும் பத்திலிருந்து பதினைந்து ரூபாய்வரை தாத்யாவுக்கும் பதினைந்திலிருந்து ஐம்பது ரூபாய் வரை பக்கீர் பாபாவுக்கும் எட்டு ரூபாய் ஏழை எளியவர்களுக்கும் தவறாது கொடுத்தார்.

இவ்வாறான தர்ம ஒழுக்கத்தை பற்றிக் கேள்வியுற்ற மதராஸ் கோஷ்டி, பாபாவிடமிருந்து நாமும் பணம் பண்ணலாமே என்று சுயநலமாக சிந்தித்தது இயற்கையே. பாபாவின் சந்நிதியில் தினமும் தவறாது நால்வரும் பஜனை செய்தனர்.

வெளிப்பார்வைக்கு பஜனை இனிமையாக இருந்தது. அந்தரங்கத்தில் அவர்களை பணத்தாசை பிடித்து ஆட்டியது. மேலும் மேலும் பாபா பணம் தருவார் என்ற நம்பிக்கையில் நால்வரும் ஷீர்டி வாசத்தை நீடித்தனர்.

நால்வரில் மூவர் பேராசை பிடித்தவர்கள்; பாபாவிடம் பணம் கறக்கவேண்டும் என்றே விரும்பினார். ஒருவர் மட்டும் (மனைவி) நேர்மையானவர். சாயியின் மீது தூயபக்தியுடனும் அன்புடனும் பஜனை பாடினார்.

அவருடைய சாயி பக்தியையும் பிரேமையையும், மேகத்தைக் கண்டு மகிழ்ந்து நடனமாடும் மயிலுக்கும் சந்திரனைக் கண்டு மகிழும் சகோர பட்சிக்கும் ஒப்பிடலாம்.

கிருபா மூர்த்தியான சாயி அவ்வம்மையாரின் பக்தியை மெச்சி, ஒருநாள் மதிய ஆரத்தியின்போது அவருக்கு ஸ்ரீராமனாகக் காட்சியளித்தார்.