valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 26 April 2019

ஷீர்டி சாயி சத்சரிதம்

"போம், போய் அந்தப் பூஜையை செய்துவிட்டுத் திரும்பிவாரும்". மேகா பதிலுரைத்தார். "பாபா, கதவு மூடியிருந்தது. நான் திறக்க முயன்றேன்; முடியவில்லை. ஆகவே நான் பூஜை செய்யாமலேயே இங்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. "

பாபா கூறினார், "போம், மறுபடியும் சென்று பாரும். கதவை இப்பொழுது திறக்க முடியும்." மேகா ஒருகணமும் தாமதியாது கோயிலுக்கு ஓடினார். பாபா கூறிய வார்த்தைகள் உண்மையென்பதை அனுபவத்தில் கண்டார்.

மேகா கண்டோபா பூஜையை முடித்தார். தம்முடைய மனக்குறையும் தீர்ந்தது கண்டார். இதன் பின்னரே பாபா மேகாவை தமக்கு பூஜை செய்ய அனுமதித்தார்.

மேகா பயபக்தியுடன் சந்தனம், புஷ்பம் ஆகிய பூஜை திரவியங்களால் அஷ்டோபசார பூஜை செய்தார். மாலையையும் பழங்களையும், தம் சக்திக்கேற்றவாறு தக்ஷிணையையும் சமர்ப்பித்தார்.

ஒரு மகர சங்கராந்தி தினத்தன்று (பொங்கல் திருநாள்) கோதாவரி நதியில் இருந்து நீர் கொணர்ந்து, பாபாவுக்கு எண்ணெய் தேய்த்து, சீயக்காயும் வாசனைத் திரவியங்கள் கலந்த சந்தனமும் தேய்த்து, உடம்பு முழுவதும் குளிப்பாட்ட விரும்பினார் மேகா.

பாபாவை அனுமதி கேட்டுப் பிடுங்கி எடுத்தார். கடைசியில் பாபா சொன்னார், "சரி உம் இஷ்டப்படி செய்யும்". மேகா நீர் கொண்டுவரக் குடத்துடன் சென்றார்.

சூரிய உதயத்திற்கு முன்பே, காலிக் குடத்துடன், செருப்பு அணியாது குடையும் இல்லாது கோமதி (கோதாவரி) நதியில் இருந்து நீர் கொண்டுவர மேகா கிளம்பினார்.

போகவரப் பதினாறு மைல்கள் இருந்த தூரத்தைப் பற்றியோ, சென்று வருவதில் இருந்த கடுமையான சிரமத்தைப் பற்றியோ, கஷ்டங்களை பற்றியோ எந்த எண்ணமும் அவருடைய கனவிலும் எழவில்லை.

இவற்றைப்பற்றி  அவர் கவலைப்படவில்லை. அனுமதி கிடைத்த உடனே அவர் கிளம்பிவிட்டார். திடமான தீர்மானமே எடுத்த காரியத்தில் உற்சாகத்தை ஊட்டுகின்றதோ!

சாயியை கங்கை நீரால் குளிப்பாட்ட வேண்டுமென்ற விருப்பம் எழுந்தபின், சிரமம் என்றால் என்ன? அசதி என்றால் என்ன? திடமான சிரத்தையே இங்கே பிரமாணம் அன்றோ!

இவ்விதமாக கோதாவரி நீர் கொண்டுவரப்பட்டு, தாமிரத் தவலையில் நிரப்பப்பட்டது. எழுந்துவந்து குளிப்பதற்கு தயாராகும்படி பாபாவை மேகா மறுபடியும் மறுபடியும் வற்புறுத்தினார். ஆனால், பாபா இதை ஏற்றுக்கொள்பவராக இல்லை.

மதிய ஆரத்தி முடிந்துவிட்டிருந்தது. பக்தர்கள் அவரவர் இல்லங்களுக்குச் சென்றுவிட்டனர். "குளிப்பதற்கு சகலமான பொருள்களும் தயாராக இருக்கின்றன. சாயங்கால நேரம் நெருங்குகிறது " என்று மேகா சொன்னார்.

லீலைக்காகவே அவதாரம் செய்த பாபா, மேகாவின் விடாமுயற்சியை கண்டு மேகாவின் கையைத் தம்முடைய கையால் பிடித்துக்கொண்டு சொன்னார்.

"ஓய்! எனக்கு இந்த கங்கா ஸ்நானம் வேண்டா. நீர் என்ன இவ்வளவு மதியீனமாக இருக்கிறீர் ! என்னைப் போன்ற பக்கீருக்கு கங்கை நீர் எதற்காக?"