valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 23 September 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம் 


"எது எப்படியிருப்பினும், நான் ஷிர்டிக்குச் சென்று அவரைப் பேட்டி காண்பேன். ஆனால், பாதங்களுக்கு வந்தனம் செய்யமாட்டேன்; தக்ஷிணை கொடுக்கவும் மாட்டேன்".

எவரெவரெல்லாம் மனத்தில் இந்தக் குதர்க்க வாதத்தை திடப்படுத்திக்கொண்டு கிளம்பினாரோ, அவரெவரெல்லாம் தரிசனயோகம் கிடைத்தபின் சாயியை சரணடைந்தார்கள்.

எவரெவரெல்லாம் சாயியைக் கண்ணால் கண்டார்களோ, அவரவரெல்லாம் தங்களுடைய நிலையில் உறுதியாக நின்றனர். மறுபடியும் சந்தேகங்கொண்டு திரும்பிப் பார்க்கவே இல்லை. சாயிபாதங்களில் மூழ்கிவிட்டனர்!

அவர்கள் தீர்மானம் செய்துகொண்டு வந்ததை அறவே மறந்து குற்றவுணர்ச்சியால் பாதிக்கப்பட்டு சாயிபாதங்களை வணங்கினர்.

'தன்னுடைய மார்க்கமே சிறந்தது' என்னும் அளவுக்குமீறிய மதாபிமானம் நல்லடக்கம் செய்யப்பட்ட கதை இந்த அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது. பயபக்தியுடன் கேளுங்கள்; ஜீவனுக்கு அத்தியந்த சுகம் கிடைக்கும்.

அதுபோலவே, பாலா நெவாஸ்கர் எவ்வாறு ஒரு நல்ல பாம்பை பாபா வாகவே கருதிப் ப்ரீதியுடன் நடந்துகொண்டார் என்பதுபற்றியும் கேளுங்கள். மேலும், இந்த அத்தியாயம் உதீயின் சூக்குமமான சக்தியைப்பற்றியும் பேசுகிறது.

கதை கேட்பவர்களே! எனக்கு கிருபை செய்யுங்கள். நான் கேவலம் சாயியின் ஆக்கினைக்கு கட்டுப்பட்ட ஓர் அடிமை. அவருடைய ஆணையை பயபக்தியுடன் நிறைவேற்றத்தான் எனக்குத் தெரியும். அதிலிருந்து எழுந்ததே இச் சரித்திரத்தின் ஒவ்வொரு எழுத்தும்.

அவருடைய பாதங்களைப் பார்த்துக்கொண்டே அவற்றிலிருந்து அலையலையாக எழும்பும் கவிதைகளை அவருடைய பவித்திரமான சரித்திரம் என்னும் குடத்தில் மேலும் மேலும் நிரப்பும் செயலில் ஈடுபட்டிருக்கிறேன்.

நாமெல்லாம் தாய் ஆமையின் அன்பார்ந்த பார்வையொன்றாலேயே போஷாக்கு பெரும் ஆமைக்குட்டிகள். நமக்கு எப்போதும் பசியில்லை; தாகமுமில்லை; களைப்புமில்லை. எந்நேரமும் திருப்தியுள்ளவர்களாகவே இருக்கிறோம்.

கடைக்கண் பார்வையொன்றே போதும்; நமக்குச் சோறும் வேண்டா, நீரும் வேண்ட. அன்பான பார்வையே நம் பசியையும் தாகத்தையும் தணித்துவிடுகிறது. அதை எப்படித் தகுந்த அளவிற்குப் புகழமுடியும்?

கிருபாசமுத்திரமான சாயிராயரே நம்முடைய காட்சி அனைத்தும். இந்நிலையில், காட்சிப்பொருள், காண்பவன், காட்சி - இந்த முக்கோண பேதம் மறைந்து, மூன்றும் ஒன்றாகிவிடுகின்றன.

அதுபோலவே, நாம் சருமத்திலும் தொடுவுணர்ச்சியிலும் சாயியின் பிரகாசத்தைக் காண்கிறோம். மூக்கிலும் வாசனையிலும் அவ்வாறே சாயி உறைகிறார்.

காதில் ஓர் ஒலி விழும்போது சாயியின் உருவம் உடனே வெளிப்படுகிறது. கேள்வி, கேட்பவர், கேட்கும் செயல் - இம்மூன்றும் ஒன்றாகிவிடுகின்றன.